Skip to main content

ஜெலட்டின், டெட்டனேட்டர், 50 கிலோ வெடிபொருட்கள் பறிமுதல்!

Published on 20/08/2020 | Edited on 20/08/2020

 

krishnagiri district youth police seized

 

கிருஷ்ணகிரி அருகே, இருசக்கர வாகனத்தில் ஜெலட்டின், டெட்டனேட்டர் மற்றும் 50 கிலோ வெடி பொருள்களை சட்ட விரோதமாக கடத்தி வந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

 

கிருஷ்ணகிரி மாவட்டம் குப்பம் என்.ஹெச். சாலையில் குருவிநாயனப்பள்ளி சோதனைச்சாவடி உள்ளது. இங்கு, ஊத்தங்கரை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு எஸ்எஸ்ஐ ரவிச்சந்திரன், கந்திக்குப்பம் காவல்நிலைய எஸ்எஸ்ஐ மயில்வாகனன் ஆகியோர் கடந்த 17- ஆம் தேதி இரவு, வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

 

அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை நடத்தினர். வாகனத்தில் மாட்டி இருந்த ஒரு பையை சோதனை செய்தபோது அதில், 200 ஜெலட்டின் குச்சிகள், அவற்றை வெடிக்க செய்யும் 400 டெட்டனேட்டர் உபகரணங்கள் மற்றும் 50 கிலோ வெடி மருந்து ஆகியவை இருந்தன. இதுகுறித்து, அந்த வாகனத்தை ஓட்டி வந்த நபரிடம் விசாரித்தபோது, கிருஷ்ணகிரி மாவட்டம் பழைய பேட்டை அம்ருதீன் தெருவை சேர்ந்த அப்துல் லத்தீப் (32) என்பது தெரிய வந்தது.

 

ஆந்திர மாநிலம் குப்பத்தில் உள்ள ஒரு கல் குவாரியில் இருந்து கிருஷ்ணகிரிக்கு வெடிபொருட்களை அனுமதியின்றி எடுத்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து அப்துல் லத்தீப்பை காவல்துறையினர் கைது செய்தனர். அவர் வந்த வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது. எதற்காக வெடி பொருள்களை கொண்டு வந்தார், யாருக்காக கொண்டு செல்கிறார், யாரிடம் வங்கினார் என்ற விவரங்களை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் ஒருவர் பெட்ரோல் ஊற்றி எரிப்பு; போலீசார் விசாரணை

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
In broad daylight, someone poured petrol and set it on fire; Police investigation

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பட்டப்பகலில் சித்தப்பா மீது மகனே பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அடுத்து உள்ள சவரக்கோட்டை பிரிவு பகுதியில் வசித்து வருபவர் வடமலை. அவருடைய மகன்கள் சின்னவன் மற்றும் மணி. மணியின் மகன் செந்தில். கடந்த நான்கு நாட்களுக்கு முன்னதாக செந்தில் அவருடைய விவசாய நிலத்தில் அறுவடை பணிக்காக டிராக்டரில் சென்றுள்ளார். அப்பொழுது சித்தப்பா சின்னவன் மற்றும் செந்தில் ஆகியோருக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இது தொடர் பிரச்சனையாக இருந்து வந்த நிலையில் இருதரப்பினரும் காவேரிப்பட்டினம் போலீசாரிடம் புகார் அளித்தனர். போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் சித்தப்பா சின்னவன் தீவனக்கடை ஒன்றில் இருந்த பொழுது கடைக்குச் சென்ற செந்தில் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை அவர் மீது ஊற்றி பற்ற வைத்தார்.

இதில் உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்த சின்னவனை அங்கிருந்தவர்கள் நேற்று தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பட்டப்பகலில் ஒருவர் மீது பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட சம்பவம் கிருஷ்ணகிரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Next Story

நெடுஞ்சாலைத்துறை அலட்சியத்தால் பறிபோன இளைஞரின் உயிர்!

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
  life of the youth lost due to the negligence of the highway department!

கள்ளக்குறிச்சியில் இருந்து ஏமப்பேர், காரனூர் செல்லும் சாலையில் ஜெ.ஜெ நகர் என்ற இடத்தில் சாலை சீரமைப்பு பணிக்காக நெடுஞ்சாலைத்துறையினரால் பாலம் கட்டப்பட்டு வருகிறது. அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுபோன்ற நெடுஞ்சாலைத்துறை பணிகள் நடைபெறும் இடத்தில் முன்னெச்சரிக்கை விளம்பரங்கள் வைப்பது வழக்கம்.ஆனால்  தற்போது அதையெல்லாம் பல இடங்களில் முன்னெச்சரிக்கை பலகைகள் வைக்கப்படுவதில்லை என நெடுஞ்சாலைத்துறை மீது மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இந்த நிலையில் சாலை சீரமைப்பு பணி நடந்து வரும் ஜெ.ஜெ நகர் பகுதியில் முன்னெச்சரிக்கை பலகை வைக்காததால் பரிதாபமாக ஒருவர் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குதிரைச்சந்தலை பகுதியைச் சேர்ந்த நடேசன் மகன் ராசு(30) நேற்று இரவு தனது இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார்.

அப்போது, சாலையில் பாலம் வேலை நடைபெறுவது குறித்து எந்த முன்னெச்சரிக்கையும் இல்லாததால் சாலையில் அடுக்கப்பட்டிருந்த பாறையில் அவரது இரு சக்கர வாகனம் மோதி விழுந்ததில் சம்பவ இடத்திலேயே ராசு பரிதாபமாக உயிரிழந்தார். நெடுஞ்சாலைத் துறையின் அலட்சியத்தால் தான் ராசு உயிரிழந்துள்ளார் என்று சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.