அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ஒன்றியக்குழு உறுப்பினர் ஒருவரின் கந்துவட்டி கொடுமை தாங்கமுடியாமல் நடக்கவிருக்கும் மகளின் திருமணத்தைக்கூட நடத்தமுடியாமல் தாயார் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது.

Advertisment

Kumbakonam

தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் ஒன்றியத்திற்குட்பட்ட நெய்குப்பையை சேர்ந்தவர் ராஜா - மைதிலி தம்பதியினர். அவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர்.அவர்கள் அதே கிராமத்தை சேர்ந்த அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிர்வாகியும், ஒன்றிய குழு உறுப்பினருமான கருணா என்கிற கருணாநிதியிடம் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மூன்று லட்சம் கடன் வாங்கியிருக்கிறார். அதற்கான வட்டியை மாதம், மாதம் கொடுத்து வந்த நிலையில் மகளுக்கு திருமண ஏற்பாடு செய்ததால், வட்டி கொடுக்க முடியாமல் சில மாதம் தாமதமாகியிருக்கிறது. அதனால் கோபமடைந்த கருணாநிதியும் அவரது சகோதரர்களும் மைதிலியின் வீட்டை இழுத்துப்பூட்டுவதற்கு சென்றுள்ளனர். மகளின் திருமணம் நாளை மறுநாள் என்பதால் அவமானத்தை தாங்க முடியாத ராஜாவின் மனைவி மைதிலி வயலுக்கு தெளிக்க வாங்கிவைத்திருந்த விஷமருந்தை குடித்துவிட்டு ஆபத்தான நிலையில் கும்பகோணம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

Advertisment

இதுகுறித்து மைதிலியின் கணவர் ராஜாவிடம் விசாரித்தோம், " கருணா எங்களுடைய உறவுக்காரர் தான் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு குறைந்த வட்டி என்று அவசரத்திற்கு வாங்கினோம். ஆனால் வட்டி மேல் வட்டி போட்டு அசலைவிட நான்கு மடங்கு கொடுத்துள்ளோம், வட்டியை அடைக்க வட்டிக்கு வாங்குவது என்று மாதம் 80 ஆயிரம் வரை வட்டி கொடுக்கும் நிலைக்கு கொண்டுவந்துவிட்டனர். நான்கு மாதத்திற்கு முன்பு அசலில் இரண்டு லட்ச ரூபாய் பணம் கொடுத்துவிட்டோம் ஆனால் அதை வட்டியில் சேர்த்துவிட்டோம். மீதம் 8 லட்சம் வரை பாக்கி கொடுக்கனும்னு வீட்டை எழுதிகேட்டு மிரட்டினாங்க. நாங்க எவ்வளவோ கெஞ்சினோம் மகள் திருமணம் முடியும்வரையாவது நேரம் கொடுங்க என மண்டியிட்டோம், அவங்க சம்மந்தி வீட்டுக்காரவுங்க வரும் சமயத்துல அடாவடி செய்தாங்க, மனமுடைந்து விஷம் குடிச்சிடுச்சி. நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை மகளுக்கு திருமணம் நடக்குமா, துக்கவீடா மாருமான்னு புரியாம தவிக்கிறேன்ங்க,"என வேதனையோடு சொன்னார்.

கந்துவட்டிக்காரர்களும், கட்டுவிரியனும் ஒன்னு, இரண்டும் ஆரம்பத்துல தெரியாது, போக போக கொடூர விஷமா மாறி அழித்துவிடும், மைதிலியை போல பல மைதிலிக்கள் தாலியைக்கூட விற்று வட்டி கொடுத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

Advertisment