Skip to main content

சூளகிரி விவசாயியை கொன்றது ஏன்? கொலையாளிகள் வாக்குமூலம்!

Published on 15/05/2020 | Edited on 16/05/2020

 

  Krishnagiri Farmer issue

 

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி கொம்மேபள்ளி அருகே உள்ள அனுமந்தபுரத்தை சேர்ந்தவர் முனிராஜ் (34). விவசாயியான இவர் சொந்தமாக டெம்போ வாகனம் வைத்து ஓட்டி வந்தார். மேலும், சொந்த ஊரில் ஒரு குவாரியில் கல் உடைக்கும் தொழிலும் செய்து வந்தார்.


கடந்த 13ம் தேதி, இரவு 8.30 மணியளவில் வீட்டு வாசலில் நின்றிருந்தார். அப்போது இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம கும்பல், அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றது. இச்சம்பவம், சுற்றுவட்டார கிராமங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உத்தனப்பள்ளி காவல்துறையினர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

 

 


சடலத்தை உடற்கூறாய்வு செய்ய ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. உடற்கூறாய்வு முடிந்த பிறகு சடலம், உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. சடலத்தை பெற்று சென்ற உறவினர்கள் அனுமந்தபுரம் & கெலமங்கலம் சாலையில் கிடத்தி, கொலையாளிகளை உடனடியாக கைது செய்யக்கோரி திடீரென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினர் விரைந்து வந்து அவர்களை சமாதானம் செய்ததை அடுத்து, போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.

காவல்துறை விசாரணையில், அனுமந்தபுரத்தை சேர்ந்த போடியப்பா (20), ஹரீஷ் (25), சீனிவாசன் (22), முனிராஜ் (26), மாதேஸ்வரன் (29) ஆகியோருக்கும் கொலையுண்ட முனிராஜிக்கும் குவாரியில் கல் உடைப்பது தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்தது தெரிய வந்தது. 
 

nakkheeran app



அதை மனதில் வைத்துக்கொண்டுதான் மேற்கண்ட நபர்கள் முனிராஜை தீர்க்கட்டி இருப்பது காவல்துறை விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் ஐந்து பேரையும் வெள்ளியன்று (மே 15) கைது செய்தனர்.

கைதானவர்கள் அளித்த வாக்குமூலத்தில், ''கடந்த சில நாட்களுக்கு முன்பு முனிராஜிக்கும் எங்களுக்கும் தொழில் நிமித்தமாக தகராறு ஏற்பட்டது. இதனால் நாங்கள் அவர் மீது கடும் கோபத்தில் இருந்தோம். அவரை தீர்த்துக்கட்டினால்தான் கல் குவாரியில் நாங்கள் இடையூறின்றி தொழில் செய்ய முடியும் என்ற முடிவுக்கு வந்தோம். அதனால்தான் முனிராஜை திட்டமிட்டு கொலை செய்தோம்,'' என்று வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர்.
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பூச்சிக்கொல்லி மருந்தா? பயிர்க்கொல்லி மருந்தா? - போராடும் விவசாயிகள்! நடவடிக்கை எடுக்கத் தயங்கும் அதிகாரிகள்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Farmers struggle at Pudukkottai District Collectorate

திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் சேர்பட்டி அருகே மறவனூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி செந்தில்குமார் 10 ஏக்கரில் நெல் பயிர் நடவு செய்துள்ளார். கதிர் வரும் நிலையில் இலைசுருட்டுப்புழு காணப்பட்டதால் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள ஒரு தனியார் பூச்சிக்கொல்லி மருந்துக் கடையில் பூச்சிக்கொல்லி மருந்து வாங்கிச் சென்று 8.5 ஏக்கருக்கு தெளித்துள்ளார்.

பூச்சிக்கொல்லி மருந்து தெளித்து சில நாட்களில் பயிர்கள் கருகத் தொடங்கி ஒரு வாரத்தில் முழுமையாக கருகியது. சம்பந்தப்பட்ட மருந்துக் கடையில் கேட்டதற்கு சரியான பதில் இல்லாததால் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டார் விவசாயி செந்தில்குமார். இதனையடுத்து வயலுக்கே வந்து ஆய்வு செய்த வேளாண்துறை அதிகாரிகள் பூச்சிக்கொல்லி மருந்தால் தான் பயிர்கள் கருகிவிட்டதாக சான்றளித்தனர்.

இதனையடுத்து விராலிமலை பூச்சிக்கொல்லி மருந்துக்கடை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், வியாழக்கிழமை தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் துணைச் செயலாளர் சேகர் முன்னிலையில் ஏராளமான விவசாயிகள் கருகிய பயிர்களுடன் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி வந்தனர்.

கருகிய பயிர்களுடன் வந்த விவசாயிகளை ஆட்சியர் அலுவலகத்திற்குள் அனுமதிக்காததால் நுழைவாயிலிலேயே கருகிய பயிர்களை கொட்டியும் கையில் வைத்துக் கொண்டும் ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர். அங்கு வந்த போலீசாரும் வருவாய்த் துறை அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாகக் கூறிய பிறகு ஆட்சியர் அலுவலக நுழைவாயில் போராட்டத்தை விவசாயிகள் முடித்துக் கொண்டனர்.

ஆனால் வேளாண்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் பிச்சத்தான்பட்டியில் திருச்சி மாவட்ட விவசாயிகள் இருவர் செல்போன் கோபுரத்தில் ஏறிவிட்டனர். அதேபோல மற்றொரு குழு விவசாயிகள் விராலிமலை வேளாண் இணை இயக்குநர் அலுவலகத்திற்குச் சென்ற விவசாயிகள் அலுவலகத்திற்குள் நுழைந்து நடவடிக்கை எடுக்கும் வரை போகமாட்டோம்  என்று அங்கேயே படுத்துவிட்டனர்.

அதன் பிறகே சம்பந்தப்பட்ட விராலிமலை பூச்சிக்கொல்லி மருந்துக் கடையை அதிகாரிகள் மூடினர். பூச்சிக்கொல்லி மருந்து கேட்டால் பயிர்க்கொல்லி மருந்து கொடுத்து 8.5 ஏக்கர் நெல் பயிர்களைக் கொன்ற பூச்சி மருந்துக்கடை உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். கடையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு கீரமங்கலத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு காலாவதியான பூச்சிக்கொல்லி மருந்துகளை புதிய லேபிள் ஒட்டி புதிய மருந்தாக விற்பனைக்கு வைத்திருந்த சுமார் 1500 மருந்துப் பாட்டில்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் இப்போது நடவடிக்கை எடுக்க தயக்கம் ஏன் என்ற கேள்வி எழுப்புகின்றனர்.

Next Story

காதலை கைவிட மறுத்ததால் ஆத்திரம்!

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
Rage for daughter refusing to give up love and incident happened in krishnagiri

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே பட்வாரப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவருக்கு காமாட்சி (33) என்ற மனைவியும், ஸ்பூர்த்தி எனும் 16 வயதில் மகளும் இருந்தார்கள். ஸ்பூர்த்தி, பாகலூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், கடந்த 14ஆம் தேதி வீட்டை வெளியே சென்று ஸ்பூர்த்தி, இரவு நேரமாகியும் வீட்டுக்கு வரவில்லை. இதில், பதற்றமடைந்த ஸ்பூர்த்தியின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர், அவரை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். ஆனால், அவர்கள் எங்கு தேடியும் ஸ்பூர்த்தி கிடைக்கவில்லை.

இந்த நிலையில், நேற்று முன் தினம் (16-03-24) இரவு பட்வாரப்பள்ளி பகுதியில் உள்ள ஏரியில் ஒரு இளம்பெண் பிணமாக கிடந்தார். இதனை கண்ட அங்கிருந்தவர்கள், இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், இளம்பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

அந்த விசாரணையில், ஏரியில் பிணமாக கிடந்தது ஸ்பூர்த்தி என்பதும், அவர் கொலை செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்தது. மேலும், அவர்கள் நடத்திய விசாரணையில், ஸ்பூர்த்தியும், பாகலூர் அருகே முத்தாலி பகுதியைச் சேர்ந்த சிவா (25) என்ற இளைஞரும் நீண்ட காலமாக காதலித்து வந்துள்ளனர். இந்த விவகாரத்தை அறிந்த ஸ்பூர்த்தியின் பெற்றோர், அவரது காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும், ஸ்பூர்த்தி தனது காதலை கைவிடவில்லை என்று கூறப்படுகிறது. 

இதில் ஆத்திரமடைந்த ஸ்பூர்த்தியின் தந்தை பிரகாஷ், தாய் காமாட்சி ஆகியோர், மாணவியை கடுமையாக தாக்கி கொலை செய்துள்ளனர். மேலும், மாணவியின் உடலை சாக்கு மூட்டையில் அடைத்து மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்று அந்த பகுதியில் ஏரியில் வீசியுள்ளதாக தெரியவந்தது. இதனையடுத்து, பிரகாஷ், காமாட்சி மற்றும் இவர்களுக்கு உடந்தையாக இருந்த ஸ்பூர்த்தியின் பெரியம்மா மீனாட்சி (36) ஆகிய 3 பேரையில் போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். காதலை கைவிடாததால், பெற்றோரே மகளை கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.