Skip to main content

பாம்பு கடித்ததால் சிகிச்சைக்கு வந்த பெண், பாம்போடு வந்தும் பயனில்லை... அரசு மருத்துவமனை அவலம்!!!

Published on 25/06/2019 | Edited on 25/06/2019

கும்பகோணம் தலைமை மருத்துவமனை சமீப காலமாக தரம் தாழ்ந்துவருகிறது.  சிகிச்சைக்காக வரும் மக்களை அலைகழிப்பதும், அவசர சிகிச்சைக்கு வருபவர்களை அப்புறப்படுத்துவதையுமே தொடர்கதையாக மாறிக்கொண்டிருக்கிறது.
 

kumbakonam government hospital



நல்ல பாம்பு கடித்த பெண்ணையும், கடித்த பாம்பை வெட்டி எடுத்துவந்து காட்டியும் சிகிச்சை அளிக்காமல் எலி கடித்துள்ளது என கூறியபடியே செல்போன் பேசிக்கொண்டிருந்திருக்கிறார் டாக்டர் ஒருவர். அந்த பெண்ணின் வாயில் நுறைதள்ளுவதை கண்டதும் தப்பித்துக்கொள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பியிருக்கிறார் அந்த டாக்டர்.

என்ன நடந்தது என விசாரித்தோம்... தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த மணஞ்சேரி கிராமத்தை சேர்ந்தவர் செல்வம் (விவசாயி). இவரது மகள் ஜோதிகா(17). மதியநேரத்தில் வீட்டில் இருந்த ஜோதிகாவின் வலது கால் சுண்டு விரலில் நல்ல பாம்பு கடித்தது. இதையடுத்து ஜோதிகா சத்தம் போட்டிருக்கிறார்.

அப்போது அருகில் இருந்தவர்கள் விரைந்து வந்து ஜோதிகாவை கடித்த பாம்பை மண்வெட்டியால் மூன்று துண்டுகளாக வெட்டி எடுத்துக்கொண்டு, ஆபத்தான நிலையில் இருந்த ஜோதிகாவையும் மீட்டு அருகில் இருந்த கும்பகோணம் தலைமை மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவுக்குக் கொண்டு சென்றனர். 

ஆனால் அங்கு பணியில் இருந்த டாக்டரோ ஜோதிகாவை எலி கடித்துள்ளது என கூறியடியே செல்போனிலும், அருகில் இருந்த நர்சுகளிடமும் பேசியபடியே இருந்திருக்கிறார். கோபமான உறவினர்கள் ஜோதிகாவை கடித்த பாம்பை கொண்டு வந்துள்ளோம் எனக் கூறியும் சிகிச்சை அளிக்காமல் எலி கடிச்சிருக்குன்னு சொல்றது நியாயமா டாக்டர் என கேட்டுள்ளனர்.

ஆனாலும் டாக்டர் அதை சட்டை செய்துக்கொள்ளவில்லை, மீண்டும் செல்போனில் பேசிக்கொண்டே இருந்துள்ளார். மதியம் மூன்று மணிக்கு வந்த நோயாளிக்கு, மாலை 6 மணி வரை சிகிச்சை அளிக்காமல் இருந்ததால் ஜோதிகாவின் வாயில் நுரை தள்ளியது. இதைப்பார்த்த டாக்டர் இங்கு சிகிச்சை அளிக்க முடியாது உடனடியாக தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லுங்கள் என கராராக கூறி விரட்டியிருக்கிறார்.

வேறு வழியில்லாமல் அருகில், அம்பாசத்திரத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் ஜோதிகாவை அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உறவினர்கள் கூறுகையில், "எங்க பொண்ணுக்கு ஏதாவது ஆகிடுச்சின்னா அந்த டாக்டர சும்மா விடமாட்டோம் எல்லாத்துக்கும் வீடியோ வச்சிருக்கோம், ஊரை திரட்டிவந்து மருத்துவமனையை முற்றுகையிடுவோம்". என்கிறார்கள்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மீது தாக்குதல்; விசாரணையில் வெளியான பகீர் தகவல்! 

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Govt Bus Driver Conductor incident information released in the investigation

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே பழைய பாலக்கரை பகுதியில் பந்தநல்லூரில் இருந்து கும்பகோணம் நோக்கி அரசு நகரப் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது 8 பேர் கொண்ட இளைஞர் கும்பல் ஒன்று இந்த பேருந்தை வழிமறித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் வாக்குவாதத்தில் ஈடுட்டனர். மேலும் ஆத்திரமடைந்த இளைஞர்கள் பேருந்துக்குள் சென்று ஓட்டுநரை தகாத வார்த்தைகளால் திட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது ஓட்டுநரை பேருந்துக்கு வெளியே இழுத்து வந்து அவரை சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர். இதனை தடுக்க முயன்ற நடத்துநர் மீதும் சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். அருகில் இருந்தவர்கள் இதனை தடுக்க முயன்ற போது இந்த இளைஞர்கள் அவர்களையும் தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்து தாக்கியுள்ளனர். அதே சமயம் அந்த வழியே வந்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளர்கள் இருவர் இந்த சம்பவத்தை படம் எடுத்தபோது அவர்களையும் தகாத வார்த்தைகளால் பேசி தாக்க முயன்றுள்ளனர்.

இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மற்றும் இருவர் என 4 பேரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். 6 பேர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். கைது செய்யப்பட்ட இருவரிடமும் போலீசார் நடத்திய விசாரணையில் இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட 8 பேரும் கஞ்சா போதையில் இருந்தனர் என்ற பகீர் தகவல் வெளியாகியுள்ளது.  இத்தகைய சூழலில் மேலும் 4 பேரை  போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

Next Story

அரசு மருத்துவரால் உயிருக்குப் போராடும் இளம் பெண்! நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?

Published on 23/02/2024 | Edited on 23/02/2024
Erode district thalavadi government doctor made wrong operation to woman

ஈரோடு மாவட்டம், தாளவாடியில் வசிக்கும் ஓட்டுநர் பிரதீப்குமாரின் மனைவி அனுபல்லவி. வயது 25. இவர்களுக்கு 5, 3 வயதில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. அரசு மருத்துவமனையில் குடும்பக் கட்டுப்பாட்டு செய்யப்போய் தனக்கு நேர்ந்த அவலத்தை அனுபல்லவியே நம்மிடம் கூறுகிறார்.

“என்னுடைய வீட்டுக்காரர் டிரைவர். குடும்ப வறுமை காரணமா பெண் குழந்தைகளே போதுமென்று முடிவுசெய்து குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்துகொள்ள முடிவுசெய்தோம். தாளவாடி அரசு மருத்துவமனையில் 2022, பிப்ரவரி 22-ஆம் தேதி அட்மிட்டானேன். 28 ஆம் தேதி 8 பேருக்கு ஆபரேஷன் செய்தாங்க. என்னைத் தவிர 7 பெண்களும் டிஸ்சார்ஜாகி வீட்டுக்குப் போய்ட்டாங்க.

எனக்கு அதிக ரத்தப் போக்கு ஏற்பட்டு அபாய கட்டத்துக்குச் சென்றேன். அவசர அவசரமா என்னை ஆம்புலன்ஸ்ல ஏத்தி கோயம்புத்தூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டுபோனாங்க. அங்க 25 நாட்கள் ஐ.சி.யூ.வில் இருந்தேன். பிறகுதான் சுயநினைவே வந்தது.

தாளவாடி அரசு மருத்துவமனையில் எனக்கு குடும்பக் கட்டுப்பாடு செய்த டாக்டர் என்ன செய்தாரோ தெரியலை. இதயத்துக்குச் செல்லும் அயோட்டா என்ற ரத்தப்போக்கு லேயரை (நரம்பை) துண்டித்து விட்டதாகவும் அதனைச் சரி செய்ய முடியாது. உயிருக்கு ஆபத்தானது என்றும் கோயம்புத்தூர் டாக்டர்கள் கூறினார்கள்.

இப்ப என்னால எந்த வேலையும் செய்யமுடியாது. இரண்டு குழந்தைகள் இருக்குது. என்னுடைய தாயார் வீட்டில்தான் இருக்கிறேன். அடிக்கடி வாந்தி, மயக்கம் இப்படி ஏதேதோ பல்வேறு தொந்தரவுகள், உபாதைகள் இருந்துக்கிட்டே இருக்குது. தாளவாடி டாக்டர்கள் தவறான ஆபரேஷன் செய்ததன் விளைவு நான் என் உயிரை காப்பாற்றிக் கொள்ள போராடிக்கொண்டிருக்கிறேன்.

மீண்டும் ஒரு ஆபரேஷன் செய்யவேண்டுமாம், அதற்கு தனியார் மருத்துவமனைகளில் பல லட்சங்கள் செலவாகும் என்கிறார்கள். கூலி வேலை செய்து பிழைக்கும் நாங்கள் பணத்திற்கு எங்கே செல்வோம்? என்னை பழைய நிலைக்கு கொண்டுவருவதற்கான அறுவை சிகிச்சையை அரசாங்கம் செய்யவேண்டும். தவறான அறுவை சிகிச்சை செய்த அந்த மருத்துவரை தண்டிக்க வேண்டும். அரசு மருத்துவமனையை நம்பிச் சென்று குடும்பக் கட்டுப்பாடு ஆபரேஷன் செய்தேன். தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் கவனத்திற்கு நக்கீரன் மூலமாக கொண்டுசென்று எனக்கு உரிய நீதியும், நிவாரணமும் பெற்றுத் தாருங்கள்” என்றார் பாதிக்கப்பட்ட அனுபல்லவி.

ஈரோடு ஆட்சியர் ராஜகோபால் சுங்கராவிடமும் மனு கொடுத்தார். மருத்துவர் குழுவை அழைத்து உடனடியாக என்ன செய்யவேண்டும் என பாருங்கள் என்றார். அந்த மருத்துவர்கள் குழு அறிக்கை தருவதாக கூறிவிட்டுச் சென்றுவிட்டது.

அரசு மருத்துவர்களால் பாதிப்புக்குள்ளான அனுபல்லவிக்கு தாமதமின்றி நீதியும், நிவாரணமும் கிடைக்க தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் உதவுவாரா?