krishnagiri woman arrested

Advertisment

கிருஷ்ணகிரி மாவட்டம் மணடிப்பட்டி பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் பழனிச்சாமி வயது 30. இவர் கள்ளக்குறிச்சி அடுத்துள்ள மாமந்தூர் பகுதியில் உள்ள ஒரு பேக்கரியில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். கடந்த 28ஆம் தேதி தியாகதுருகம் அருகிலுள்ள பிரிதிவிமங்கலம் கிராம ஏரிக்கரை பகுதியில் மர்மமான முறையில் உடலில் காயங்களுடன் பழனிச்சாமி இறந்து கிடந்துள்ளார்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்துபோன பழனிச்சாமி கழுத்து நெறிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக மருத்துவ பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து இதை கொலை வழக்காக பதிவு செய்தனர் போலீசார். இதையடுத்து கள்ளக்குறிச்சி எஸ்.பி.ஜியாவுல் ஹக், டி.எஸ்.பி. ராம நாதன் ஆகியோரின் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி, சப்-இன்ஸ்பெக்டர் நந்தகோபால் சங்கராபுரம் சப் இன்ஸ்பெக்டர் திருமால் ஆகியோர் கொண்ட ஒரு தனிப்படை அமைத்தனர்.

இந்த தனிப்படையினர் குற்றவாளிகளை பிடிக்க பல்வேறு கோணங்களில் விசாரணை செய்தனர். அதில் தியாகதுருகம் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் இறந்து போன பழனிச்சாமி சம்பவத்தன்று பிரியாணி பொட்டலம் வாங்கி சென்றதும் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. அப்போது அவருடன் ஒரு பெண்ணும் சென்றுள்ளார் என்பதை உறுதிப்படுத்திய போலீசார், அந்த கோணத்தில் விசாரணையை துரிதப்படுத்தினர். பழனிச்சாமி உடன் சென்ற அந்த பெண் யார் என்பது குறித்து தீவிர விசாரணை செய்தனர்.

Advertisment

அதில் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள இலுப்பையூர் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை என்பவரது மனைவி 37 வயது கோமதி என்பது தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவாக இருந்த கோமதியை தேடி பிடித்து விசாரணை செய்ததில் அவருக்கு பல்வேறு ஆண்களுடன் தொடர்பு இருந்தது தெரிய வந்துள்ளது. மேலும் கோமதி போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், இறந்துபோன பழனிச்சாமிக்கும் எனக்கும் நீண்ட நாட்களாகவே பழக்கம் இருந்து வந்தது. சம்பவத்தன்று இருவரும் இரவு நேரத்தில் கள்ளக்குறிச்சியில் இருந்து தியாகதுருகம் வந்தோம் அப்போது பழனிச்சாமி மது போதையில் இருந்தார். தியாகதுருகம் பகுதியில் இருந்த ஒரு ஓட்டலில் பிரியாணி வாங்கி கொண்டு பிரிதிவிமங்கலம் ஏரிப் பகுதிக்கு சென்றோம். அங்கு பிரியாணியை சாப்பிட்டுவிட்டு இருவரும் தனிமையில் இருந்தோம். பின்னர் பழனிச்சாமி குடிபோதையில் என்னை எட்டி உதைத்தார். இதனால் எங்களுக்குள் சண்டை வந்தது. இதில் ஆத்திரமடைந்த நான் பழனிச்சாமியின் கழுத்தை துணியால் இறுக்கினேன். அவர் இறந்து போனதை தெரிந்து கொண்டு அவரிடமிருந்த 3500 ரூபாய் பணம் செல்போன் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு தலைமறைவாகி விட்டேன். இவ்வாறு கோமதி வாக்குமூலம் அளித்துள்ளார்.

கோமதி பழனிச்சாமியுடன் பழக்கம் ஏற்படுத்தியது போன்று விழுப்புரம், கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, கடலூர், விருத்தாசலம் ஆகிய பகுதிகளுக்குச் சென்று இதேபோன்று பல்வேறு ஆண்களுடன் பணத்திற்காக தொடர்பில் இருப்பது தனியாக இருக்கும் ஆண்களை அழைப்பதும் அப்படி தனிமையில் இருக்கும்போது அவர்களை தாக்கி பணம் நகை செல்ஃபோன் ஆகியவற்றை பறித்துச் செல்வதும் என செயல்பட்டுள்ளார். இவர் மீது இதுபோன்ற வழக்குகள் பல காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளது தெரியவந்துள்ளது. தற்போது பழனிச்சாமியை கழுத்தை நெறித்துகொலை செய்த வழக்கில் கோமதி தியாகதுருகம் போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட கோமதியை மருத்துவ பரிசோதனைக்கு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ போலீசார் சேர்த்துள்ளனர் பிறகு நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைக்க உள்ளனர்.