புதுக்கோட்டை மாவட்டம்நெடுவாசல்நாடியம்மன்கோயில் திருவிழா ஆண்டு தோறும் நடைபெற்றாலும் தென்னை மற்றும் பனை குருத்து ஓலைகள், வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட குருத்தோலை சப்பர படத்தேர்த் திருவிழா 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்துவது வழக்கம். இந்தபடத்தேர்த்திருவிழாவை கான புதுக்கோட்டைத் தஞ்சைமாவட்டங்களில் இருந்துபல ஆயிரக்கணக்கானோர் குவிந்து விடுவார்கள். ஆனால் கடந்த 12 ஆண்டுகளாகக் கோயில் திருப்பணிகள் உள்ளிட்ட காரணங்களால் குருத்தோலை சப்பர படத்தேர்த் திருவிழா நடத்தப்படாமல் இருந்த நிலையில் இந்த ஆண்டு இந்த திருவிழா நடந்தது.
நாடியம்மன்கோயில் காப்புக்கட்டி திருவிழா நடந்து வரும் நிலையில் இன்று (10.06.2025) இந்த குருத்தோலை சப்பர படத்தேர்த் திருவிழா இரவு நடந்தது. இது குறித்து கிராமத்தினர் கூறும் போது, “பிரசித்தி பெற்றநெடுவாசல்நாடியம்மன்கோயிலில் குருத்தோலை படத்தேர்த் திருவிழா என்பது மிகச் சிறப்பானது. அதாவது, அம்மன் வீதி உலா செல்லும் சப்பரத்தில் 65 அடி உயரத்திற்கு மரங்களில் சாரம் அமைத்து அதில் தென்னை, பனை ஓலைகளால் படல் அமைத்து அதன் மேல் வண்ண வண்ண மின்விளக்குகளால் அலங்கரித்துநாடியம்மன்வீற்றிருக்கப் பறை இசை முழங்கப் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்துச் செல்வார்கள்.
அந்த நேரங்களில் வண்ண வண்ண வான வேடிக்கைகளும் இரவில் திரையிசைப் பாடகர்களின்பாட்டுக்கச்சேரியும் உண்டு. வழக்கமாக 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த குருத்தோலை சப்பர படத்தேர்த் திருவிழாவை நடத்துவோம். ஆனால் கோயில் திருப்பணிகளால் இந்த 12 ஆண்டுகள் கடந்து நடக்கிறது. அதனால் சுற்றுவட்டாரகிராமங்களில் இருந்தும்மக்கள் வந்துள்ளனர்” என்றனர். மேலும் நாளை (11.06.2025) தேரோட்டமும் மது எடுப்புத் திருவிழாவும் நடக்கிறது.