/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/marimuthu.jpg)
சேலம் அருகே தனியார் கல்குவாரியில் உள்ள குட்டையில் நீச்சல் பழகச்சென்ற பத்தாம் வகுப்பு மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
சேலம் அம்மம்பாளையம் சாஸ்திரி நகரைச் சேர்ந்த சிவபிரகாசம் மகன் கவுசிக், இவருடைய பக்கத்து வீட்டைச் சேர்ந்த ரவி என்பவரின் மகன் மாரிமுத்து. இருவரும் பத்தாம் வகுப்பு படித்து வந்தனர். நேற்று காலை ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை என்பதால் விளையாடச் செல்வதாகக் கூறிவிட்டு, நரசோதிப்பட்டி அருகே உள்¢ள தனியாருக்குச் சொந்தமான கல்குவாரி பகுதிக்கு நண்பர்கள் மூன்று பேருடன் சென்றுள்ளனர்.
கல்குவாரியில் இருந்து வெள்ளைக்கற்கள் வெட்டி எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் தோண்டப்பட்ட ஆழமான குழிகளில் சமீபத்தில் பெய்த மழை நீர் குட்டையாக தேங்கி இருக்கின்றன. அந்தக் குட்டைக்குள் இறங்கி மாணவர்கள் குளித்தனர். அப்போது குட்டையின் ஆழமான பகுதிக்கு மாணவர்கள் கவுசிக், மாரிமுத்து ஆகிய இருவரும் சென்றதால் அவர்களால் திரும்பவும் கரைப்பகுதிக்கு வர முடியவில்லை. நீச்சலும் சரிவர தெரியாததால் அவர்கள் நீரில் மூழ்கினர்.
இதனால் செய்வதறியாது தவித்த மற்ற மூன்று மாணவர்களும் அவரவர் வீட்டுக்கு திரும்பிவிட்டனர். இதை பெற்றோரிடம் கூறினால் என்னாகுமோ என்ற பயத்தில் அவர்கள் கல்குவாரியில் நடந்த சம்பவங்களைக் கூறாமல் மறைத்துவிட்டனர்.
இந்நிலையில், வீட்டில் இருந்து கிளம்பிய குழந்தைகளைக் காணவில்லை என்று கவுசிக், மாரிமுத்து ஆகியோரின் பெற்றோர் சூரமங்கலம் போலீசில் நேற்று இரவு புகார் அளித்தனர்.
இன்று காலையில் கல்குவாரி தொ-ழிலாளர்கள் வேலைக்கு வந்தனர். அங்கே குட்டை நீரில் சிறுவர்கள் சடலம் மிதப்பதை அறிந்த அவர்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து போலீசார், தீயணைப்புத்துறை வீரர்கள் ஆகியோர் சடலங்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஒரே பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் இருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
எச்சரிக்கை பலகை வேண்டும்: கல்குவாரி குட்டைகளில் தேங்கிய நீரில் மூழ்கி சிறுவர்கள் பலியாகும் சம்பவம் சேலத்தில் அடிக்கடி நடந்து வருகிறது. பெரும்பாலும், பயன்பாடற்ற குவாரி குட்டைகளில்தான் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. அவ்வாறு பயன்பாடற்ற குவாரி குட்டைகளை மூடி வைக்க வேண்டும். மேலும், எச்சரிக்கை பலகையும் வைக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)