
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டம், சாமல்பட்டி பகுதியைச் சேர்ந்த எட்டு வயது சிறுமி ஒருவர் தன்னுடைய நிலத்திற்கு சென்றுவிட்டு (4/10/2022) மாலை 5 மணிக்கு வீடு திரும்பியுள்ளார். அப்பொழுது அதேபகுதியில் விவசாயம் செய்து வரும் குப்புசாமி என்பவரின் மகன் வந்துள்ளான். சிறுமி சென்றதை பார்த்து, யாரும் இல்லாத சூழ்நிலையில், அந்த இடத்திலே சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளான். இதனால் சிறுமி பதறியடித்துக் கொண்டு அழுதபடியே ஓடி வந்துள்ளார். அங்கு பக்கத்திலிருந்த அப்பகுதியைச் சேர்ந்த விசிக கட்சி செய்தி தொடர்பாளர் தமிழ்வளவன் நடந்ததை கேட்டு உடனடியாக 100 க்கு தொடர்பு கொண்டு நடந்ததை சொல்லியுள்ளார். உடனடியாக சாமல்பட்டி காவல்நிலைய எஸ்.ஐ அமர்நாத், என்ன நடந்தது என்பதை விசாரிக்காமலே, பாதிக்கப்பட்ட மக்களின் மீது 'யாரு நீயா... நீயா...'' என ஆதிக்க தோனியில் பேசியுள்ளார்.
அப்போது விசிகவை சேர்ந்த தமிழ்வளவன் 'சார் நாங்கள்தான் போன் செய்தோம். எங்க ஊர் குழந்தை மீதுதான் அந்த கொடுமை நிகழ்ந்தது. அந்த பையன் ஓடிவிட்டான். அவனை தேடி வழக்குபதிவு செய்ய வேண்டிய நீங்களே, எங்களை குற்றவாளியாக பார்ப்பது எந்த விதத்தில் நியாயம்' என கேட்டுள்ளார். மேலும் 'அந்த பையன் மீது பாலியல் வழக்கான போக்சோ வழக்கு போடுங்க' என சொல்லியுள்ளார். அதற்கு ''நீ யார் அந்த வழக்கு போடு இந்த வழக்கு போடு என சொல்வதற்கு. போய் உன் வேலையை பாரு'' என சொல்லியுள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் முற்றியுள்ளது.

உடனடியாக வழக்குப்பதிவு செய் என போராட்டக் களத்தில் இறங்க, இதனால் ஆத்திரமடைந்த எஸ்.ஐ போராட்டம் செய்த தமிழ்வளவன் மீது துப்பாக்கியை எடுத்து அவரது நெஞ்சின் மீது வைத்து மிரட்டியுள்ளார். உடனடியாக அங்கு வந்த இன்ஸ்பெக்டர் பத்மாவதி ''சுட்டுத்தள்ளு அவன'' என தனது பழைய பகையை வைத்து தகாத வார்த்தையால் திட்டியுள்ளார். இதனால் அங்கு தள்ளுமுள்ளு நடைபெற்றுள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட தமிழ்வளவன் ஊத்தங்கரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுவரையிலும் போலீசார் சென்று நடந்தது என்னவென்று கேட்கவில்லை, வழக்குப்பதிவும் செய்யவில்லை, ஆனால் மாறாக வழக்கு தொடுத்தவரின் மேல் வழக்கு 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளதாக தெரியவருகிறது. இதுகுறித்து இன்ஸ்பெக்டர் பத்மாவதியிடம் கேட்ட போது, ''அதுபோன்ற எந்த வழக்கும் வரவில்லை. அதுபோல எதுவும் நடக்கவே இல்லை'' என மறுத்தார். இதுகுறித்து கிருஷ்ணகிரி எஸ்.பி. சரோஜ்குமார் தாகூரிடம் கேட்டபோது, ''அதுபோன்ற எந்த தகவலும் வரவில்லை உடனடியாக விசாரித்து நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)