kovilpatti police arrest  thieve

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி புறநகர் பகுதிகளான சுபா நகர், கிருஷ்ணா நகர் மற்றும் காந்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களாக வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளையடித்தது, விலை உயர்ந்த பைக்குக்களை திருடிச் சென்றது உள்ளிட்ட சம்பவம் தொடர்பாக புகாரின் பேரில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்திருந்தனர். அப்பகுதியில் பதிவாகியிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளைக் கொண்டு துப்பு துலக்கினர். இதில் கேமரா பதிவு ஒன்றில் முகமூடி மற்றும் கை கிளவுஸ் உடன் அடையாளம் காணப்பட்ட நபர் திருநெல்வேலி மாவட்டம் களக்காடு பகுதியைச் சேர்ந்த பிரபல முகமூடி கொள்ளையன் சந்திரகுமார் என்பது தெரிய வந்தது.

தொடர்ந்து விசாரணை செய்ததில் போலீசார் கைது செய்ய சென்றால் அவர்களின் கவனத்தை திசை திருப்பி கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பித்துச் செல்லக்கூடிய செல்போன் பயன்படுத்தாத கில்லாடி கொள்ளையன் என்பதும், வயல்வெளி, தோப்பு, சுடுகாடு உள்ளிட்ட பகுதிகளில் மட்டுமே பதுங்கி இருக்கும் வழக்கம் உள்ளவன் என்பதும் போலீஸ் கவனத்துக்கு வந்தது. இதையடுத்து கோவில்பட்டி டிஎஸ்பி ஜெகநாதன், இன்ஸ்பெக்டர் நவநீத கிருஷ்ணன், எஸ்.ஐ. செந்தில்குமார், தலைமை காவலர்கள் செல்லத்துரை, சுரேஷ் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீஸ் டீம் களக்காடு பகுதிக்கு விரைந்தது.

Advertisment

இரண்டு நாட்களாக அங்கு முகாமிட்டு கண்காணித்ததில் களக்காடு அடுத்துள்ள கீழ காடுவெட்டி வனப் பகுதியில் தனியாக இருந்த தோப்பு வீடு ஒன்றில் கொள்ளையன் சந்திரகுமார் பதுங்கி இருப்பதை உறுதி செய்தனர். இதைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் அந்த வீட்டை சுற்றி வளைத்த போலீசார் வனப்பகுதியில் இருந்த மரங்களுக்கு இடையே மறைந்திருந்தபடியே அந்த வீட்டை நோக்கி கற்களை வீசியுள்ளனர். அப்போது அந்த வீட்டில் இருந்து கதவைத் திறந்து வெளியே வந்த கொள்ளையன் சந்திரகுமாரை, தயார் நிலையில் காத்திருந்த போலீசார் சுற்றி வளைத்து துப்பாக்கி முனையில் கைது செய்தனர்.

பின்னர் கொள்ளையன் சந்திரகுமாரை காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து முறைப்படி விசாரணை நடத்தியதில் கடந்த 2011ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு முழுவதும் 55 திருட்டு வழக்குகளில் சிக்கி இருப்பதும், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, விருதுநகர் மற்றும் சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் 16 திருட்டு வழக்குகளில் போலீசால் தேடப்பட்டு வந்த முகமூடி கொள்ளையன் என்பதும் தெரியவந்தது. மேலும், விருதுநகர் மாவட்டத்தில் பிரபல ஜவுளிக்கடை ஒன்றில் கொள்ளையடித்த விலை உயர்ந்த பட்டு சேலைகளை ஊர் ஊராக தலைச்சுமையாக கொண்டு சென்று அரசு அலுவலகங்களில் உள்ள பெண் அலுவலர்களிடம் தள்ளுபடி விலையில் விற்பனை செய்து கல்லா கட்டியிருப்பதும் கண்டுப்பிடிப்பட்டுளது.

இதை தொடர்ந்து போலீசார் முகமூடி கொள்ளையன் களக்காடு சந்திரகுமாரை கைது செய்தனர். அவரிடமிருந்து 3 விலை உயர்ந்த பைக்குகளை பறிமுதல் செய்தனர். பின்னர் கோவில்பட்டி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி நேற்றிரவு பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.

Advertisment

6 மாவட்ட போலீஸூக்கு தண்ணீக் காட்டி கைவரிசையில் ஈடுபட்டு வந்த ஹிட் லிஸ்ட் முகமூடி கொள்ளையன் சந்திரகுமாரை கைது செய்த கோவில்பட்டி தனிப்படை காவல்துறையினருக்கு, எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் பாராட்டு தெரிவித்தார்.

செய்தியாளர் - எஸ்.மூர்த்தி