KRISHNAGIRI INCIDENT POLICE INVESTIGATION

Advertisment

கிருஷ்ணகிரி அருகே, குடும்பச் செலவுக்கு பணம் கொடுக்காமல் நித்தமும் மதுபோதையில் சுற்றித்திரிந்த கணவனுடன் வாழப்பிடிக்காமல் விஷம் கலந்த உணவை மகளுக்கு சாப்பிடக் கொடுத்து கொலை செய்துவிட்டு, தாயும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே புக்கசாகரத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணப்பா (வயது 30). லாரி ஓட்டுநர். இவருடைய மனைவி வெங்கடலட்சுமி (வயது 28). இவர்களுக்கு மதுமிதா (வயது 9), சுஜித் (வயது 4) ஆகிய இரு குழந்தைகள் உள்ளனர். மகள் மதுமிதா, அதே ஊரில் 7- ஆம் வகுப்பு படித்து வந்தாள்.

கணவருக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. கிருஷ்ணப்பா சம்பாதிக்கும் பணத்தை குடும்பச் செலவுகளுக்கு கொடுக்காமல், மது வாங்கச்செலவிட்டு வந்துள்ளார். மேலும், குடிபோதையில் மனைவியைஅடிக்கடி தாக்கி வந்துள்ளார்.

Advertisment

நவ. 7- ஆம் தேதி இரவும், அவர்களுக்குள் தகராறு மூண்டுள்ளது. இதற்கு மேலும் கணவருடன் வாழ்ந்து பயனில்லை என்ற முடிவுக்கு வந்த வெங்கடலட்சுமி, தற்கொலை செய்து கொள்ளத்தீர்மானித்துள்ளார்.

தான் இறந்து விட்டால், தனது மகளை கணவர் சரியாகப் பார்த்துக் கொள்ள மாட்டார் எனக் கருதி அவரையும் கொன்றுவிடத்தீர்மானித்து, மகளுக்கும் விஷம் கலந்த உணவைச் சாப்பிடக் கொடுத்துள்ளார். அதன்பிறகு, தானும் அந்த உணவைத் தின்றுள்ளார். விஷ உணவை சாப்பிட்ட இருவரும் சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தனர்.

மனைவியும், மகளும் மயக்கத்தில் கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த கிருஷ்ணப்பா மற்றும் உறவினர்கள் அவர்களை மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும், சிகிச்சைப் பலனின்றி சிறுமி மதுமிதா உயிரிழந்தாள். ஆபத்தான நிலையில் உள்ள வெங்கடலட்சுமிக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Advertisment

இந்த சம்பவத்தின்போது சிறுவன் சுஜித், பக்கத்து வீட்டுக்கு விளையாடச் சென்றிருந்ததால் அவன் விஷ உணவை சாப்பிடாமல் உயிர் பிழைத்தான். இச்சம்பவம் குறித்து பேரிகை காவல்நிலைய காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.