தென் மாவட்டத்தில் பிரசித்திப் பெற்றது தூத்துக்குடி மாவட்டத்தின் குலசேகரப்பட்டினம் தசரா திருவிழா. லட்சக்கணக்கான பக்தர்கள் 10ம் நாள் அன்று கடற்கரையில் திரண்டு வந்து பக்தி கோஷத்தோடு மஹிஷா சூரசம்ஹாரத்தைக் கண்டு களித்து முத்தாரம்மனை தரிசிப்பர். ஆனால் கரோனாத் தொற்று பரவல் தடை காரணமாக கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் ஆலய விழாக்கள் வெளியே நடக்காமல் ஆலய வளாகத்திற்குள்ளேயே நடந்தது.

Advertisment

குறிப்பாக, குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் ஆலய நவராத்திரி தசரா திருவிழாவில் 10 நாட்களும் அம்மனுக்கு விஷேச பூஜைகள், சிறப்பு அபிஷேகம் நடந்ததுடன் பல்வேறு திருக்கோலங்களுடன் அம்மன் திருவீதியுலாவும் நடந்தது. தடை காரணமாக பக்தர்கள் தங்களின் ஊர்களிலேயே காப்பு கட்டி விரதம் அனுஷ்டித்தனர். முக்கியமாக வேண்டுதலின்படி சிறுவர், சிறுமியர் உட்பட பெரியோர் வரை பல்வேறு வேடமிட்டு அம்மனை வழிபட்டார்கள். வேண்டுதலின்படி கிராமங்களிலுள்ள தசரா குழுக்கள் பலவிதமான வேடமணிந்து கிராமப் புறங்களில் கலை நிகழ்ச்சிகளை நடத்தினர்.

Advertisment

10ம் நாள் திருவிழா வழக்கம் போன்று மஹிஷா சூரசம்ஹாரம் அன்றைய நடு இரவு குலசேகரப்பட்டினம் சிதம்பரேஸ்வரர் கடற்கரையில் நடப்பது மரபு. ஆனால் கரோனா பரவல் தொற்று தடைகாரணமாக, இந்த ஆண்டு மஹிஷா சூரசம்ஹாரம் ஆலய வளாகத்திலேயே அதிகாலை நடந்தது. பக்தர்கள் பங்கேற்கவும் அனுமதிக்கப்படவில்லை. கோவில் நிர்வாகிகள் முக்கியஸ்தர்கள் உட்பட போலீசார் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

முன்னதாக காலை 06.00 மணிக்கு உற்சவ மூர்த்தி அம்மனுக்கு சிறப்பு பூஜை அபிஷேக ஆராதனை வழிபாடு நடத்தப்பட்டது. தசரா திருவிழாவை முன்னிட்டு அன்றைய தினம் காலை முதலே முத்தாரம்மனைத் தரிசிக்க அக்கம் பக்கப் பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்தனர். ஆனால் கரோனா தடை காரணமாக போலீசார் ஊர்ப் பகுதிகளில் பேரிகாட்கள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டவர்கள் வந்த பக்தர்களைத் திருப்பி அனுப்பினர்.

Advertisment

சூரசம்ஹாரம் வழக்கமாக நடைபெறும் கடற்கரை மற்றும் பிற பகுதிகள் பக்தர்களின்றிக் களையிழந்து காணப்பட்டன.