கோயம்பேட்டிலிருந்து ஊர் திரும்பியவருக்கு கரோனா தொற்று... கிராம எல்லையில் தடுப்பு அமைத்த பொதுமக்கள்... 

Village

சென்னை கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் சிலருக்கு கரோனா நோய்ப் பரவியதையடுத்து அங்குப் பணி செய்த கூலித் தொழிலாளர்கள் உயிர் பயத்தில் அவரவர் ஊர்களுக்கு வந்து கொண்டுள்ளனர். அந்த அடிப்படையில் இரண்டு நாட்களுக்கு முன்பு கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள தொண்டல்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த சிலர் கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து லாரி மூலம் தங்கள் ஊருக்கு வந்து சேர்ந்தார்கள்.

அப்படி வந்தவர்களில் இரண்டு பேருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவல் திட்டக்குடி வட்டாட்சியர்கள் செந்தில்வேல், ரவிச்சந்திரன் மற்றும் வேப்பூர் வட்டாட்சியர் கமலா மற்றும் மருத்துவ அதிகாரிகள் காவல் துறையினருக்குத் தகவல் அளிக்கப்பட்டது. உடனடியாக அவர்கள் அனைவரும் மருத்துவக் குழுவினருடன் அந்த ஊருக்குச் சென்று அந்த இருவரையும் பரிசோதனை செய்ததில் கரோனா இருப்பது தெரியவந்தது. உடனடியாக அந்த இருவரும் சிதம்பரம் முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மிகுந்த பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டனர். இதையடுத்து தொண்டல்குறிச்சிசெல்லும் சாலை தடுப்பு அமைக்கப்பட்டது.

பெரம்பலூர் மாவட்டம் அத்தியூர் கிராமத்தைச் சேர்ந்த ஒருவருக்கும், அரியலூர் மாவட்டம் நம்மகுணம் கிராமத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் என இதுவரை கோயம்பேட்டில் இருந்து வந்த நான்கு பேருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் திருச்சி, சிதம்பரம் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சையில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

பல்வேறு பகுதிகளிலிருந்து கடலூர் மாவட்டத்திற்கு வருபவர்களை அரசு அதிகாரிகள் மருத்துவக் குழுவினர் காவல்துறை உதவியுடன் அந்தந்த ஊர்களில் அவர்களைத் தனிமைப்படுத்தி வைத்துள்ளனர். அப்படி வைக்கப்பட்டுள்ள அவர்களுக்கு மருத்துவக் குழுவினர் மூலம் உமிழ்நீர் ரத்தம் ஆகியவைகளை எடுத்து பரிசோதனைக்கு அனுப்பி வருகிறார்கள். பரிசோதனைக்குப் பிறகே நோய்த்தொற்று இல்லாதவர்களை அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்க உள்ளனர். இதற்கான பணியை நேற்று விளாங்காட்டூர் என்ற கிராமத்தில் மேற்கொண்டனர்.

சென்னை கோயம்பேட்டிலிருந்து கழுதூர் கிராமத்தைச் சேர்ந்த 29 பேர் கழுதூருக்கு வருகை தந்துள்ளனர். அவர்கள் அனைவரையும் அந்த ஊரில் உள்ள பள்ளி வளாகத்தில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர். அதேபோன்று சிறுப்பாக்கம், காஞ்சரங்குளம், பொயனப்பாடி உட்பட திட்டக்குடி, விருத்தாசலம், வேப்பூர் ஆகிய தாலுகாக்களில் உள்ள பல கிராமங்களுக்கும் சென்னையிலிருந்து வந்தவர்களை உடனடியாக கிராம நிர்வாக அலுவலர் கிராம உதவியாளர்கள் கிராம ஊராட்சி செயலாளர்கள் ஆகியோர் மூலம் அடையாளம் கண்டறியப்பட்டு அவர்களைத் தனிமைப்படுத்தும் பணியைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

http://onelink.to/nknapp

இதேபோன்று அரியலூர் மாவட்டம், பெரம்பலூர் மாவட்டம், விழுப்புரம் மாவட்டத்தில் பல கிராமங்களில் கோயம்பேட்டில் இருந்து வந்தவர்களை அடையாளம் கண்டு தனிமைப்படுத்தி வைத்துள்ளனர். இவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்த பிறகே அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.

சென்னையில் உள்ளவர்களைப் பரிசோதனை செய்து நோய்த்தொற்று உள்ளவர்களைச் சென்னையைச் சுற்றியுள்ள பள்ளி கல்லூரிகளில் வைத்து சிகிச்சை அளிக்க வேண்டும். நோய்த்தொற்று இல்லாத வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களை மட்டும் அவரவர் ஊர்களுக்கு அனுப்பி வைப்பதன் மூலம் தமிழகத்தில் நோய்ப் பரவலைத் தடுக்க முடியும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

corona virus issue koyambedu village
இதையும் படியுங்கள்
Subscribe