Skip to main content

ஒரே கிராமத்தில் ஒரே தகவலை சொல்லும் இரண்டு சோழர்கால கல்வெட்டுகள்... 

Published on 09/12/2020 | Edited on 09/12/2020

 

Kulothungan Chola inscriptions in thiruvannamalai  that tell the same story in the same village ...


திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், கொட்டையூர் ஏரிக்கரை அருகே கல்வெட்டு ஒன்று இருப்பதாக, அப்பகுதி இளைஞர்கள் திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவகத்திற்குத் தகவல் கூறினர். அந்தத் தகவலின் அடிப்படையில் ஆய்வக அமைப்பின் செயலர் ச.பாலமுருகன், ஆய்வாளர்கள் பழனிச்சாமி, குமரவேல், என்.சுதாகர், ராஜா ஆகியோர்கள் அந்தக் கிராமத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டனர். ஏரிக்கரை அருகே உள்ள புதர்மண்டிய அந்தப் பாறையைப் பார்வையிட்டனர். அந்தப் பாறையில் அக்கால தமிழ் எழுத்துகள் செதுக்கப்பட்டிருப்பதைக் கண்டு, அதனைச் சுத்தம் செய்து, படியெடுத்துப் படித்தனர். அதன் மூலம் அது குலோத்துங்கன் சோழர் காலத்து கல்வெட்டு என்பதைக் கண்டறிந்தனர்.

 

அந்தக் கல்வெட்டின் முதல்பகுதியில் பாடல்போன்ற நான்கு வரி என 14 வரிகளைக் கொண்டுள்ளது. அந்த வரிகள்,

 

ஸ்வஸ்திஸ்ரீ குலோத்துங்க சோழ
தேவர்க்கு யாண்டு யஎ வது பெண்-
-ணை வடகரை வாணகொப்பாடி
ஆடையூர் நாட்டில் கொட்டை


யூரிலிருக்கும் புழுவுடையானான
மன்மலையநேன், நாலாகெண்ட(?) நர
சிங்கப்புத்தேரியில் எங்கள் நல்லூர் நாய-
-னார் சோமிசுரமுடையாரக்கு நான் விட்ட


தேவதானம் குழி ஐநூறும் இவ்வூர்
பெற்றுப் புகுந்தான் மாவனொருவன் மா-
-றுவான் தங்களம்மைக்குத்  தானே மணாள-
-னாவான் கங்கைகரையிலே குராற் பசுவை


குத்தினான் பாவங்கொள்வான் தன் மினா-
-டியை இவ்வூர் தோட்டிக்குக் குடுப்பான்.

 

அதாவது, குலோத்துங்க சோழனின் 17 ஆவது ஆட்சி ஆண்டில், ஆடையூர் நாட்டில் பெண்ணை ஆற்றின் வடகரையில் உள்ள கொட்டையூரில் புழுவுடையானான மன்மலையன் சோமீசுவரமுடைய நாயனாருக்கு, நரசிங்கப் புத்தேரியில், 500 குழி நிலம் தேவதானமாக விடப்பட்டதைக் குறிப்பிடுகிறது. இத்தானத்தை அழிப்பன் கங்கை கரையில் குராற்பசுவை குத்திய பாவம் உண்டாகும் என ஒம்படைக் கிளவியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதே ஊரில் இக்கல்வெட்டு இருக்கும் இடத்திற்கு 1 கி.மீ தொலைவில் இதே அரசனின் இதே செய்தியைத் தெரிவிக்கும் மற்றொரு கல்வெட்டும் உள்ளது. இரண்டு கல்வெட்டிற்கும் இடைப்பட்ட பகுதியில், தானமாக விடப்பட்ட 500 குழி நிலம் இருந்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.


அந்தப் பாறையில் செதுக்கப்பட்டுள்ளதை வைத்து அந்த ஊரில் சிவன் கோயில் ஏதாவது உள்ளதா என அக்கிராம மக்களிடம் விசாரித்த ஆய்வுக் குழுவிடம், கொட்டையூரில் தற்போது பழைய சிவன்கோயில் ஏதும் இல்லை என உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர். கல்வெட்டு குறிப்பிடும் கோயில், காலப்போக்கில் அழிந்துபட்டிருக்கலாம் என்றும் தெரியவருகிறது. சுமார் 800 ஆண்டுகளுக்கு முற்பட்ட இக்கல்வெட்டு மூலம் கொட்டையூரில் ஒரு சிவன் கோயில் இருந்ததும், அதற்கு நிலதானம் அளித்ததும் தெரியவருகிறது.  ஒரே ஊரில், ஒரே செய்தியைத் தெரிவிக்கும் 2 கல்வெட்டுகள் கிடைத்தது குறிப்பிடத்தக்கதாகும்.

 

 

 

சார்ந்த செய்திகள்