
ஆடி கிருத்திகை நாளில் மீன் குழம்பு வைத்ததால் மனைவியை கணவன் தாக்கிவிட்டு, அச்சத்தில் தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சென்னை கொரட்டூர் அக்ரஹாரம் மூன்றாவது தெருவைச் சேர்ந்தவர் குமார். இவரது மனைவி துர்கா அதேபகுதியில் வீட்டு வேலை செய்து வருகிறார். இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். குடிக்கு அடிமையான குமார் அவ்வப்போது குடித்துவிட்டு மனைவி துர்காவுடன் சண்டையிடுவது வழக்கம். அதே நேரம் குடிக்கு அடிமையான குமார் ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டவர் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை எப்பொழுதும் போல மது அருந்திவிட்டு குமார் வீட்டிற்கு வந்துள்ளார். அப்பொழுது மனைவி துர்கா மீன் குழம்பு வைத்து உணவு பரிமாறியதாகக் கூறப்படுகிறது. ஆடி கிருத்திகையான இன்று ஏன் மீன்குழம்பு வைத்தாய் என்று குமார் துர்காவை மிரட்டிய நிலையில், இந்த வாக்குவாதம் முற்றி குமார் துர்காவை தாக்கியுள்ளார். இதனால் துர்கா அங்கேயே சரிந்து விழுந்துள்ளார். தந்தை தாய் சண்டையிடுவதை அறிந்து மகன்கள் இருவரும் அருகில் உள்ள தாயின் சகோதரி வீட்டிற்குச் சென்றுவிட்டனர். மனைவி சரிந்து விழுந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார், மனைவி இறந்துவிட்டதாகக் கருதி அச்சத்தில் தூக்கிட்டுக்கொண்டுள்ளார்.
சிறிது நேரம் கழித்து வீட்டிற்கு வந்த சிறுவர்கள், குமார் தூக்கில் தொங்கிய நிலையில் இருக்க, தாய் பலத்த காயத்துடன் தரையில் கிடப்பதைக் கண்டு அதிர்ந்து போயினர். இதனைக்கண்டு சிறுவர்கள் கூச்சலிட, அக்கம்பக்கத்தினர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்த நிலையில், போலீஸார் குமாரின் சடலத்தை மீட்டு கே.எம்.சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். துர்கா மீட்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.