ADVERTISEMENT

கோயம்பேடு சந்தையில் கரோனா பாதிப்பு... சென்னை மாநகராட்சி ஆணையருக்கு 11 கேள்விகள் எழுப்பியுள்ள மா.சு!

12:08 PM May 04, 2020 | rajavel

ADVERTISEMENT



கரோனா தொற்றின் பரவலுக்கான ஒரு காரணமாகத் தற்போது மாறி வருகிறது சென்னையிலுள்ள கோயம்பேடு பெருவணிகச் சந்தை! இதுகுறித்து கவனம் செலுத்த வேண்டிய சென்னை மாநகராட்சியின் ஆணையர் பிரகாஷ் ஐ.ஏ.எஸ்.சுக்கு 11 கேள்விகள் கேட்டு கடிதம் எழுதியிருக்கிறார் முன்னாள் மேயர் மா.சுப்ரமணியன் எம்.எல்.ஏ.!

ADVERTISEMENT

கடிதத்தின் துவக்கத்தில், ’கரோனா பாதிப்பு ஏற்பட்டு மாநகர மக்கள் அச்சத்தில் உறைந்துள்ள இடர்மிகு இந்நேரத்தில் எமக்கு ஏற்பட்டுள்ள சந்தேகங்களைச் சரி செய்ய வேண்டும்’ என்கிற எண்ணத்தில் கடிதம் எழுதியதாகத் தெரிவித்திருக்கிறார் மா.சு.! அந்தக் கடிதம் தற்போது பரபரப்பாகி வருகிறது.


1. கரோனா தொற்று தேசிய பேரிடராக மத்திய அரசு மார்ச் 14- ஆம் தேதி அறிவித்ததைத் தொடர்ந்து மார்ச் 17- ஆம் தேதி முதல் தியாகராய நகர் ரெங்கநாதன் தெரு கடைகள் உட்படத் திரையரங்குகள், வணிக வளாகங்கள், சினிமா தியேட்டர்கள், உடற்பயிற்சி மையங்கள், பூங்காக்கள் மூடப்பட்டது. மார்ச் 22- ஆம் தேதி மற்றும் 25- ஆம் தேதி முதல் ஊரடங்கு உள்ளது.

இன்று "கரோனா பாதிப்பின் மையமானது கோயம்பேடு" என்பது தலைப்புச் செய்தி ஆகியுள்ளது. நேற்று இரவு வரை 88 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளார்கள். சுமார் 15,000 கூலித் தொழிலாளர்களும் தினந்தோறும் லட்சக்கணக்கானோரும் ஒன்றுகூடும் "கோயம்பேடு சந்தையை" சென்னை மாநகராட்சி கணக்கில் எடுத்துத் தடுப்பு நடவடிக்கை எடுக்காதது ஏன்?


2. கடந்த நான்கு நாட்களாக அரசு நிர்வாகங்கள் எடுத்து வரும் நடவடிக்கைகள் அனைத்தும் "கண்கெட்டப் பிறகு சூரிய நமஸ்காரம்" என்பதைப் போல் தானே?


3. சென்னையில் திரு.வி.க. நகர், இராயபுரம் மண்டலங்களில் உள்ள 30 வட்டங்கள் மற்றும் கோயம்பேடு வட்டம் ஆகியவற்றை மிக ஆபத்தான வட்டங்களாக அறிவித்து நாம் கடந்த பேரிடர் காலங்களில் செய்வதைப் போல, அந்த வட்டங்களுக்கும் மற்ற மண்டலங்களுக்கும் தனித்தனி ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் Nodal officer-களாக நியமிக்காதது ஏன்? காரணம், இந்த வட்டங்களில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, சில மாநிங்களில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளது. (உதாரணத்திற்கு வார்டு எண் 77-ல் மட்டும் 149 பேர்) அப்படி நியமித்தால் தொற்று பரவுதலை அனைத்து வகையிலும் அதிகாரம்படைத்த அவர்களால் தடுக்க முடியுமே?


4. சென்னையில் மண்டல வாரியாகச் சிவப்பு, ஆரஞ்சு, பச்சை எனப் பிரிப்பதை, வட்ட வாரியாகச் செய்தால் மைக்ரோ ப்ளானிங் மற்றும் நடவடிக்கைக்கு பயன்படுத்த ஏதுவாக இருக்குமே? சென்னையில் உள்ள 200 வார்டுகளில் பாதிக்கும் மேற்பட்ட வார்டுகளில் ஒரு தொற்றாளர் கூட கண்டறியப்படவில்லை என்பது உண்மைதானே?


5. திமுக தலைவர் முக ஸ்டாலின் மேயராக இருந்த போது, ஒவ்வொரு ஆண்டும் பருவமழை தொடங்குவதற்கு முன் மத்திய - மாநில அரசுகளின் சேவைத்துறைகளை ஒருங்கிணைத்து கூட்டங்கள் நடத்தி பொறுப்புகள் பகிர்ந்தளிக்கப்பட்டதே, அதுபோல குலை நடுங்கும் இந்த கரோனா பேரிடர் சமயத்தில் சேவைத்துறைகளை ஒருங்கிணைத்து அத்தியாவசியப் பணிகளை மேற்கொள்ளாதது ஏன்?


6. அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள நிவாரண உதவிகள் வாரியத்தில் பதிவு செய்துள்ளவர்களுக்கு மட்டுமே தரப்படுகிறது. போதுமான விழிப்புணர்வு இல்லாததால் சென்னையில் லட்சக்கணக்கான அமைப்புசாரா தொழிலாளாளர்கள் வாரியத்தில் பதிவு செய்யாமல் உள்ளார்கள் என்பதைத் தாங்கள் அறிவீர்கள்தானே? அப்படிப்பட்டவர்கள் பெரும்பகுதியாக வசிக்கின்ற வடசென்னையில் அவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்குவதில் சிக்கல் இருப்பதைத் தாங்கள் உணராதவரா என்ன?

7. அரிமா சங்கம், ரோட்டரி சங்கம் முதலான தொண்டு நிறுவனங்களோடு இணைந்து ஒரே நாளில் 155 "மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்களை" நடத்தி சென்னை மாநகராட்சி முதன்முறையாக 2007- இல் 'லிம்கா' சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்ததைக் கருத்தில்கொண்டு, அத்தகைய தொண்டு நிறுவனங்களை இதுபோன்ற கஷ்டமான சமயங்களில் பயன்படுத்திக்கொள்வது சரியாக இருக்குமல்லவா?


8. "மூன்று நாட்களில் கரோனா பூஜ்யமாகும்"; "இந்த வைரஸ் பணக்காரர்களை மட்டுமே தாக்கும். ஏழைகளைத் தாக்காது" என்று சொன்ன தமிழக முதல்வரின் ஞான கணிப்பையும் மீறி கோயம்பேட்டில் கொத்தமல்லி விற்றவரும் வாங்கியவருமாகச் சேர்த்து சென்னையின் பாதிப்பு எண்ணிக்கை 1200-ஐ தாண்டி போகும் நேரத்தில் சென்னையில் மிக ஆபத்தான வட்டங்களில் இராணுவம் மற்றும் அவர்களின் மருத்துவத் துறையைப் பயன்படுத்த யோசிக்கலாம் அல்லவா?


9. வரலாறு காணா பேரிடர் நேரத்திலும் அரசின் நிவாரணப் பொருட்களை ஏழை-எளியோருக்கு வழங்கும்போது ஆளும்கட்சியைச் சேர்ந்த 'வட்டம் - பகுதிகளை' கூட்டுச்சேர்த்துக் கொள்வது நியாயமா?

10. 98 சதவீதம் பேருக்கு எவ்விதமான அறிகுறியும் இல்லாத நிலையில் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகச் சொன்ன தாங்கள், அத்தகையவர்களைத் தனி விடுதிகளில் வைத்து கண்காணிப்பதுதானே சரியாக இருக்கும்?


11. கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் முதலானோருக்கு தொற்று ஏற்படுவதைப் பார்க்கும்போது அவர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு உபகரணங்களில் குறைபாடுகள் இருப்பதை உணரமுடிகிறதா? இல்லையா?

என 11 கேள்விகளை எழுப்பியதுடன், ‘’இவைகளைக் குற்றச்சாட்டுகளாக கருதிடாமல் ஆலோசனைகளாக ஏற்று மாநகர மக்களைக் காக்கக் கவனம் செலுத்திட வேண்டுகிறேன்‘’ என்று கடிதத்தை முடித்திருக்கிறார் சென்னை மாநகர முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT