/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/krishna444.jpg)
கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அருகே உள்ள நாட்றாம்பாளையத்தைச் சேர்ந்தவர் அய்யாத்துரை. இவருடைய மகன் வெங்கடேஷ் (வயது 30), தனியார் நிறுவன தொழிலாளி.
இவருடைய மனைவி தீபா (வயது 26). இவர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. மேலும், 3 வயதில் வர்ணிதா மற்றும் 7 மாதத்தில் தனுஸ்ரீ என இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன.
வெங்கடேஷுக்கும் தீபாவுக்கும் கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்துள்ளது. இதனால் கடும் மன அழுத்தத்தில் இருந்த தீபா, அக். 25ஆம் தேதியன்று, உரிகம் கிராமத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு அழைத்துச் செல்லும்படி கணவரிடம் கேட்டுள்ளார். அதற்கு வெங்கடேஷ், வரும் வெள்ளிக்கிழமை (29.10.2021) அழைத்துச் செல்வதாக கூறியுள்ளார்.
இந்நிலையில், சிறுமி வர்ணிதாவை வீட்டில் தூங்க வைத்துவிட்டு கைக்குழந்தை தனுஸ்ரீயுடன் தீபா திடீரென்று மாயமானார். மாமியார் தங்கம்மா மருமகளையும், பேத்தியையும் பல இடங்களில் தேடிப் பார்த்தார். இதனால் பதற்றமடைந்த அவர், தன் மகனிடமும் அக்கம்பக்கத்தில் உள்ள உறவினர்களிடமும் தீபாவும், கைக்குழந்தையும் காணாமல் போனது குறித்து கூறியதன்பேரில் அனைவரும் பல இடங்களிலும் தேடினர். ஆனால் எங்கு தேடியும் அவர்கள் கிடைக்கவில்லை.
சந்தேகத்தின்பேரில் அந்த ஊரில் உள்ள ஒரு கிணற்றில் தேடிப் பார்த்தபோது தீபா மற்றும் தனுஸ்ரீ இருவரின் சடலங்கள் கிடப்பது தெரியவந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த அஞ்செட்டி காவல்நிலைய காவல்துறையினர், சடலங்களை மீட்டு உடற்கூறாய்வுக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தீபா, முதலில் குழந்தையைக் கிணற்றில் வீசிக் கொன்றுவிட்டு, அதன்பிறகு தானும் குதித்து தற்கொலை செய்திருக்கலாம் என காவல்துறை கருதுகிறது.
இது ஒருபுறம் இருக்க, தீபாவின் தந்தை கிருஷ்ணன், அஞ்செட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், தனது மகளின் சாவில் சந்தேகம் உள்ளதாகவும், தனது மகளிடம் வரதட்சனைக் கேட்டு வெங்கடேஷ் சித்ரவதை செய்ததாகவும், அதனால் அவர் விரக்தியடைந்து குழந்தையுடன் தற்கொலை செய்திருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
இதையடுத்து காவல்துறையினர், சந்தேக மரண வழக்காக பதிவுசெய்து இச்சம்பவம் குறித்து விசாரித்துவருகின்றனர். வெங்கடேஷுக்கும், தீபாவிற்கும் திருமணமாகி 5 ஆண்டுகளே ஆவதால், இதுகுறித்து தேன்கனிக்கோட்டை டிஎஸ்பி கிருத்திகா நேரடியாக விசாரணை நடத்திவருகிறார். ஓசூர் ஆர்டிஓ நிசாத் கிருஷ்ணாவும் விசாரணை நடத்திவருகிறார். கைக்குழந்தையுடன், இளம்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)