/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/puka4444.jpg)
கிருஷ்ணகிரியில், பூர்வீக சொத்தைப் பிரித்துக்கொடுப்பதில் முட்டுக்கட்டையாக இருந்ததால் சித்தப்பா, சித்தி இருவரையும்கத்தியால் சரமாரியாக குத்திக்கொன்ற கல்லூரி மாணவரையும், அவருடைய நண்பரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், வீரப்பன் நகரைச் சேர்ந்தவர் ராஜகோபால். இவருக்கு இளங்கோவன் (வயது 58), புகழேந்தி (வயது 55), கரிகாலன் (வயது 50) ஆகிய மூன்று மகன்கள் உள்ளனர். மூவருக்கும் திருமணமாகி, அதே பகுதியில் தனித்தனியாக குடும்பத்துடன் வசிக்கின்றனர். மூவரும் கார்ப்பெண்டர் வேலை செய்துவருவதோடு, சொந்தமாக வீடு அருகே பெட்டிக்கடையும் வைத்துள்ளனர்.
இவர்களுடைய தந்தை ராஜகோபால், ஏற்கனவே இறந்துவிட்டார். அதே பகுதியில், அவருடைய பெயரில் 3 ஆயிரம் சதுர அடி காலி வீட்டு மனை உள்ளது. தந்தை மறைவுக்குப் பிறகு இந்த நிலத்தைப்பிரித்துக்கொள்வதில் அண்ணன், தம்பிகளிடையே தகராறு இருந்து வருகிறது.
இந்த நிலத்தின் ஒரு பகுதியில் புகழேந்தி தேநீர் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், புதன்கிழமை (மே 5), இந்த நிலம் தொடர்பாக சகோதரர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் வாய் வார்த்தைகள் எல்லை மீறிப்போகவே, அக்கம்பக்கத்தினர் அவர்களை சமாதானப்படுத்தி விலக்கிவிட்டனர்.
சொத்து தகராறு தொடங்கியதில் இருந்தே இளங்கோவன் வீட்டில் தினமும் கணவன், மனைவி இடையே தகராறு நடந்து வந்துள்ளது. சொத்து பிரித்துக்கொள்வதில் புகழேந்தி மட்டும் தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வந்துள்ளார்.
இளங்கோவனுக்கு லோகேஷ் (வயது 19) என்ற மகன் உள்ளார். அவர், கிருஷ்ணகிரியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்சி., இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். தன் தந்தையின் நிம்மதியற்ற நிலைக்குத் தனது சித்தப்பா புகழேந்திதான் காரணம் என்றும், அவரை தீர்த்துக்கட்டிவிட வேண்டும் என்றும் லோகேஷ் தீர்மானித்துள்ளார்.
இதையடுத்து லோகேஷ் (வயது 19), அவருடைய நண்பரான காவேரிப்பட்டணம் அம்பேத்கர் தெருவைச் சேர்ந்த குமார் என்பவரின் மகன் சதீஷ் (வயது 19) என்பவரை அழைத்துக்கொண்டு, நள்ளிரவுக்கு மேல், புகழேந்தியின் வீட்டுக்குச் சென்று கதவை தட்டியுள்ளனர். தொடர்ந்து கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு கதவை திறந்து புகழேந்தி வெளியே வந்தார்.
அவரை, கண்ணிமைக்கும் நேரத்தில் லோகேஷ், சதீஷ் ஆகிய இருவரும் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்தினர். அவரின் அலறல் சத்தம் கேட்டு மனைவி பப்பி ராணி (வயது 45) வெளியே ஓடி வந்தார். அவரையும் சரமாரியாக கத்தியால் குத்தினர். இந்தக் கொடூரதாக்குதலில் கணவன், மனைவி இருவரும் நிகழ்விடத்திலேயே பலியாகினர்.
இந்தக் களேபரத்தால் பதற்றத்துடன் வெளியே வந்த பக்கத்து வீட்டில் வசித்து வரும் லோகேஷின் மற்றொரு சித்தப்பாவான கரிகாலன், சித்தி சரஸ்வதி (வயது 42) ஆகியோர் மீதும் கத்திக்குத்து தாக்குதல் நடத்தினர். இதில் கணவன், மனைவி இருவரும் பலத்த காயம் அடைந்தனர். கூட்டம் கூடுவதை அறிந்த அவர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்றுவிட்டனர்.
இச்சம்பவம் குறித்தும், கொலையாளிகள் தப்பிச்சென்றது குறித்தும் கிருஷ்ணகிரி நகர காவல் நிலைய காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், பெங்களூரு சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த சதீஷ், லோகேஷ் ஆகியோரை சந்தேகத்தின் பேரில் அந்த வழியாக ரோந்து சென்ற காவல்துறையினர் மடக்கிப்பிடித்து விசாரித்தனர். அவர்கள் அணிந்திருந்த உடையில் ரத்தக்கறை படிந்திருந்தது. மேலும், முன்னுக்குப் பின் முரணாகவும் பேசினர். விசாரணையில், அவர்கள்தான் மேற்படி சம்பவத்தில் கொலையாளிகள் என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவர்களை ரோந்து காவல்துறையினர் கிருஷ்ணகிரி நகர காவல் நிலைய காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
இதற்கிடையே, சடலங்களை மீட்ட காவல்துறையினர், உடற்கூராய்வுக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கைது செய்யப்பட்ட கொலையாளிகளிடம் நடத்திய விசாரணையில், லோகேஷின் பெற்றோருக்கு தாத்தா சொத்தைப் பிரித்துக்கொடுப்பதில் புகழேந்தி இடையூறாக இருந்ததால் அவரையும், தடுக்க வந்ததால் அவருடைய மனைவியையும் கொலை செய்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து இருவரும் நீதிமன்ற உத்தரவின்பேரில் கிருஷ்ணகிரி மாவட்ட கிளைச்சிறையில் அடைக்கப்பட்டனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)