Skip to main content

தமிழர்களின் அறிவியல் கண்டுபிடிப்புகளை உற்பத்திப் பொருட்களாக மாற்ற கொரியா தமிழ்ச் சங்கம் கோரிக்கை!

Published on 13/05/2020 | Edited on 13/05/2020

 

korea tamil sangam

 

தமிழ் அறிவியல் தொழில்நுட்ப நிபுணர்களின் பயன்தரும் கண்டுபிடிப்புகளை உற்பத்திப் பொருட்களாக மாற்றும் வேலைத்திட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என உலகத்ததமிழ் வர்த்தகக் கூட்டமைப்பின் தலைவரிடம் கொரிய தமிழ்ச் சங்கத் தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

கொரியா தமிழ்சங்கத்தின் தலைவர் முனைவர் இராமசுந்தரம் உலகத் தமிழ் வர்த்தகக் கூட்டமைப்பு (World Tamil Chamber of Commerce WTCC) மற்றும் உலகத்தமிழ் வம்சாவழி அமைப்பு (Global Organization of Tamil Origin) ஆகியவற்றின் தலைவர் செல்வகுமாருடன் கலந்துரையாடினார். அப்போது, தமது அமைப்பு தமிழரின் தொழில் மற்றும் வணிகம் மேம்பட உலகளாவிய ஒருங்கிணைப்புகளை மேற்கொண்டு வருவது குறித்த தகவல்களை செல்வக்குமார் தெரிவித்தார். தமிழ் தொழிலகங்களின் உற்பத்திப் பொருட்களை அறிமுகம் செய்து மக்களிடம் கொண்டு சேர்ப்பதும், இளைஞர்களை பயிற்றுவித்து புதிய தொழில் முனைவோர்களை உருவாக்குவதும், தமிழ் தொழிலதிபர்கள் சந்திக்கும் இடர்களைச் சம்பந்தப்பட்ட அரசுகளுக்கு எடுத்துச் சொல்லி தீர்வு கிடைக்க வலியுறுத்துவது உள்ளிட்ட பணிகளை முன்னெடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

 

அவருடைய தொடர்புக்கு நன்றி தெரிவித்த முனைவர் இராமசுந்தரம் தமிழ் அறிவியல் தொழில்நுட்ப நிபுணர்களின் பயன்தரும் கண்டுபிடிப்புகளை மக்களுக்குப் பயன்படும் வகையில் உற்பத்திப் பொருட்களாக்கும் வேலைத்திட்டத்தை உலகத்தமிழ் வர்த்தக அமைப்பு அமைப்பு முன்னெடுக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டார். அதற்காக தமிழ் கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் தொழிலதிபர்கள் கலந்துகொள்ளும் சந்திப்புக்களை ஏற்பாடு செய்ய வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்தார். அவ்வாறான சந்திப்புகள் புதிய தொழில்நுட்பம் - புதிய வாய்ப்புகள் (New Technology – New Opportunities) மற்றும் தொழில்நுட்பம் உருவாக்குவோருக்கான முதலீட்டு உதவி (Venture Capital Investments) என்கிற வகையில் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்புப் பெருக உதவும் என்ற இராமசுந்தரம், இத்தகைய வேலைத் திட்டங்களுக்கு கொரிய தமிழ்ச் சங்கம் இயன்ற ஒருங்கிணைப்பு உதவிகளை வழங்கத் தயாராக இருக்கிறது என்றும் தெரிவித்தார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

1857 கி.மீ. சைக்கிள் ஓட்டும் போட்டியில் வென்ற கொரியத் தமிழர்

Published on 26/02/2024 | Edited on 26/02/2024
Korean Tamil wins cycling competition

உலகம் முழுவதும் தமிழர்கள் வேலைக்கு சென்றிருக்கிறார்கள். ஆனால், பணிபுரியும் நாட்டில் இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்த்து, சாதனை புரிபவர்கள் மிகவும் சிலரே இருக்கிறார்கள். அப்படி பல துறைகளிலும் இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் சாதனை புரிந்த தமிழர்களைக் கவுரவிக்க, தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் விழா நடத்தி விருது வழங்குகிறது.

2023 ஆம் ஆண்டுக்கான அயலகத் தமிழர் விருது வழங்கும் விழா 2024 ஜனவரியில், சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்றது.  மூன்றாம் ஆண்டாக நடைபெற்ற இந்த அயலகத் தமிழர் மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அறிவியல், தொழில், சமூக சேவை, விளையாட்டு என 8 பிரிவுகளின் கீழ் பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்பட்ட 14 அயலகத் தமிழர்களுக்கு விருதுகளை வழங்கினார். இதில் 58 நாடுகளில் இருந்து தமிழ் வம்சாவளியினர், அமைச்சர்கள், கல்வியாளர்கள், கவிஞர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 218 உலகத் தமிழ்ச் சங்கங்களைச் சேர்ந்த அயலகத் தமிழர்கள் பங்கேற்றனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் விருதுபெற்ற 14 அயலகத் தமிழர்களில், அவர்களில் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகேயுள்ள குதிரைகுத்தி கிராமத்தைச் சேர்ந்த முனைவர் குருசாமி ராமன் தனித்த சிறப்புடையவர். இவருக்கு விளையாட்டில் சாதனை புரிந்த தமிழர் பிரிவில், தமிழ்நாடு அரசின் கணியன் பூங்குன்றனார் விருது, தங்கப் பதக்கத்துடன் பாராட்டுப் பத்திரமும் வழங்கப்பட்டது.

Korean Tamil wins cycling competition

முனைவர் குருசாமி ராமன், கொரியாவில் 1857 கிலோமீட்டர் தூரமுள்ள சைக்ளிங் கிராண்ட் ஸ்லாம் போட்டியில் வெற்றிபெற்ற முதல் இந்தியத் தமிழர் என்ற பெருமையைப் பெற்றவர். இதன்மூலம், தமிழ்நாட்டுக்கும், கொரியாவில் வசிக்கும் தமிழர்களுக்கும் பெருமை சேர்த்துள்ளார்.குதிரை குத்தி கிராமத்தைச் சேர்ந்த குருசாமி – மாரியம்மாள் தம்பதியின் மகனாக, பின்தங்கிய கிராமத்தில் பிறந்த முனைவர் ராமன் தென் கொரியாவில் உள்ள யெங்ணம் பல்கலைக்கழகத்தில் ஜினோமிக்ஸ் பிரிவில் ஆராய்ச்சியாளராகவும் உதவி பேராசிரியராகவும் தென் கொரியாவில் உள்ள யெங்ணம் பல்கலையில் கடந்த பத்து வருடங்களாக பணிபுரிகிறார். முனைவர் ராமன், மனைவி பொன் அருணா மற்றும் மகள் அதிராவுடன் தென் கொரியாவில் வசித்து வருகிறார்.

Next Story

குற்றாலநாத சுவாமிக்கு இஸ்லாமியர் வழங்கிய பழமையான செப்புப்பட்டயங்கள் கண்டுபிடிப்பு

Published on 06/12/2023 | Edited on 06/12/2023

 

Discovery copper plates for eternal ceremonial worship given Muslims Ranganatha Swami

 

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் குற்றாலநாதர் சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலில் இருந்த 5 - பழமையானச் செப்புப்பட்டயங்கள் கண்டறியப்பட்டுள்ளன என்று இந்து சமய அறநிலையத் துறையின் சுவடித் திட்டப் பணியின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் முனைவர் சு.தாமரைப்பாண்டியன் தெரிவித்துள்ளார்.                

 

கண்டறியப்பட்ட செப்புப்பட்டயங்கள் குறித்து அவர் கூறியதாவது:  இந்து சமய அறநிலையத் துறையின் அமைச்சர் பி.கே.சேகர்பாபு இந்துசமய அறநிலையத்துறையின் கீழுள்ள 46,090 கோயில்களில் உள்ள அரிய பழஞ்சுவடிகளையும் செப்புப்பட்டயங்களையும், செப்பேடுகளையும் திரட்டிப் பராமரித்து, பாதுகாத்து நூலாக்கம் செய்ய சுவடித் திட்டப் பணிக்குழு ஒன்றை அமைத்துள்ளார். இத்திட்டப்பணியின் பொறுப்பாளராக இந்துசமய அறநிலையத்துறையின் கூடுதல் ஆணையர் சி. ஹரிப்ரியாவின் வழிகாட்டுதலின் படி, இச்சுவடித்திட்டப் பணிக்குழுவினர் இதுவரை தமிழ்நாட்டிலுள்ள 676 திருக்கோயில்களில் கள ஆய்வு செய்து செப்பேடுகள் 9ம், செப்புப்பட்டயங்கள் 29 - ம், வெள்ளி ஏடுகள் 2 - ம், தங்க ஏடு 1- ம் கண்டுபிடித்துள்ளனர்.

 

இந்நிலையில், இச்சுவடிக் குழுவினர் குற்றாலநாதர் சுவாமி கோயிலில் இருந்த 5 - புதிய செப்புப்பட்டயங்களைக் கண்டறிந்துள்ளனர். அச்செப்பு பட்டயங்களைப் படி எடுத்து ஆய்வு செய்த போது, செப்புப்பட்டயங்களில் 2 செப்புப்பட்டயங்கள் அழகன் பெருமாள் பாண்டியன் மற்றும் சீவலவரகுணராம பாண்டியன் ஆகியோர் பேரில் குற்றாலநாதர் சுவாமிக்கு சாயரட்சை கட்டளை வழங்கியது குறித்தும் 1 செப்புப்பட்டயம் அசாதுவாலாசாய்பு, இசுமாலி ராவுத்தர் முதலான பலர் குற்றாலநாதர் சுவாமிக்கு நித்திய விழா பூசை கட்டளைக்கு தானம் வழங்கியது குறித்தும் கூறுகின்றன. மீதமுள்ள மூன்று செப்பேடுகளில் ஒரு செப்பேட்டில் திருஞானசம்பந்தர் திருக்குற்றாலம் குறித்துப் பாடிய திருப்பதிகப் பாடல்கள் 11 அமைந்து காணப்படுகின்றன. மற்றொரு, செப்பேட்டில் திருநாவுக்கரசர் பாடிய திருஅங்கமாலை பதிகம் எழுதப்பட்டுள்ளது. இதில் 12 பாடல்கள் அமைந்து காணப்படுகின்றன. இறுதியில் குமரகுருபர சுவாமிகள் எழுதிய ஒரு பாடல் காணப்படுகிறது. இப்பட்டயம் கி.பி.1959 ஆம் ஆண்டு எழுதப்பட்டுள்ளது.

 

Discovery copper plates for eternal ceremonial worship given Muslims Ranganatha Swami

 

இறுதியில் ஸ்ரீ காசிமடம் திருப்பனந்தாள் என்ற குறிப்பு காணப்படுகிறது. பிறிதோர் செப்புப்பட்டயத்தில் மாணிக்கவாசகர் பாடிய திருவெம்பாவையின் 20 பாடல்கள் எழுதப்பட்டுள்ளன. இறுதியில் குமரகுருபர சுவாமிகள் எழுதிய பாடல் ஒன்றும் காணப்படுகிறது. செப்பேடு கி.பி.1958ல் எழுதப்பட்டுள்ளது. இறுதியில் காசிமடம் திருப்பனந்தாள் என்ற குறிப்பும் காணப்படுகிறது. அழகன் பெருமாள் பராக்கிரமப்பாண்டியன், பாண்டியர்கள் மதுரையில் வீழ்தப்பட்ட பின்பு தென்பாண்டி நாட்டுப் பகுதிகளில் சிற்றரசர்களாகப் பாண்டியர் குலத்தவர் ஆட்சி செய்து வந்துள்ளனர். அவ்வாறு ஆட்சி செய்து வந்த பாண்டியர்களில் தென்காசி பாண்டியர்கள், வள்ளியூர் பாண்டியர்கள், செங்கோட்டை பாண்டியர்கள், கயத்தாறு பாண்டியர்கள், நடுவக்குறிச்சி பாண்டியர்கள், கரிவலம்வந்த நல்லூர் பாண்டியர்கள், புலியூர் பாண்டியர்கள் என பலர் ஆட்சி செய்துள்ளனர். இவர்கள் வரலாறு குறித்து ஓலைச்சுவடிகளும் கல்வெட்டுகளும் பட்டயங்களும் கூறுகின்றன. இவர்கள்  ஆட்சி செய்த காலம் கி.பி. 14 - 18 ஆம் நூற்றாண்டிற்கு இடைப்பட்ட காலம் என்று அறிஞர் பெருமக்கள் தெரிவிக்கின்றனர்.

 

குற்றாலநாதர் கோயிலில் உள்ள 2 செப்பேடுகள் அழகன்பெருமாள் பாண்டியன், சீவல வரகுணராம பாண்டியன் ஆகியோர் பெயரில் குற்றாலநாதர் சுவாமி கோயிலுக்கு வழங்கப்பட்ட சாயரட்சை கட்டளை குறித்து பேசுகின்றன. முதல் செப்பேட்டில் சாயரட்சை கட்டளையை நிறுவியவர்கள் பிள்ளைமார் சமூகத்தவர் என்று கூறப்பட்டுள்ளது. அதில் சாயரட்சை கட்டைளைக்கு வருடம் 1 க்கு பல்லக்குகாரர் பொன் 1ம், குதிரைச்சுருட்டிக்காரர் பணம் 5ம், தொழில்செய்து வருவோர் பணம் 2ம், கொத்துக்கார் பணம் 1ம் வழங்கியதாகக் கூறப்பட்டுள்ளது. பிறிதோர் செப்புப்பட்டயத்தில் சாயரட்சை கட்டளையை உபய ராணுவத்தாரும் குடிமை செய்தொழிலாளிகளும் இணைந்து ஏற்படுத்தியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டளைக்கு வருடம் 1க்கு பல்லக்குகாரர் பணம் 10, குதிரை சுருட்டிக்காரர் பணம் 3, ராணுவம் பணம் 1, குடிபடை பணம் 1 என்ற விகிதத்தில் பணம் வழங்கப்பட்டுள்ளது.  பிள்ளைமார் சமூகத்தவர் ஏற்படுத்திய சாயரட்சை கட்டளை விவரம் அடங்கிய செப்பேடு கி.பி.1753 ஆம் ஆண்டு எழுதப்பட்டுள்ளது. உபய ராணுவத்தார் படை எழுதிக் கொடுத்த சாயரட்சை கட்டளை விவரம் அடங்கிய செப்பேடும் கி.பி. 1753 ஆம் ஆண்டு எழுதப்பட்டுள்ளது. மேலும், இவ்விருக்கட்டளைகளையும் காசி மடத்தவர் பரிபாலனம் செய்துவரவேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

 

அழகன்பெருமாள் பராக்கிரமப்பாண்டியனின் காலம் கி.பி. 1473 – 1506 வரை என்று அறிஞர்கள் கூறுகின்றனர். இந்த அழகன்பெருமாள், பராக்கிரமப்பாண்டியனின் வரலாற்றை ‘அழகன்பெருமாள் கதை’ என்னும் ஓலைச்சுவடி தெளிவாக எடுத்துரைக்கிறது. அதாவது, தென்காசியிலிருந்து ஆட்சி செய்த குலசேகரப்பெருமாள் பாண்டியனுக்கு பொன்னின் பெருமாள், தன்மப்பெருமாள் என்ற இரண்டு ஆண்மக்கள் இருந்தனர். மூத்தவன் பொன்னின்பெருமாள் தென்காசி ஆட்சிபீடத்தில் அமர்கிறான். இளையவன் தன்மப்பெருமாள் புலியூரிலிருந்து ஆட்சி செய்கிறான். பொன்னின்பெருமாளுக்கு குலசேகரப்பெருமாள், வீரபாண்டியன் என்ற இரண்டு புதல்வர்கள் பிறந்தனர். தன்மப்பெருமாளுக்கு அழகன்பெருமாள், சீவலமாறன், சின்னத்தம்பி ஆகிய மூன்று புதல்வர்கள் பிறந்தனர். அழகன்பெருமாளும் அவன் தம்பியரும் பல்வேறு போர்கலைகளைக் கற்று மிகப்பெரிய வீரர்களாகத் திகழ்ந்தனர். இந்நிலையில், அழகன்பெருமாளும் அவன் தம்பியரும் வளர்ந்து ஆளான போது அரியணை ஏறிய குலசேகரப்பாண்டியனிடம் இளமுறைக்கூறு (இளைய வாரிசுமுறை பங்கு) கேட்டனர்.  இதனால் கோபம் கொண்ட குலசேகரப் பாண்டியனின் தம்பி வீரபாண்டியனும் அமைச்சர் இராசகுலத்தேவனும் அழகன்பெருமாளையும் அவன் தம்பியரையும் அழித்தொழிக்க முடிவு செய்தனர்.  பல்வேறு சதித்திட்டங்களைத் தீட்டி அவர்களைக் கொலைசெய்ய முயன்றனர் ஆனால் இயலவில்லை.

 

இறுதியில் இராசகுலத்தேவன், “உங்கள் அண்ணன் குலசேகரப்பாண்டியன் சீமையிலும் படைப்பரிவாரத்திலும் கருவூலத்திலும் பாதியைத் தர ஒத்துக்கொண்டான். நீங்கள் உங்கள் அண்ணனைக் காணவாருங்கள்” என்று நயவஞ்சகமாக அழைத்தான்.  அதனை உண்மை என நம்பிய அழகன்பெருமாளும் அவன் தம்பி சீவலமாற பாண்டியனும் குலசேகரப் பாண்டியனைக் காணப் புறப்பட்டு வந்தனர். வரும் வழியில் அமைச்சர் இராசகுலத்தேவன் அவர்களிடம் இருந்த ஆயுதத்தை முதலில் வஞ்சமாகப் பறித்தான். பின்பு அவர்கள் இருவரையும் கொலைசெய்வதற்காக ஏற்படுத்தப்பட்டிருந்த இலங்கம் போன்ற ஒரு இருட்டு அறைக்குள் பிடித்து தள்ளி அறையை சங்கிலியால் பூட்டினான். அறைக்குள்ளே மறைந்திருந்த அறுபது மல்லர்கள் அழகன்பெருமாள் மீதும் அவன் தம்பி சீவலமாற பாண்டியன் மீதும் பாய்ந்தனர். அழகன்பெருமாளும் சீவலமாற பாண்டியனும் வீரயுத்தம் செய்து இறுதியில் இருவரும் மடிந்தனர்.  அண்ணன்மார் இறந்ததை அறிந்த சின்னதம்பியும் தன் உயிரை வாளூன்றிப் பாய்ந்து மாய்த்துக்கொள்ளுகிறான்.  தம்பியர் சூழ்ச்சியால் கொல்லப்பட்டதை ஒற்றன் மூலம் அறிந்து குலசேகரப் பாண்டியன் இராசகுலத்தேவனை வெட்டிக்கொன்று விட்டு தன் உயிரைக் மாய்த்துக்கொள்ளுகிறான். அழகன் பெருமாளும் அவன் தம்பியரும் சூழ்ச்சியால் கொல்லப்பட்டை அறிந்து கயத்தாறு வெட்டும்பெருமாள் பாண்டியன் தென்காசி மீது படையெடுத்து வெற்றி பெற்றான்.

 

மாபலி என்பவனைத் தென்காசியில் அரியணையில் அமரச்செய்தான் என்று ஓலைச்சுவடி குறிப்பிடுகிறது.  மேற்சுட்டிய அழகன்பெருமாள் பாண்டியனையே செப்புப்பட்டயங்கள் குறிப்பிடுகின்றன. மேலும், அழகன்பெருமாள் பாண்டியனை செப்புப்பட்டயங்கள் கோசடிலவன், மாறன், திரிபுவனசக்கரவர்த்தி, கோனேரிமைகொண்டான், ஸ்ரீபெருமாள் என்றெல்லாம் விதந்து பேசுகிறது. மேற்சுட்டிய, இரண்டு செப்புப்பட்டயங்களும் சீவல வரகுணராம பாண்டியன் பற்றியும் குறிப்பிடுகின்றன. சீவல என்பது ‘ஸ்ரீ வல்லவன்‘ என்ற சொல்லின் மருவு ஆகும். வரகுணராம பாண்டியன் தன் பெயருக்கு முன் சீவல எனும் அடைமொழியையும் பெயருக்குப் பின்னால் குலசேகரன் என்ற மூதாதையர் மரபுவழிப் பெயரையும் இணைத்து பயன்படுத்தியதாகவும் பட்டயத்தின் வழி அறிய முடிகிறது. வரகுணராம பாண்டியன் கி.பி. 1613 – 1618 காலகட்டத்தில் ஆட்சி செய்ததாக கல்வெட்டுகள் வழி அறிய முடிகிறது. குற்றாலநாத சுவாமிக்கு இஸ்லாமியர் வழங்கிய நித்திய விழாப் பூசை கட்டளை பற்றி, நெல்லையப்பர் கோயிலில் உள்ள கி.பி. 1751 ஆம் ஆண்டு எழுதப்பட்ட செப்புப்பட்டயம் ஒன்று உள்ளது.                

 

இச்செப்புப்பட்டயத்தில் லாலுகான்சவான்சாயுபு என்பவன் திருநெல்வேலி பகுதியில் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில் நித்திய பூசைக்கு தானம் வழங்கிய செய்தி கூறப்பட்டுள்ளது. அதுபோல, குற்றாதநாதர் சுவாமி கோயிலுக்கு கி.பி. 1848 ஆம் ஆண்டு நித்திய விழா பூசை மற்றும் திருநெல்வேலி காந்தியம்மன் சிறுகாலப் பூசைக்கான கட்டளைக்கு அசாதுவாலசாயுபும் இசுமாலிராவுத்தரும் வேறு சிலரும் சேர்ந்து தானப்பட்டயம் எழுதிக் கொடுத்துள்ளனர். அதில், புடவைசாற்று மற்றும் இறங்குசாற்று கச்சை ஒன்றுக்கு கால்மாகாணியும் (1/64) நடைக்கான திரையாடை ஒன்றுக்கு மாகாணிப் பணமும் (1/16) சின் ஒன்றுக்கு அரை மாகாணி (1/32) வீதமும் வழங்கப்பட்டுள்ளது.  இது ஆண்டுதோறும் 10 மாதங்களுக்குத் தொடார்ச்சியாக வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.  இந்தக் கட்டளைப் பூசை தொடர்ந்து நடத்துவதற்கு தென்காசி, ஆயம்பேட்டை, செங்கோட்டை, புளியறை, பண்பிளி, கடையநல்லூர், சிவராமப்பேட்டை, சுரண்டை முதலான இடங்களில் இருந்த சந்தைத் துறைகளிருந்து வரும் வரித்தொகை வழங்கப்பட வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது என்று பேராசிரியர் சு.தாமரைப்பாண்டியன் தெரிவித்தார்.