ADVERTISEMENT

“குமரி ஆனந்தன் சுயசரிதை எழுத வேண்டும்” - ப.சிதம்பரம்

03:23 PM Mar 19, 2022 | tarivazhagan

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் குமரி ஆனந்தனின் 90-வது பிறந்தநாள் விழா, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையில், சென்னை சத்தியமூர்த்தி பவனில் கேக் வேட்டி கொண்டாடப்பட்டது. அப்போது, குமரி ஆனந்தனுக்கு காங்கிரசார், ஆளுயுர மாலை அணிவித்தனர். மக்களவை காங்கிரஸ் உறுப்பினர் விஜய் வசந்த், எம்.பி., வரவேற்புரையாற்றினார்.

ADVERTISEMENT

இந்நிகழ்ச்சியில், காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி பேசியதாவது; “இலக்கிய செல்வர் குமரி அனந்தன் வரலாற்றுப் பெட்டகம். தேசியத்திற்கான, காங்கிரஸ் கட்சிக்காக அவர் ஆற்றிய பங்கு மறக்கமுடியாது. மக்கள் பிரச்சனைகளுக்காக பலமுறை நடைபயணம் மேற்கொண்டு இருக்கிறார். நடப்பதில் மன்னாதி மன்னன் குமரி அனந்தன். தேசத்தைக் காப்பாற்றுவதற்காக காங்கிரஸ் தொண்டர்கள் வீறுகொண்டு எழ வேண்டும். அரசியல் இயக்கத்தில் வெற்றியும் வரும், பின்னடைவும் வரும். நாம் தோல்வி வரும்போது துவண்டு விடுகிறோம். நமக்கு நம்பிக்கை வேண்டும். நாம்தான் இந்தியாவை ஒற்றுமைப்படுத்த முடியும். சிறந்த தலைமை வேண்டும், உறுதியான தலைமை வேண்டும். அப்படி இருந்தால் இயக்கத்தை வழிநடத்த முடியும். சோனியா காந்தி, ராகுல் காந்தி தலைமையில் வழிநடப்போம்” இவ்வாறு அவர் பேசினார்.

ADVERTISEMENT

முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம், எம்.பி பேசியதாவது; “இந்திய அரசியலில் குமரி ஆனந்தன் தெரிந்து கொள்ளாத விஷயம் இருக்கமுடியாது. அரசியல் ஆளுமை, இலக்கிய ஆளுமை, தமிழ் ஆளுமை மேடைப்பேச்சு ஆளுமை, மொழி ஆளுமை என அனைத்து ஆளுமைகளையும் உடையவர் பெரியவர் குமரி அனந்தன்.

குமரி அனந்தன் 90வது வயதைத் தொடங்குகிறார். 1933ஆம் ஆண்டில் பிறந்தார். அன்று நடந்த வரலாறு, பாடப்புத்தகத்தில் மறைக்கப்பட்டு வருகிறது. அன்றைய காலகட்டத்தில் நடந்த வரலாற்றை மறைந்து வருகிறார்கள். இன்னும் வருகிற நாள்களில் 2014ஆம் ஆண்டில் தான் சுதந்திரம் அடைந்தது என்று சொல்லுவார்கள். பாடப்புத்தகத்தின் வாயிலாகத்தான் வரலாற்றை தெரிந்து கொள்ள முடியும். அதுமாறி வேறுவகையாக நூல்கள் மூலமாக தெரிந்து கொள்ள வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது. ஜவஹர்லால் நேரு தனது 40 வயதில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவராகப் பொறுப்பேற்றார். இளைஞர்கள் பொறுப்பிற்கு, பதவிக்கு வரமுடியாது என்பதை நாம் மனதளவிலாவது ஒழிக்க வேண்டும். குமரி ஆனந்தன் தன் (சுயசரிதை) வரலாற்றை எழுதவேண்டும். அவர் எழுதினால் அதில், தமிழகத்தின் வரலாறு, காங்கிரஸ் கட்சியின் வரலாறு இடம்பெறும். அதனை ஓரிரு வருடங்களில் அவர் எழுதி எங்களுக்குத் தரவேண்டும் என்று என்னுடைய விருப்பத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்” இவ்வாறு அவர் கூறினார்.

சு.திருநாவுக்கரசர் எம்.பி பேசியதாவது; “நீங்களும் பேச்சாளர் ஆகலாம் என்று குமரி ஆனந்தன் எழுதிய நூலைப் படிக்கவும்.. பேச்சாற்றல், எழுத்தாற்றல் உடையவர். ரயில் நிலையத்தில் பயணிகளின் பணிவான கவனத்திற்கு என்று ஒலிக்கும். அதனை, பயணிகளின் கனிவான கவனத்திற்கு என்று மாற்றியவர் குமரி அனந்தன். கவர்னர் மாளிகையில் குமரி அனந்தன் தங்க வேண்டும் என்று அவருடைய ஜாதகத்தில் இருக்கிறது. அதனை நாம் செய்யத் தவறிவிட்டோம். அது வேறு வழியில் நடந்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. 90 வயதில் உடல் ஆரோக்கியமாக வாழ்வதற்கு காரணம் அவருக்கு எந்தக் கெட்டப்பழக்கம் இல்லாததுதான். இளைஞர்கள் முன்மாதிரியாக எடுத்துக் கொள்ள வேண்டும். சுதந்திரம் பெறுவதற்கு முன்பு இருந்த வரலாற்றையும், ராகுல் காந்தி பிரதமராகும் வரலாற்றையும் சேர்த்து குமரி அனந்தன் எழுத வேண்டும். குமரி அனந்தன் 100 ஆண்டுகள் கடந்து வாழவேண்டும்” என்றார்.

இவ்விழாவில், முன்னாள் தலைவர்கள் கே.வீ. தங்கபாலு, சு. திருநாவுக்கரசர் எம்.பி, முன்னாள் மத்திய அமைச்சர் ஆர். தனுஷ்கோடி ஆதித்தன், தொழிலதிபர் வி.ஜி.சந்தோஷம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT