Skip to main content

சட்ட மன்றத்துக்குள் குட்கா விவகாரம்: இறுதி விசாரணை 2-ஆம் தேதிக்கு தள்ளிவைப்பு!

Published on 09/11/2020 | Edited on 10/11/2020

 

kutka case in highcourt

 

சட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரத்தில், உரிமைக்குழு அனுப்பிய இரண்டாவது நோட்டீஸை எதிர்த்து, ஸ்டாலின் உள்ளிட்ட 18 திமுக எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்த வழக்குகளின் இறுதி விசாரணையை, சென்னை உயர் நீதிமன்றம் டிசம்பர் 2 -ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.

கடந்த 2017-ஆம் ஆண்டு, சட்டப் பேரவைக்குள் குட்கா கொண்டு வந்ததாக, பேரவை உரிமைக்குழு அனுப்பிய முதல் நோட்டீஸை எதிர்த்து, எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட 21 திமுக எம்.எல்.ஏ.க்கள் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, நோட்டீஸில் அடிப்படைத் தவறுகள் உள்ளதாகக் கூறி, அதை ரத்து செய்தது.

இதையடுத்து, மீண்டும் கூடிய உரிமைக்குழு, இரண்டாவது முறையாக அனுப்பிய நோட்டீஸை எதிர்த்து, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 18 திமுக எம்.எல்.ஏ-க்களும் வழக்குத் தொடர்ந்தனர். 

இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நோட்டீஸுக்கு இடைக்காலத் தடை விதித்தும், வழக்கு குறித்து பேரவைச் செயலாளர், உரிமைக்குழு மற்றும் அதன் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டார்.

இந்நிலையில், இரண்டாவது நோட்டீஸை எதிர்த்து, திமுகவிலிருந்து நீக்கப்பட்ட கு.க.செல்வம் தொடர்ந்த வழக்கும், இடைக்காலத் தடையை நீக்கக் கோரி  சட்டமன்ற செயலாளர், உரிமைக்குழு சார்பில் தொடர்ந்த வழக்குகளும், திமுக எம்.எல்.ஏ-க்கள் தொடர்ந்த வழக்குகளும் விசாரணைக்கு வந்தன. அப்போது கு.க.செல்வத்திற்கு எதிரான நோட்டீஸுக்கும், நீதிபதி இடைக்காலத்தடை விதித்து உத்தரவிட்டார்.

 

cnc


மேலும், இரண்டாவது நோட்டீஸை எதிர்த்த வழக்குகளிலும், அவற்றில் விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரிய வழக்குகளின் இறுதி விசாரணையை, டிசம்பர் 2-ஆம் தேதிக்கு, நீதிபதி புஷ்பா சத்யநாராயணா தள்ளிவைத்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்