/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/kk-sp-ins-art.jpg)
திருப்பத்தூரைச் சேர்ந்த ஒரு இளம் பெண் ஒருவரும், இளைஞர் ஒருவரும் கிருஷ்ணகிரி பேருந்து நிலையம் அருகே உள்ள மலைக்கு நேற்று முன்தினம் (19.02.2025) சென்றனர். அங்கு அவர்கள் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த 4 பேர், இவர்கள் 2 பேரையும் மிரட்டியுள்ளனர். அதோடு அந்த பெண்ணை 2 பேர் கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. இதனை மற்ற 2 பேரும் வீடியோவாக எடுத்து இருவரையும் மிரட்டியுள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்த செல்போன், நகைகள், கையில் இருந்த 7 ஆயிரம் ரூபாய், வங்கிக் கணக்கில் இருந்த 7 ஆயிரம் ரூபாய் என மொத்தம் 14 ஆயிரம் ரூபாய் உள்ளிட்டவற்றை வழிப்பறி செய்துள்ளனர்.
அதன் பின்னர் 4 பேரும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் நடத்திய விசாரணையில் கிருஷ்ணகிரியைச் சேர்ந்த சுரேஷ் (வயது 23), கலையரசன் (வயது 22), அபிஷேக் (வயது 21) மற்றும் நாராயணன் (வயது 22) ஆகியோர் இந்த குற்ற செயலில் ஈடுபட்டது எனத் தெரியவந்தது. இதனையடுத்து கலையரசன், அபிஷேக் ஆகிய இருவரை இன்று (21.02.2025) காலை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக இருந்த இரண்டு பேரை வலைவீசி போலீசார் தீவிரமாகத் தேடி வந்தனர்.
இந்நிலையில் பொன்மலை குட்டை என்ற இடத்தில் உள்ள பெருமாள் கோயில் பகுதியில் சுரேஷ், நாராயணன் என்ற இரண்டு இளைஞர்களும் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்குச் சென்ற போலீசார் இருவரையும் பிடிக்க முயன்றனர். அப்போது அவர்கள் இருவரும் போலீசாரை கத்தி உள்ளிட்ட கூர்மையான ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். மேலும் அங்கிருந்து தப்ப முயன்றனர்.
இதனால் போலீசார் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் துப்பாக்கிச்சூடு நடத்தி இருவரையும் போலீசார் பிடித்தனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் சுரேஷ் என்ற இளைஞருக்குக் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. நாராயணுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை, துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் உதவி காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)