Skip to main content

கொலையில் முடிந்த வாய்த்தகராறு; மதுபோதையில் வெறிச்செயல்! 

Published on 28/06/2021 | Edited on 28/06/2021

 

 

krishnagiri district incident police investigation

 

தளி அருகே, மதுபோதையில் ஏற்பட்ட வாய்த்தகராறு, கொலையில் முடிந்தது.

 

கிருஷ்ணகிரி மாவட்டம், தளி அருகே உள்ள மதகொண்டப்பள்ளியைச் சேர்ந்தவர் புருஷோத்தமன். இவருடைய மகன்கள் சசிகுமார் (வயது 25) மற்றும் ரவிகுமார் (வயது 21). ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 27) இரவு 09.00 மணியளவில், சசிகுமார் தனது தம்பி மற்றும் நண்பர் தேவதானப்பட்டியைச் சேர்ந்த கிருஷ்ணப்பாவின் மகன் மாதேஷ் (வயது 25) என்பவருடன் மதகொண்டப்பள்ளியில் மது அருந்திக் கொண்டிருந்தார். 

 

அப்போது அதே ஊரைச் சேர்ந்த நஞ்சுண்டப்பா மகன் பிரசன்னா (வயது 35), மல்லேஷ் மகன் சசிதர் (வயது 23), கிரிஷ் ஆகியோரும் அதே பகுதியில் மது அருந்திக் கொண்டிருந்தனர். 

 

அவர்கள் அடிக்கடி அங்குள்ள இருட்டுப் பகுதியில் திறந்தவெளியில் மது அருந்துவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். இரு தரப்பினரும் சகஜமாக அரசியல், சினிமா கதைகளை பேசிக்கொண்டிருந்த நிலையில், திடீரென்று அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில், கைகலப்பாக உருவெடுத்தது. 

 

போதையில் இருந்த பிரசன்னா தரப்பினர், மதுபாட்டிலை உடைத்து சசிகுமார், ரவிகுமார், மாதேஷ் ஆகியோரை சரமாரியாகத் தாக்கினர். மூவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. 

 

இவர்களுடைய அலறல் சத்தம் கேட்டு, அங்கு கிராம மக்கள் திரண்டனர். மக்கள் திரண்டு வந்ததை அறிந்ததும் பிரசன்னா தரப்பினர் அங்கிருந்து மோட்டார் சைக்கிள்களில் தப்பிச்சென்றுவிட்டனர். 

 

பலத்த காயம் அடைந்த மூவரையும் பொதுமக்கள் மீட்டு ஓசூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்து பார்த்ததில், வரும் வழியிலேயே சசிகுமார் இறந்துவிட்டது தெரிய வந்தது. மற்ற இருவருக்கும் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

 

இதுகுறித்து தகவல் அறிந்த தளி காவல் நிலைய காவல்துறையினர் சசிகுமாரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

 

இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் பிரசன்னா, சண்முகம், சசிதர் ஆகிய 3 பேரையும் திங்கள்கிழமை (ஜூன் 28) பிடித்து விசாரித்து வருகின்றனர். மதுபோதை காரணமாக சாதாரணமாக ஏற்பட்ட வாக்குவாதம் கொலையில் முடிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்