Skip to main content

கொல்லிமலை மிளகு தோட்டத்தில் காவலர் சடலமாக மீட்பு! கொலையா? போலீசார் விசாரணை!!

Published on 09/09/2021 | Edited on 09/09/2021

 

kollimalai hills police incident police investigation

 

கொல்லிமலையில் உள்ள ஒரு மிளகு தோட்டத்தில் நாமக்கல் காவல் நிலைய காவலரின் அரை நிர்வாண சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அவர் கொல்லப்பட்டாரா அல்லது மரணத்துக்கு காரணம் என்ன என்பது குறித்து காவல்துறையினர் விசாரித்துவருகின்றனர்.

 

நாமக்கல் மாவட்டம், பொட்டிரெட்டிப்பட்டியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மகன் ஆனந்தன் (வயது 34). நாமக்கல் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு பிரிவில் இரண்டாம் நிலை காவலராகப் பணியாற்றிவந்தார். கடந்த 2011ஆம் ஆண்டு காவல்துறையில் பணிக்குச் சேர்ந்தார்.

 

இவருக்கு மது குடிக்கும் பழக்கம் உண்டு. சரியாக பணிக்கு வராமல் அடிக்கடி விடுப்பில் சென்றுவிடுவார். ஆனந்தனின் அலட்சியமான போக்கை காவல்துறை உயரதிகாரிகளும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. அடிக்கடி கொல்லிமலை பகுதிக்குச் சென்று நண்பர்களுடன் மது போதையில் உல்லாசமாக இருந்துவந்துள்ளார். 

 

கடந்த ஜூலை மாதம் 12ஆம் தேதி முதல் அவர் பணிக்குச் செல்லவில்லை. இதுகுறித்து அவர் காவல்துறை அதிகாரிகளுக்கு முறையான தகவலும் தெரிவிக்கவில்லை என்கிறார்கள். 

 

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை (07.09.2021) மதியம், கொல்லிமலை தின்னனூர்நாடு பகுதியில் உள்ள ஒரு மிளகு தோட்டத்தில் ஆனந்தன் அரை நிர்வாண நிலையில் சடலமாகக் கிடந்தது தெரியவந்தது. தலையில் காயம் இருந்தது. மேல் சட்டை அணியாமல் சடலம் கிடந்தது.

 

இதுகுறித்து மலைவாழ் மக்கள், வாழவந்தி நாடு காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்தனர். மாவட்ட எஸ்.பி. சரோஜ்குமார் தாக்கூரும் சடலம் கிடந்த இடத்தில் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

 

ஆனந்தனின் சடலம், உடற்கூராய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆனந்தனின் தந்தை அளித்த புகாரின்பேரில், சந்தேக மரணம் என்ற பிரிவில் வழக்குப் பதிவுசெய்து காவல்துறையினர் விசாரித்துவருகின்றனர்.

 

மது குடிக்கும்போது ஏற்பட்ட தகராறில் யாராவது அவரை அடித்துக் கொலை செய்தார்களா? பெண் விவகாரத்தில் கொல்லப்பட்டாரா? அல்லது இயற்கை மரணமா? என பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். உடற்கூராய்வு அறிக்கை வெளியான பிறகே இந்த வழக்கில் ஓரளவு மர்மம் விலகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்