krishnagiri district incident police investigation

Advertisment

கெலமங்கலம் அருகே மதுபோதை தலைக்கேறிய நிலையில், நண்பன் என்றும் பாராமல் கல்லால் தாக்கிக் கொலை செய்த சக நண்பர்களைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகே உள்ள கூட்டூரைச் சேர்ந்தவர் அர்ஜூனப்பா. இவருடைய மகன் பழனி (வயது 26). அதே பகுதியைச் சேர்ந்த முனிராஜ் மகன் சாமி (வயது 19) மற்றும் மாதேஷ் என்பவரின் மகன் கோடாளி என்கிற விஜய் (வயது 23). இவர்கள் மூன்று பேரும் நெருங்கிய நண்பர்கள். கூலித்தொழிலாளிகளான இவர்கள், எங்குச் சென்றாலும் ஒன்றாகச் செல்வது, போவதுமாக இருப்பார்கள்.

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை (ஜன. 21) இரவு, மூன்று பேரும் சேர்ந்து அப்பகுதியில் உள்ள சுடுகாடு அருகில் அமர்ந்து மது குடித்தனர்.

Advertisment

அப்போது பழனி, விளையாட்டாக விஜய்யை குச்சியால் அடித்துள்ளார். போதை தலைக்கேறிய நிலையில் இருந்த சாமி, விஜய்யை அடித்தது ஏன் என்று கேட்டபடியே அவரைத் தாக்கியிருக்கிறார். இதனால் இருவருக்கும் பெரிய அளவில் கைகலப்பு ஏற்பட்டது.

அப்போது கீழே கிடந்த கல்லை எடுத்து பழனியின் தலையில் போட்டுள்ளார். ரத்த வெள்ளத்தில் பழனி கீழே சரிந்தார். அவரும் போதையில் இருந்ததால் எதிர்த்துதாக்க முடியவில்லை. அதே கல்லை எடுத்து விஜய்யும், பழனியின் மார்பின் மீது போட்டுள்ளார். இதில், அதே இடத்தில் பழனி உயிரிழந்தார். இதையடுத்து அவர்கள் இருவரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

சனிக்கிழமை (ஜன. 22) காலையில் அந்த வழியாகச் சென்ற சிலர், பழனியின் சடலம் கிடப்பது குறித்து கெலமங்கலம் காவல்நிலையத்திற்குத் தகவல் அளித்தனர்.

Advertisment

சம்பவ இடம் விரைந்த காவல்துறையினர், சடலத்தைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், கெலமங்கலத்தில் ஓரிடத்தில் பதுங்கி இருந்த சாமி, விஜய் ஆகிய இருவரையும் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். இருவரிடமும் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

மது போதையில் நண்பர் என்றும் பாராமல் சக நண்பர்களே கல்லால் தாக்கிக் கொலை செய்த சம்பவம் கெலமங்கலம் சுற்றுவட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.