Skip to main content

ரகோத்தமன் மறைவுக்கு கே.எஸ். அழகிரி இரங்கல்!

Published on 12/05/2021 | Edited on 12/05/2021

 

hk

 

சிபிஐ முன்னாள் அதிகாரி ரகோத்தமன், கரோனா தொற்று காரணமாக சென்னை திருமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த சில தினங்களாக சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில், இன்று (12.05.2021) காலை அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். அவருக்கு வயது 72. இவர் ராஜீவ் காந்தி கொலை தொடர்பான விசாரணை அதிகாரி குழுவில் இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்நிலையில், தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் அவரின் மறைவையொட்டி இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், "மத்திய புலனாய்வுத் துறையில் (சிபிஐ) 36 ஆண்டுகளுக்கு மேலாக அர்ப்பணிப்போடு பணியாற்றிய கே. ரகோத்தமன் கரோனா தொற்று காரணமாக காலமான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் துயரமும் அடைந்தேன். மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலையை விசாரிக்க, மத்திய புலனாய்வுத் துறையின் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் தலைமை விசாரணை அதிகாரியாக இவர் நியமிக்கப்பட்டார். அப்பணியில் 10 ஆண்டுகாலம் கடுமையாக உழைத்து குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதில் முக்கியக் காரணமாக இருந்தவர். 

 

இதனால், அவரது உடல்நலம் கூட பெரிதும் பாதிக்கப்பட்டது. மத்திய புலனாய்வுத் துறையிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு, நிறையப் புத்தகங்களை எழுதி வெளியிட்டார். அதில், மகாத்மா, இந்திரா, ராஜீவ் படுகொலையைப் பற்றி அவர் எழுதிய புத்தகங்கள் குறிப்பிடத்தக்கவையாகும். இதன் மூலம் அந்தப் படுகொலைகள் நிகழ்த்துவதற்குப் பின்னாலே இருந்த சதித் திட்டத்தைத் தெளிவாக எடுத்துக் கூறியவர். தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்று துணிவுடன் கருத்துகளைக் கூறியவர். இதன்மூலம் உண்மைகளை வெளிப்படைத் தன்மையோடு வழங்கியவர். ரகோத்தமன் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'ராமர் கோவில் கட்ட அத்தனை லட்சம் கோடி உங்களுக்கு எங்கிருந்து வந்தது'-கே.எஸ்.அழகிரி கேள்வி

Published on 22/02/2024 | Edited on 22/02/2024
nn

ராமர் கோவில் கட்டுவதற்கு அத்தனை லட்சம் கோடி உங்களுக்கு எங்கிருந்து வந்தது என முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி பேசுகையில், ''நான் ஒரு கேள்வி கேட்கிறேன். ரொம்ப கொச்சையான கேள்விதான். கோயில் கட்டினால் ஆட்சிக்கு வந்திட முடியுமா? ஒரு கோவிலை கட்டி விட்டால் ஆட்சிக்கு வந்து விட முடியும் என எந்த முட்டாள் நினைப்பான். கொஞ்சம் யோசித்துப் பாருங்கள் எனக்குத் தெரிந்து எங்கள் கிராமங்களில் கும்பாபிஷேகம் செய்தவர்கள் எல்லாம் அடுத்த பஞ்சாயத்து போர்டு எலக்சனில் தோற்று இருக்கிறார்கள். காரணம் மக்கள் அதற்காக வாக்களிப்பது இல்லை.

அது வேறு இது வேறு. இன்றைக்கு அயோத்தியில் நடைபெற்று இருக்கின்ற ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு இந்திய அரசாங்கத்தினுடைய பணமோ, உபி அரசாங்கத்தினுடைய பணத்தையோ நீங்கள் தண்ணியாக செலவிடுகிறீர்களே. அது எப்படி நியாயமாகும். ஒரு மதச்சார்பற்ற நாட்டில் எப்படி அதைச் செய்ய முடியும்? எந்த நியாயம் எந்த சட்டம் அதை அனுமதிக்கிறது. நீங்கள் ரயிலை எல்லாம் இலவசமாக அனுப்புகிறீர்கள். எப்படி அது சாத்தியம். யார் அதற்கு பணம் கட்டியது? இன்றைக்கு அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு அத்தனை லட்சம் கோடி உங்களுக்கு எங்கிருந்து கிடைத்தது. அதற்கு கணக்கு காட்ட முடியுமா? ராமருக்கான புகழைக் கெடுத்து விடாதீர்கள் இதைத்தான் நான் பாஜகவிற்கு, ஆர்எஸ்எஸ்க்கும் சொல்லிக் கொள்வது. அவர் அப்பழுக்கற்றவராக இருந்தார். ஆனால் அவருடைய பெயரை பாழ்படுத்துகிறீர்கள் நீங்கள். அது தவறு என்பதை நாம் பரப்புரையாக கொண்டு செல்ல வேண்டும். அச்சப்படக்கூடாது'' என்றார்.

Next Story

“கோயில் திறப்பது அர்ச்சகர் வேலை; பிரதமர் வேலை அல்ல” - கே.எஸ். அழகிரி

Published on 16/02/2024 | Edited on 16/02/2024
Opening the temple is the priest's job, PM has no job, says KS Azhagiri

‘டெல்லியில் உரிமை கேட்டுப் போராடும் விவசாயிகளை அராஜக முறையில் அடக்க நினைக்கும் பாஜக மோடி அரசின் விவசாயிகள் விரோதச் செயலைக் கண்டித்தும் விவசாயிகள் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு ஆதார விலையைச் சட்டமாக்க வேண்டும்.  மின்சார சட்டம் 2023 ரத்து செய்ய வேண்டும். தொடர்ந்து இலவச மின்சாரம் வழங்கிட வேண்டும். வேளாண் சட்டப் போராட்டத்தில் டெல்லியில் இறந்த 715 விவசாய குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கிட வேண்டும்’ உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிதம்பரத்தில் காங்கிரஸ் கட்சித் தலைமையில் அனைத்துக் கட்சிகள் கலந்துகொண்ட மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு எஸ்.கே.எம் விவசாய சங்க கூட்டமைப்பின் உறுப்பினர் இளங்கீரன் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி  கலந்துகொண்டு விவசாயிகளின் போராட்ட நோக்கங்கள் குறித்து விளக்க உரை ஆற்றினார். இதில் கட்சியின் மாநிலச் செயலாளர் சித்தார்த்தன், நகரத் தலைவர் மக்கீன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் எஸ்.ஜி. ரமேஷ்பாபு, தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழுவின் மாநிலத் துணைத் தலைவர் மூசா, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், சிதம்பரம் நகரச் செயலாளர் ராஜா,  தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட துணைச் செயலாளர் வாஞ்சிநாதன்,  விவசாய சங்கத் தலைவர்  ரவீந்திரன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி தமிழ்வாணன் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளைச் சார்ந்த  200க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு மத்திய அரசைக் கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய  கே.எஸ். அழகிரி, “அமைதியான முறையில் விவசாயிகள் ஒரு ஆண்டு போராட்டத்தை நடத்தி உலகையே வியக்க வைத்தார்கள். அதன் அடிப்படையில் 3 அவசர வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற்றார் மோடி. அப்போது கொடுக்கப்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்றாததை கண்டித்து விவசாயிகள் மீண்டும் வந்து கண்ணீர் புகைக்குண்டு வீசினாலும் காந்திய வழியில் போராடி வருகிறார்கள். அவர்கள் கேட்பதெல்லாம் சாதாரண விஷயம் தான். வேளாண் விளைப் பொருட்களுக்கு ஆதார விலை நிர்ணயம் செய்ய வேண்டும். சாமிநாதன் கமிஷன் பரிந்துரையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றுதான். இதனை மோடி அரசு பொருட்படுத்தாமல் விவசாயிகளை வீதியில் போராட வைக்கிறது. ஆனால் காங்கிரஸ் கட்சியின் தலைவர் கார்கே, ஆட்சிக்கு வந்தவுடன் முதல் பணியாக ஆதார விலை மற்றும் சாமிநாதன் கமிஷன் அறிக்கையை நடைமுறைப்படுத்துவோம் எனக் கூறியுள்ளார். ஆனால் 10 ஆண்டு ஆட்சியில் இருந்த மோடியால் உறுதி அளிக்க முடியவில்லை.

டெல்லியில் விவசாயிகள் வாழ்வாதாரத்திற்காக போராடுகிறார்கள். அவர்களை பார்க்காமல் மோடி அபுதாபியில் நாராயண் கோயிலை திறந்து வைக்க போயிருக்கிறார். கோயில் திறப்பது அர்ச்சகர் வேலை அது பிரதமர் வேலை அல்ல.  வீடு கிரகப் பிரவேசம் செய்வது போல், மோடி ஊர் ஊரா கோயில் கிரகப் பிரவேசம் செய்து வைக்கிறார். இது பிரதமருக்கு அழகு அல்ல. விவசாயிகளை வன்முறையாளர்களாகவோ, போராட்டக்காரர்களாகவோ அவர்களுக்கு எதிராகத் துப்பாக்கியோ, கண்ணீர் புகை குண்டையோ பயன்படுத்துவது தவறு இதனை மோடி உணர வேண்டும்.  

காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கை முடக்கி உள்ளார்கள். வங்கி கணக்கை முடக்கி காங்கிரஸ் கட்சியை அழிக்கலாம் என மோடி முடிவு செய்துள்ளார். மணிப்பூர் மாநிலத்தில் தொடர்ந்து கலவரம், வன்முறை நடைபெற்று வருகிறது. ராணுவ தளத்தில் இருந்து எடுத்துச் சென்ற 3 ஆயிரம் துப்பாக்கிகள் ஆர்.எஸ்.எஸ் மற்றும் சங் பரிவார கும்பலிடம் உள்ளது. அதனை திரும்ப பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தல் பத்திரம் ரத்து என்ற மகத்தான தீர்ப்பு அனைவர் மத்தியில் வரவேற்பை அளித்துள்ளது” என்று கூறினார்.