Kumari ready to face 'Purevi' storm ..

வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி ‘புரெவி’ புயலாக மாறி, நாளை தென் தமிழகத்தில், கன்னியாகுமரிக்கும் பாம்பனுக்கும் இடையை கரையைக்கடக்கும் என்று வானிலை மையம் கூறியுள்ளது.

Advertisment

இதனால் தென் மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய இடி மின்னலுக்கு வாய்ப்புள்ளதாகக் கூறி ‘ரெட்’ அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதில் குமரி மாவட்டமும் புயலால் பாதிப்புக்குள்ளாகும் என்பதால், அதை எதிர்கொள்ளும் விதமாக மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது.

Advertisment

இதற்காக, ஆழ்கடலில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களுக்கு, கப்பல் படை மற்றும் கடலோரக் காவல்படை மூலமாக அறிவுறுத்தப்பட்டு, அந்த மீனவர்கள் கர்நாடக, மராட்டியம், கேரளா மற்றும் லட்சத் தீவுகளில் உள்ள துறைமுகங்களில் கரைசேர்ந்துள்ளனர். மேலும், குமரி மாவட்டத்தில் 20 பேர் கொண்ட 3 தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் வந்துள்ளனர். இதேபோல் மாநிலப் பேரிடா் மேலாண்மை மீட்புப் படையைச் சேர்ந்த 80 பேர் வந்துள்ளனர். மேலும், குமரி மாவட்ட பேரிடர் மீட்புப் பயிற்சி பெற்ற, 50 பேர் ஊர்க்காவல் படையைச் சேர்ந்த 30 பேரும் தயார் நிலையில் உள்ளனர்.

புரெவி புயல் மீட்புப் பணியில் ஈடுபட, தேசிய மாநிலப் பேரிடர் மீட்புப் பணியினர் 220 பேரும், 1,300 போலீசாரும் தயார் நிலையில் உள்ளனர். தீயணைப்புத் துறை சார்பில் 13 குழுவினரும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்த நீச்சல் பயிற்சி பெற்ற வீரர்களும் மீட்புப் பணியில் தயாராக உள்ளனர். குமரி மாவட்டத்தில் உள்ள 48 மீனவகிராமங்களைச் சேர்ந்த 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிக்கப் போவது தடுக்கப்பட்டுள்ளது. மீனவர்களின் வள்ளம், படகு, கட்டுமரங்கள்மேட்டுப் பகுதியில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கடற்கரை சுற்றுலாத் தலங்களில் சுற்றுலாப் பயணிகளை வெளியேற்றி, 24 மணி நேரமும் மீட்புக் குழுவினர் கண்காணித்து வருகின்றனர். கன்னியாகுமரியில் உள்ள ஓட்டல்களும், கடைகளும் அடைக்கப்பட்டு வெறிச்சோடி காணப்படுகிறது.

Advertisment

Kumari ready to face 'Purevi' storm ..

மேலும், சின்னமுட்டம், குளச்சல், முட்டம், தேங்காப்பட்டணம் துறைமுகளில் மீன் பிடித்து ஏலம் போடாததால் மீனவர்கள் நடமாட்டம் இன்றி அந்தப் பகுதிகள் வெறிச்சோடி கிடக்கிறது. இங்கு ஒலி பெருக்கிகள் மூலம் புயல் எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது. அதேபோல் கரைப் பகுதி, மழை வெள்ளம் புகாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றார்-1, சிற்றார்-2 அணைகளில் தண்ணீரைவெளியேற்றி அதன் கொள்ளளவு குறைக்கபட்டுள்ளது.

பாதுகாப்பு சம்மந்தமாக குமரி மாவட்ட கண்காணிப்பு அதிகாரி ஜோதி நிர்மலா, ஆட்சியர் அரவிந்த், காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் மேற்பார்வையில் எடுக்கபட்டுள்ள நடவடிக்கைகளை வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார், செய்தி மக்கள் தொடர்புத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ மற்றும் தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி தளவாய் சுந்தரம் ஆகியோர் இன்று (புதன்) ஆய்வு செய்தனர்.