Skip to main content

கா.மே.வா. அமைக்காததை கண்டித்து தேசிய கொடியை எரித்த ஆசிரியர் கைது

Published on 02/04/2018 | Edited on 02/04/2018



காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தேசிய கொடிக்கொடிக்கு தீ வைத்து கொளுத்தி கைதாகியிருக்கிறார் ஒவிய ஆசிரியர்.
 

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே புதுப்படையூர் மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் பிரபு, இவர் சோழன்மாளிகையில் உள்ள சிபிஎஸ்இ பள்ளியில் கடந்த 10 ஆண்டுகளாக ஓவிய ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி இளவரசி பட்டீஸ்வரத்தில் கம்யூட்டர் சென்டர் நடத்தி வருகிறார். இருவரும் தமிழர் நலன்மீது அக்கரைக்கொண்டவர்களாக இருந்து வருகின்றனர்.  
 

இந்தநிலையில் பிரபு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தேசிய கொடியை எரிப்பது போல் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

 

Kumbakonam


 

அந்த வீடியோ பதிவில் பிரபு கூறியிருப்பதாவது,
 

"காவிரி உரிமையை பறிக்கின்ற இந்திய அரசை கண்டித்து இந்த தேசிய கொடியை எரிக்கிறேன். தமிழர்களின் உரிமைகளான கடல் உரிமை, மண் உரிமை அனைத்தையும் இந்திய அரசு பறிக்கின்றது. காவிரியை ஒட்டுமொத்தமாக அழிவில் நிப்பாட்டியுள்ளது.
 

 நம்முடைய தமிழக மீனவர்கள் 600 பேரை இலங்கை ராணுவம் சுட்டு கொன்றபோதும் கேள்வி கேட்காத மத்திய அரசு நம்முடைய வரிப்பணத்தை அள்ளி செல்கிறது. 

நியூட்ரினோ திட்டம், மீத்தேன் திட்டம், கூடங்குளம் உள்ளிட்ட அழிவு திட்டங்களை தமிழர்கள் மீதும் தமிழ்நாட்டின் மீதும் திணிக்கிறது.
 

 இளைஞர்கள், மாணவர்கள் ஒருபோதும் தங்களை எரித்துக்கொள்ளாதீர்கள். நாம் எரிக்க வேண்டியது நம் மனதில் உள்ள இந்தியம் என்ற உணர்வை எரிக்க வேண்டும்.  தனித்தமிழ்நாடு ஒன்றே தமிழர்களின் தீர்வு" என்று கூறியதோடு மத்திய அரசையும், தமிழக அரசையும் கண்டித்து கோஷம் எழுப்பியவாறு தன் கையில்வைத்திருந்த தேசியகொடிக்கு  தீயிட்டு கொளுத்தினார்.
 

இந்த வீடியோ சமூக வலைதளங்களான வாட்ஸ் ஆப், பேஸ்புக் உள்ளிட்டவைகளில் காட்டு தீபோல் பரவியது. 
 

இதுகுறித்து விசாரணை செய்த போலீஸார் வீடியோவில் இருப்பது கும்பகோணத்தை சேர்ந்த பிரபு என்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து கும்பகோணம் தனிப்படை சப் இன்ஸ்பெக்டர் கீர்த்திவாசன் தலைமையிலான போலீஸார்  நள்ளிரவு வீட்டில் இருந்த பிரபுவை தேசிய கொடியை எரித்ததாக கூறி கைது செய்தனர். இதுதொடர்பாக சுவாமிமலை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
 

 

சார்ந்த செய்திகள்