ADVERTISEMENT

சேலம்: காப்பகத்தில் தங்கியிருந்த மனநலம் பாதித்த சிறுமி கர்ப்பம்! போலீசார் விசாரணை

12:43 AM Sep 09, 2018 | elayaraja

ADVERTISEMENT

சேலத்தில், தனியார் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டு இருந்த, மனநலம் பாதிக்கப்பட்ட 16 வயது சிறுமி கர்ப்பமான விவகாரம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT


சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள தேக்கம்பட்டி வட்டக்காடு பகுதியைச் சேர்ந்த ஒருவரின் 16 வயது மகள், புத்தி சுவாதீனம் குன்றிய நிலையில் சாலையில் திரிந்து கொண்டிருந்தார். எட்டாம் வகுப்பு வரை அந்த ஊரில் உள்ள அரசுப்பள்ளியில் படித்து வந்தாள். திடீரென்று மனநலம் பாதிக்கப்பட்டதால், பள்ளியை விட்டு நிறுத்தி விட்டனர்.


வீட்டில் இருந்து அடிக்கடி எங்காவது ஓடிப்போய்விடும் சிறுமியை தெரிந்தவர்கள் மீட்டு வந்து வீட்டில் ஒப்படைத்து வந்துள்ளனர். தாயார் கூலி வேலை செய்து வருகிறார். மகளின் சிகிச்சை செலவுகளுக்காக அவர் பலரிடம் கடன் பெற்றிருந்தார்.


கடனை அடைப்பதற்காக அவர் கடந்த சில மாதங்களாக சென்னையில் உள்ள ஒருவரின் வீட்டுக்கு குழந்தையை பராமரிக்கும் ஆயா வேலைக்குச் சென்றிருந்தார். இதையடுத்து கடந்த ஜூன் மாதம், மனநலம் பாதித்த மகளை சேலம் ராம் நகரில் உள்ள லைப்லைன் டிரஸ்ட் காப்பகத்தின் பாதுகாப்பில் விட்டுச் சென்றார்.


இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 31ம் தேதி சென்னையில் உள்ள தாயாருக்கு ஃபோன் மூலம் பேசிய தகவல் ஊழியர்கள், உடனடியாக சேலத்துக்கு வந்து மகளை அழைத்துச் செல்லுங்கள் என்று தகவல் கூறினர். சிறுமிக்கு மாத விலக்கு நின்று விட்டதாகவும், வயிறு வழக்கத்தை விட சற்று பெரியதாக இருப்பதாகவும் கூறியுள்ளனர்.


இதையடுத்து சிறுமிக்கு மருத்துவமனையில் பரிசோதனை செய்து பார்த்ததில் அவள் 4 அல்லது 5 மாதம் கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறினர். இதைக்கேட்ட சிறுமியின் தாயார் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக காப்பகத்தில் இருந்து வீட்டிற்கு அழைத்துச் சென்று விட்டார். இதுபற்றி சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் வளர்மதி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.


மனநலம் பாதித்து சாலைகளில் சுற்றித்திரிந்தபோது யாராவது அவரை பாலியல் வன்புணர்வு செய்திருக்கலாம், அதனால் அவர் கர்ப்பமாகியிருக்கலாம் என சந்தேகிக்கின்றனர். இந்நிலையில், அந்தச் சிறுமிக்கு சேலம் அரசு மருத்துவமனையில் நேற்று கருக்கலைப்பு செய்யப்பட்டது.


இதற்கிடையே, லைஃப்லைன் டிரஸ்ட் காப்பகத்தை இன்று மாலை தமிழ்நாடு பெண்கள் அமைப்பினர் முற்றுகையிட்டனர். காப்பக ஊழியர்கள் தரப்பில் கூறும்போது, 'நாங்கள் சிறுமியை பாதுகாப்பாகத்தான் பராமரித்து வந்தோம். இங்கு சேர்க்கப்படுவதற்கு முன்பே எங்காவது தவறு நடந்திருக்கலாம். இதில் காப்பகத்திற்கு எந்த ஒரு சம்பந்தமும் கிடையாது,' என்றனர்.


பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் கூறுகையில், ''இதுபோன்ற நிலைமை வேறு எந்த பெண்ணுக்கும் வரக்கூடாது. அவர் கர்ப்பமாக இருக்கிறார் என்று தெரிந்தபோது கருக்கலைப்பு செய்திருக்கலாம். அல்லது சாலையில் சுற்றித்திரிந்தபோது இரண்டொருமுறை போலீசார் மீட்டு வந்துள்ளனர். அவர்களாவது என் மகளை ஏதேனும் அரசு காப்பகத்தில் சேர்த்திருக்கலாம். இதனால் வீட்டுக்கும் போக முடியாமல், இவளுக்காக வாங்கிய கடனை அடைக்க பணமும் இல்லாமல் கஷ்டப்படுகிறேன்,'' என்று கண்ணீர் விட்டு கதறி அழுதார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT