Skip to main content

“பிக்பாஸ் முடிந்ததும் கமல் அரசியலுக்குத் திரும்புவார்!” -கே.டி.ராஜேந்திரபாலாஜி கேலி!

Published on 17/08/2019 | Edited on 17/08/2019

 

சிவகாசி அருகிலுள்ள எரிச்சநத்தம் கிராமத்தில் குடிமராமத்துப் பணிகள் மூலமாக கண்மாய்களைத் தூர்வாரும் பணிகளைத் துவக்கி வைத்து பூமி பூஜை போட்ட பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார் தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி .

 

k

 

“அமெரிக்காவில் வாழும் தமிழர்களின் மூலமாக புதிய தொழிற்சாலைகளை கொண்டு வருவதற்காகத்தான் முதல்வர் லண்டன் செல்கிறார். ஸ்டாலினுக்கு எங்களைக் குறை கூறுவது தான் வேலை. மத்திய அரசின் அனுமதியோடு மாநில அரசுக்கு தேவையான திட்டங்களை கொண்டு வருவதற்காகத்தான் வெற்றிகரமான பயணங்களை மேற்கொள்ளவிருக்கிறார். எடப்பாடியாரின் வெற்றிக்கொடி அமெரிக்காவில் நாட்டப்படும். நல்லவர்கள் யார் ஆதரவு கொடுத்தாலும் அதிமுக ஏற்றுக்கொள்ளும். பாஜகவோடு நல்ல உறவில் உள்ள இயக்கம் அதிமுகதான். தேசியத்தின் பார்வையில் பாஜக எடுக்கும் முடிவுகள் அனைத்தும் அதிமுகவை கவர்ந்துள்ளது. 

 

b

 

திமுக பிரிவினையைத் தூண்டக்கூடிய கட்சி. தமிழக முதல்வர் எடப்பாடியார் தேசியத்தையும் தெய்வீகத்தையும் மதிக்கக்கூடியவர். அதிமுக ஆட்சியில் ஒரு சிறு எறும்புக்குக்கூட இடையூறு இருக்காது. திமுக தீவிரவாதத்திற்கு ஆதரவான நிலைப்பாடு எடுக்கிறது. மத்திய உள்துறை எடுக்கும் பட்டியலில் இந்திய இறையாண்மைக்கு எதிராகச் செயல்படுபவர் பட்டியலில் திமுக மாட்டினால் நாங்கள் என்ன செய்ய முடியும்? மாட்டினால் மாட்டியது தான். எந்த ஒரு திட்டமாக இருந்தாலும் அது நல்ல திட்டமாக இருந்தால் எந்த அரசியல் தலைவர்கள் சொன்னாலும் ஏற்றுக் கொள்வோம். அதில் எங்களுக்கு மாறுபட்ட வேறுபட்ட கருத்து இல்லை. 

 

அமமுகவில் போட்டியிடுவதற்கு வேட்பாளா்கள் இல்லை. அந்தக் கட்சியில் இருந்தவர்கள் அனைவரும் எங்களிடம் வந்து விட்டார்கள். தேர்தல் களத்தில் அதிமுக,  திமுக தான் போட்டியிடும். அதில் அதிமுகதான் வெற்றிபெறும். அதை திமுகவினர் வேடிக்கை பார்ப்பார்கள்.

 

திமுகவினருக்கு சுதந்திர உணர்வு இருக்கிறதா?  இவர்கள் வெள்ளைக்காரனிடம்  காட்டிக்கொடுத்த இயக்கத்திலிருந்து வந்தவர்கள் போல் பேசுகிறார்கள். கமல்ஹாசன் கட்சி திடீரென பெய்த மழையில் முளைத்த காளான் போல.  திடீரென வருவார்கள்; போய் விடுவார்கள் தற்போது பிக்பாஸ் பாஸ் நிகழ்ச்சி நடக்கிறது. பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்தவுடன் கமல் மீண்டும் அரசியலுக்கு வருவார்.” என்றார்.  


 

சார்ந்த செய்திகள்

Next Story

ராஜேந்திர பாலாஜி மீதான மோசடி புகார்; இறுதிக்கட்டத்தில் போலீஸ் விசாரணை!

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
complaint against Rajendra Balaji Police investigation in the final stage

அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தபோது ஆவின் மற்றும் அரசுத் துறைகளில் வேலை வாங்கித் தருவதாக கூறி பல்வேறு நபர்களிடம் மூன்று கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இத்தகைய சூழலில் அவர் தலைமறைவானார். அதன்பின்னர் போலீசார் அவரை அதிரடியாக கைது செய்தனர்.

இதனைத் தொடர்ந்து ராஜேந்திர பாலாஜி உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று தற்போது ஜாமீனில் உள்ளார். அதே சமயம் நல்லதம்பி என்பவர் ராஜேந்திர பாலாஜி மீதான மோசடி புகார் தொடர்பான இந்த வழக்கின் விசாரணை மிகவும் மந்தமாக நடப்பதாகவும், அதனால் இதனை வேறு விசாரணை அமைப்புக்கு மாற்ற வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில் இந்த மனு மீதான விசாரணை இன்று (11.04.2024) நீதிபதி ஜெயச்சந்திரன் அமர்வு முன்பு நடைபெற்றது. அப்போது காவல்துறை தரப்பில் வழக்கறிஞர் முகிலன், “இந்த வழக்கின் புலன்விசாரணை இறுதிக் கட்டத்தில் உள்ளது. விரைவில் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும். எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்” என வாதிட்டார். இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி நல்லதம்பியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Next Story

விருதுநகர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் ராஜேந்திர பாலாஜி மீண்டும் ஆஜர்

Published on 15/02/2022 | Edited on 15/02/2022

 

kt rajendra balaji

 

அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி, அரசு வேலை வாங்கித்தருவதாகக் கூறி ரூ.3 கோடி வரை மோசடி செய்ததாகப் புகார் அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர், கடந்த ஜனவரி 5ஆம் தேதி ராஜேந்திர பாலாஜியை கைது செய்தனர். அதன்பிறகு, உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்ட ராஜேந்திர பாலாஜி, கடந்த சனிக்கிழமை விருதுநகர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் விசாரணைக்காக ஆஜரானார். அப்போது அவரிடம் 11 மணி நேரம் தொடர் விசாரணை நடைபெற்றது.

 

இந்நிலையில், இன்றும் விசாரணைக்காக ராஜேந்திர பாலாஜி அழைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது விருதுநகர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் அவர் ஆஜராகியுள்ளார். அவரிடம் விருதுநகர் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.