
மக்கள் ஒற்றுமை மற்றும் இந்திய வளமை ஆகியவற்றை மையப்படுத்தி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 3,700 கிலோ மீட்டர் தூரத்தை 148 நாட்கள் நடந்து சென்று பொதுமக்களை சந்திக்கிறார். இந்த யாத்திரையில் திரளான காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்க வைப்பது குறித்து ஆலோசனை கூட்டம் திண்டுக்கல்லில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மக்களவை உறுப்பினர்கள் திருநாவுக்கரசு, முன்னாள் மாநிலத் தலைவர் தங்கபாலு ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர். இக் கூட்டத்திற்கு திண்டுக்கல் மாவட்ட மாநகர காங்கிரஸ் தலைவர் மணிகண்டன் தலைமை தாங்கினார் கூட்டத்திற்கு பின் மாநில தலைவர் அழகிரி பத்திரிகையாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் கடந்த ஒரு வருடமாக மு .க.ஸ்டாலின் ஆட்சி சிறப்பாக உள்ளது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது. பெரிய சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை. காவல்துறையினர் துரிதமாக நடவடிக்கை எடுத்து குற்றச் சம்பவங்களை கட்டுப்படுத்தி வருகின்றனர். இந்தியாவின் பொருளாதாரம் மோசமான நிலையில் உள்ளது. இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி மிகவும் குறைந்துள்ளது. GST வரி உயர்வு மக்களை வாட்டி வதைக்கிறது. பிஜேபி மோடி அரசு 20 கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ரூ 5.5 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்து உள்ளது. மத்திய அரசின் இந்த செயலை காங்கிரஸ் வன்மையாக கண்டிக்கின்றது. ஏழைகளுக்கு விவசாய கடன் தள்ளுபடி இல்லை, மாணவர்களுக்கு கல்விக் கடன் தள்ளுபடி கிடையாது விவசாயத்துக்கு இலவச மின்சாரத்தை தடை செய்ய வேண்டும் என பிரதமர் கூறுகிறார். ஆனால் பொதுமக்களிடம் வரியாக வசூல் செய்த பணத்தை கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்த்து வருகிறார் மோடி.
மத்திய அரசின் இந்த தவறான கொள்கையின் காரணமாக இந்தியாவின் வல்லமை குறைந்து வருகிறது. பிஜேபி தலைவரை திமுக தலைவர் சந்தித்து பேசவில்லை பிரதமரை முதல்வர் என்ற முறையில் தமிழக முதல்வர் சந்தித்துப்பேசி நடைமுறையில் உள்ள பழக்கம். பிரதமர் மோடியை தமிழக முதல்வர் சந்திப்பது நடைமுறையில் உள்ளது தான். பிஜேபி இந்தியா முழுவதும் 270 எம்எல்ஏக்களை விலை பேசி வாங்கி உள்ளனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை கலைத்து வருகின்றனர். இது மிகப் பெரிய ஜனநாயக படுகொலையாகும். 5ஜி அலைக்கற்றையில் ஐந்தரை லட்சம் கோடி கிடைக்கும் என மத்திய அரசு தெரிவித்தது. ஆனால் தற்பொழுது கிடைத்திருப்பது ஒன்றரை லட்சம் கோடி மட்டுமே. குறைவாகச் சென்றதை அடுத்து டெண்டரை ரத்து செய்து புதிதாக டெண்டர் அறிவித்திருக்க வேண்டும் அப்படி செய்திருந்தால் கூடுதலாக கிடைத்திற்கும். அதை செய்யாமல் மத்திய அரசு அதில் பெரிய ஊழலை செய்துள்ளது. நேரு குடும்பத்தைச் சேர்ந்தவர்களே காங்கிரஸ் கட்சியின் தலைவராக வருவார்கள் அதில் எந்த மாற்றமும் கிடையாது'' என்று கூறினார்.