Skip to main content

“இது செயற்கையாக உருவான தண்ணீர்ப்பஞ்சம்!” -அதிகாரிகளை விளாசிய கே.டி.ராஜேந்திரபாலாஜி!

Published on 19/06/2019 | Edited on 20/06/2019

 

விருதுநகர் மாவட்ட குடிநீர் வழங்கல் பணிகள் குறித்த அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டத்தில் பேசிய தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி 

“ஆணையாளர்கள்,  நகராட்சி மற்றும் ஊரகப்பகுதிகளில் கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் பயன்பெறும் பொதுமக்களுக்கு முறையாக இத்திட்டம் செயல்படுத்தப்படுகின்றனவா என்பதனையும், குடிநீர் விநியோகத்தினையும் தினசரி ஆய்வு செய்யவேண்டும். குடியிருப்பு பகுதிகளில் குடியிருப்புகள், திருமண மண்டபங்கள், திரையரங்குகள் மற்றும் வணிக நோக்கில் செயல்படும் நிறுவனங்கள் ஆகியவற்றில் முறைகேடாக,  அனுமதியின்றி குழாய் மூலம் குடிநீர் எடுத்துவருகின்றனர்.

 

ktr

 

குடிநீர் உறிஞ்சப்படும் மின் மோட்டார்களைப் பறிமுதல் செய்தும், அபராதம் விதித்தும் குடிநீர் இணைப்பைத் துண்டித்தும் நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிநீர் வழங்கும் பணியில் ஊராட்சி செயலாளர்கள் தனிக் கவனம் செலுத்தி, அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர் கிடைக்குமாறு செய்திட வேண்டும். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் தனி கவனம் செலுத்திட வேண்டும். மேலும், பொதுமக்களிடமிருந்து குடிநீர் விநியோகம் தொடர்பாக வரப்பெறும் புகார்களை 24 மணி நேரத்தில் பரிசீலனை செய்து,  போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு,  உடனடியாக நிவர்த்தி செய்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். எனவே அனைத்து அரசு அலுவலர்களும் போர்க்கால அடிப்படையில் அனைத்து தரப்பு மக்களுக்கும் தட்டுப்பாடின்றி சீரான குடிநீர் வழங்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ள வேண்டும்.  

 

எதிர்பார்த்த அளவு தென்மேற்குப் பருவமழை பெய்யவில்லை. விருதுநகர், சிவகாசி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் என, விருதுநகர் மாவட்டம் முழுவதும் தற்போது குடிநீர் தட்டுப்பாடு அதிகளவில் இருக்கிறது. பொதுமக்கள் குடிநீரை மோட்டார் மூலம் உறிஞ்சி எடுப்பதை நகராட்சி ஊழியர்களோ, ஊராட்சி செயலர்களோ, கண்டுகொள்வதே இல்லை. அதனால்தான், மற்ற பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு குடிநீர் கிடைப்பதில்லை.

 

குடிநீர் விநியோகப் பணிகளுக்காக அரசாங்கம் எவ்வவோ செய்துவருகிறது.  அதிகாரிகளின் அலட்சியப் போக்கினால்தான், அரசாங்கத்தின் மீது மக்களின் கோபம் திரும்பிவிடுகிறது. ஊராட்சி செயலர்கள் எல்லோரும், உள்ளாட்சி பிரதிநிகள் இல்லாததால், அதிகாரத்தோடு நடந்துகொள்கின்றனர். குழாய் உடைப்பிலிருந்து மோட்டார் பழுதுவரை எந்தப் பிரச்சனையையும் அதிகாரிகள் தீர்ப்பதில்லை. இது செயற்கையாக உருவான தண்ணீர்ப்பஞ்சம்.” என்று ஒரேயடியாக அதிகாரிகள் மீது குற்றம் சுமத்தினார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை பிரதமர் மோடி ஏன் புகழ்ந்தார்? - ராஜேந்திரபாலாஜியின் விளக்கம்!

Published on 05/03/2024 | Edited on 05/03/2024
Rajendra Balaji explains why PM Modi praised MGR and Jayalalithaa

விருதுநகரில் திமுக அரசைக் கண்டித்து விருதுநகர் மேற்கு மாவட்ட  அதிமுக சார்பில், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை, மகளிர் அணி,  மாணவர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். முன்னாள் அமைச்சர்கள் கே.டி.ராஜேந்திரபாலாஜி மற்றும் மாஃபா பாண்டியராஜன் ஆகியோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசினார்கள்.   

கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசியபோது “கிராமங்களில்கூட போதைப் பொருட்கள் எளிதாகக் கிடைக்கிறது. தமிழகத்தில் போதைக் கலாச்சாரம்  பரவிவிட்டது. கடந்த சில நாள்களுக்குமுன், சென்னையில் இருந்து வந்த பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில், ரூ.180 கோடி மதிப்பிலான போதைப்  பொருட்கள் பிடிபட்டுள்ளது. திமுகவைச் சேர்ந்த அயலக அணி அமைப்பாளர் ஜாபர் சாதிக், ரூ.2000 கோடிக்கு மேல் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்து போதைப் பொருள்களை இங்கு கொண்டுவந்துள்ளார். மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் வாழ்க்கையைக் கெடுக்கும் விதமாக போதைப் பொருட்களை விற்பனை செய்துள்ளார். போதைப் பொருட்கள் புழக்கத்தைத் தடுக்கத் தவறிய திமுக அரசை வீட்டுக்கு அனுப்பும்வரை போராட்டம் தொடர்ந்துகொண்டே இருக்கும்.  

தமிழ்நாட்டின் மானம் மரியாதையைக் காப்பாற்ற வேண்டுமென்றால், வரும் பாராளுமன்றத் தேர்தலில் இரட்டை இலையை வெற்றிபெறச் செய்யவேண்டும். பாராளுமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கு வாக்களித்தால்தான், தமிழ்நாட்டில் காவிரி பிரச்சனை, பாலாறு முல்லைப் பெரியாறு பிரச்சனைகளைத் தீர்க்கமுடியும்.  விருதுநகர் மாவட்டத்தில் 24  ஏக்கரில்,  ரூபாய் 385 கோடி செலவில், அரசு மருத்துவக் கல்லூரியைத் தொடங்கி காமராஜரின் கனவை நனவாக்கியவர் ஈ.பி.எஸ். அதிமுக கட்சியை ஈ.பி.எஸ். வலுவாக வைத்திருக்கிறார். அதனால்தான், அதிமுகவை அனைத்துக் கட்சிகளும் தேடி வருகிறது.   

தற்போது  திமுக அரசு பொங்கலுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்தது. அதுவும் ஈ.பி.எஸ். வற்புறுத்தியதால்தான் தமிழக மக்களுக்குக் கிடைத்தது. பொங்கலுக்கு ரூ.5000 தரவேண்டுமென்று ஈ.பி.எஸ். சொல்லியிருந்தால், ஈ.பி.எஸ்.ஸுக்கு பயந்து ரூ. 5000 கொடுத்திருப்பார்கள். தற்போது ஈ.பி.எஸ். பேசுவதால்தான், தமிழக மக்களுக்கு அனைத்து உதவிகளும் கிடைக்கிறது. 

எல்லோருக்கும் உதவும் எண்ணம் இயல்பாகவே வர வேண்டும். அதனால்தான் மறைந்து 36 ஆண்டுகள் ஆகியும் எம்.ஜி.ஆரை தெய்வமாகப் போற்றி வருகிறார்கள். அதனால்தான், பல்லடம் பொதுக்கூட்டத்துக்கு வந்த பிரதமர் மோடி, தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆட்சி சிறப்பாக இருந்தது  என்று பெருமையாகக் கூறினார். டெல்லியில் ஈ.பி.எஸ். கை ஓங்கினால்தான், தமிழ்நாட்டின் உரிமையைப் பாதுகாக்கமுடியும்.” என்றார்.   

அதிமுக வாக்குகளைக் கவர்வதற்காக பிரதமர் மோடி எம்.ஜி.ஆரையும் ஜெயலலிதாவையும் புகழ்கிறார் என்று அரசியல் நோக்கர்கள் கூறிவரும்  நிலையில், விளக்கம் அளித்திருக்கிறார் ராஜேந்திரபாலாஜி.   

Next Story

திமுகவிற்கு எதிரான கண்டன வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கே.டி. ராஜேந்திர பாலாஜி!

Published on 30/07/2021 | Edited on 30/07/2021

 

KD Rajendra Balaji participating in the protest carrying banners with slogans against DMK


சட்டமன்றத் தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை ஆட்சிக்கு வந்ததும் திமுக நிறைவேற்றவில்லை எனக் கூறி அதிமுகவினர் நேற்றைய முன்தினம் (28.07.2021) தமிழ்நாடு முழுவதும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலின்போது, திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும், குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ. 1,000 தரப்படும், நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படும், பெட்ரோல் - டீசல் விலை ரூ. 5  குறைக்கப்படும் என  பல்வேறு  வாக்குறுதிகள் முன்வைக்கப்பட்டன. 

 

ஆனால் தேர்தலின்போது உறுதியளித்தபடி திமுக பல அறிவிப்புகளைச் செயல்படுத்தவில்லை என்று கூறி, திமுக தன் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி அதிமுகவினர் தங்கள் வீடுகளுக்கு வெளியே பதாகைகளை ஏந்தி போராட்டம் நடத்த வேண்டும் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் கேட்டுக்கொண்டனர்.​ கரோனா விதிகளின்படி தொண்டர்கள் கூட்டம் கூடாமல், அவரவர் வீட்டு வாசலிலேயே முழக்கமிட வேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டது. அதன்படி விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பாக முன்னாள் அமைச்சரும் விருதுநகர் மேற்கு மாவட்ட கழகச் செயலாளருமான கே.டி. ராஜேந்திரபாலாஜி தலைமையில், மாவட்டம் முழுவதும் அவரவர் வீடுகள் முன்பு திமுகவிற்கு எதிரான பதாகைகளை ஏந்தி, அதிமுகவினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

 

KD Rajendra Balaji participating in the protest carrying banners with slogans against DMK

 

சிவகாசி அருகே திருத்தங்கல்லில் கே.டி. ராஜேந்திரபாலாஜி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.எஸ்.ஆர். ராஜவர்மன், எதிர்கோட்டை சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகிக்க, அதிமுக நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர். ஸ்ரீவில்லிபுத்தூரில் சட்டமன்ற உறுப்பினர் மான்ராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம் முழுவதும் ஒன்றியச் செயலாளர்கள், நகரச் செயலாளர்கள், மாவட்ட மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ‘பொய்யைச் சொல்லி, புரட்டைச் சொல்லி ஆட்சிக்கு வந்துட்டீங்க! சொன்ன வாக்குறுதிகள் என்னாச்சு?’, ‘அஞ்சமாட்டோம்; அஞ்சமாட்டோம்! பொய் வழக்குக்கு அஞ்சமாட்டோம்!’, ‘விடியல்கார அண்ணாச்சி! பெட்ரோல் டீசல் விலை என்னாச்சு?’, ‘திமுக அரசே நீட் தேர்வை ரத்துசெய்!’ என்பன போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும், கோஷமிட்டும் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.