Skip to main content

ஆர்.எஸ்.எஸ். பிரமுகரின் தந்தையைக் கொலை செய்த பா.ஜ.க. பிரமுகர்!

 

nachiyar kovil

                                            கோபாலன்                          சரவணன்

 

ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் ஒருவரின் தந்தையை பா.ஜ.க. நகரச் செயலாளர் ஒருவர் கொலை செய்த விவகாரம் கும்பகோணம் பகுதியில் பெரும் பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது.

 

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்துள்ள நாச்சியார்கோயில் மடவிளாகத்தைச் சேர்ந்தவர் வாசுதேவன். இவர் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் முன்னாள் மண்டல பொறுப்பாளராக இருந்து வந்தவர். ஓய்வு பெற்ற ஆசிரியரான இவரது தந்தை கோபாலன் பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவரும் ஸ்ரீ 108 அபிநவ உத்திராதி மடத்தின் மேலாளராக இருந்து வருகிறார். இந்த மடத்திற்கு நாச்சியார்கோயில், கதிராமங்கலம் கும்பகோணம், ஆடுதுறை உள்ளிட்ட பல பகுதிகளில் நிலம் சொத்துகள் இருக்கிறது. இவை அனைத்தையும் கோபாலன் ஒருவரே நிர்வகித்து வருகிறார். 

 

அந்த வகையில் நாச்சியார்கோவில் பகுதியில் மடத்திற்குச் சொந்தமாக பதிமூன்று கடைகள் இருக்கிறது. அதில் ஒரு கடையை பா.ஜ.க. நகர தலைவராக இருந்துவரும் சரவணன் என்பவர் டெய்லர் கடை நடத்தி வருகிறார். அந்த கடைக்குச் சமீப காலமாக வாடகை வரவில்லை எனக் கடையைக் காலி செய்யச் சொல்லி வற்புறுத்தி இடையூறு கொடுத்திருக்கிறார் கோபாலன். 

 

பா.ஜ.க. நகர தலைவரான சரவணன் இந்தக் கடையை நான், எனக்கு முன்னாடி எங்க அப்பா, தாத்தா என மூன்று தலைமுறையாக வச்சிருக்கோம், நீதிமன்றம் போனால்கூட எங்களுக்குத் தான் சாதகமான தீர்ப்பு வரும். கரோனா முடியும்வரை வாடகை தரமுடியாது எனத் தனது வருமையை ஆத்திரத்தோடு கூறியிருக்கிறார். 

 

இதனைச் சற்றும் எதிர்ப்பார்க்காத கோபாலனோ, மடத்தின் மேல்மட்ட நிர்வாகிகளிடம் பேசிவிட்டு, சரவணனிடம் வந்து பேரம் பேசியுள்ளனர். அதற்கும் சரவணன் ஒத்துக்கொள்ளவில்லை. பிறகு மடத்தின் ஆலோசனைப்படி நீதிமன்றத்திற்குச் சென்றார் கோபாலன். தீர்ப்பு மடத்திற்குச் சாதகமாக அமைந்துவிட்டது. அதோடு கடையை உடனே காலி செய்து கொடுக்க வேண்டும் எனவும் தீர்ப்பு கொடுக்கப்பட்டது.

 

அந்தத் தீர்ப்புப்படி கடையைக் காலி செய்ய சரவணனை மீண்டும் வற்புறுத்தினார் கோபாலன். கடையைக் காலி செய்து விடுகிறேன். நீங்க பேசியபடி அந்த இரண்டு லட்சம் பணத்தைக் கொடுங்க எனக் கேட்டிருக்கிறார். ''பணம் பேசியது நீதிமன்றத்திற்கு போகாம இருக்க. இப்ப தீர்ப்பு எங்களுக்குச் சாதகமா வந்துடுச்சி, இனிமே பணம் தரமுடியாது'' எனக் கடுமையான வார்த்தைகளால் பேசியிருக்கிறார். ஆத்திரமடைந்த பாஜக பிரமுகரான சரவணன், மது அருந்திவிட்டு போதையில் கோபாலன் வீட்டுக்குச் சென்றுள்ளார். அப்போது வாசலில் நின்று கொண்டிருந்த கோபாலனை வெட்டிக் கொலை செய்திருக்கிறார்.

 

http://onelink.to/nknapp

 

இந்தக் கொலை விவகாரம் குறித்து நாச்சியர் கோவில் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே ஆயுள் தண்டனை கைதியாக இருந்து வெளியில் வந்தவரை ஒரு கொடூர கும்பல் கொலை செய்து ஒரு வாரம் கூட ஆகாத நிலையில், இந்தக் கொலை நடந்திருப்பது அந்தப் பகுதி மக்களைப் பெரும் பீதியில் தள்ளியிருக்கிறது.

 

நாச்சியார்கோயில் காவல் நிலையம் பகுதியில் சமீப காலமாகவே சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருப்பதாகவும், குற்றவாளிகளுக்குக் காவலர்கள் சிலர் ஆதரவாக இருப்பதாகவும், மாவட்ட காவல் கண்கானிப்பாளர் அந்தப் பகுதியில் கவனம் செலுத்தி குற்ற நடவடிக்கைகளைக் குறைக்க வழி செய்யவேண்டும் எனவும் பொதுமக்கள் கூறிவருகின்றனர்.