Advertisment

கோகுல்ராஜ் கொலை வழக்கு: சுவாதியின் தாயாரும் பிறழ் சாட்சியம் ஆனார்!

கோகுல்ராஜ் ஆணவக் கொலை வழக்கில், முக்கிய சாட்சியான சுவாதியின் தாயார் செல்வியும் நீதிமன்றத்தில் பிறழ் சாட்சியம் அளித்தார்.

Advertisment

சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த வெங்கடாசலம் & சித்ரா தம்பதியின் இரண்டாவது மகன் கோகுல்ராஜ் (23). பி.இ., பட்டதாரி. கடந்த 23.6.2015ம் தேதி வீட்டில் இருந்து கிளம்பிச் சென்ற கோகுல்ராஜ், மறுநாள் மாலையில் நாமக்கல் மாவட்டம் தொட்டிபாளையம் ரயில் தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலமாகக் கிடந்தார்.

gukulraj

கோகுல்ராஜின் கல்லூரித் தோழியான நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே உள்ள நடந்தை கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி & செல்வி தம்பதியின் மகள் சுவாதியும், கோகுல்ராஜூம் நெருங்கிப் பழகி வந்தனர். கல்லூரி படிப்பு முடிந்த பின்னரும் அவர்களுடைய நட்பு தொடர்ந்தது.

Advertisment

இருவரும் 23.6.2015ம் தேதியன்று கடைசியாக திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் பேசிக்கொண்டு இருந்தபோது, சேலம் மாவட்டம் சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உள்ளிட்ட ஏழு பேர், கோகுல்ராஜை கடத்திச் சென்றதாக சுவாதி ஏற்கனவே நாமக்கல் மாவட்ட ஜேஎம்&2 நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்திருந்தார்.

கொங்கு வேளாள கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த சுவாதியும், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த கோகுல்ராஜூம் காதலிப்பதாக கருதிய யுவராஜ் உள்ளிட்டோர், அவரை ஆணவக்கொலை செய்து விட்டதாக அப்போது தகவல்கள் பரவின.தற்போது இந்த வழக்கில் சாட்சிகள் விசாரணை நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் கடந்த 30.8.2018ம் தேதி முதல் நடந்து வருகிறது. இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக கருதப்படும் சுவாதி கடந்த செப்டம்பர் 10, 2018ம் தேதி சாட்சியம் அளித்தார். அப்போது, ஏற்கனவே ஜேஎம்&2 நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலத்திற்கு முரணாக பிறழ் சாட்சியம் அளித்தார்.

gukulraj

இந்நிலையில், கோகுல்ராஜ் வழக்கில் அரசுத்தரப்பில் ஐந்தாவது சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ள சுவாதியின் தாயார் செல்வி, இன்று (செப்டம்பர் 18, 2018) நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தார்.குற்றம் சாட்டப்பட்டுள்ள யுவராஜ் உள்ளிட்ட 15 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். யுவராஜ் உள்ளிட்ட 14 எதிரிகளும் நீதிமன்ற வளாகத்திற்கு வழக்கமான நேரத்திற்குள் வந்துவிட்ட நிலையில், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள எதிரி அருணை, எஸ்கார்ட் போலீசார் நீதிமன்றத்திற்கு அழைத்து வர காலதாமதம் ஆனது. இதனால் சாட்சிகள் விசாரணை பகல் 12.45 மணிக்குதான் தொடங்கியது.

சாட்சி கூண்டில் ஏறிய சுவாதியின் தாயார் செல்வியிடம் அரசுத்தரப்பு வழக்கறிஞர் கருணாநிதி கேட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும்...

வழக்கறிஞர்: உங்கள் மகள் சுவாதிக்கு சாமி கும்பிடும் வழக்கம் உண்டா?

செல்வி: உண்டு

வழக்கறிஞர்: அவர் எப்போதாவது தனியாக திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்குச் சென்றிருக்கிறாரா?

செல்வி: தெரியாது

வழக்கறிஞர்: நீங்கள் இருவரும் சேர்ந்து அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்கு போயிருக்கிறீர்களா?

செல்வி: இல்லை

வழக்கறிஞர்: கோகுல்ராஜ் கடத்தப்பட்டதாகச் சொல்லப்படும் 23.6.2015ம் தேதி உங்கள் மகள் சுவாதியும், கோகுல்ராஜூம் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது யுவராஜ் உள்ளிட்ட சிலர் உங்கள் மகளையும், கோகுல்ராஜையும் மிரட்டியதாக உங்கள் மகள் சொன்னதாக ஏற்கனவே போலீசில் வாக்குமூலம் அளித்திருக்கிறீர்கள்...

gukulraj

செல்வி: நான் அப்படி சொல்லவில்லை. நான் சொல்லாததையெல்லாம் போலீசார் எழுதியுள்ளனர்

வழக்கறிஞர்: உங்கள் மகளை வீடியோவில் பார்த்தால் அடையாளம் காட்ட முடியுமா?

செல்வி: முடியும்

வழக்கறிஞர்: அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியிருக்கும் வீடியோ காட்சிகளை போட்டுக் காட்டுகிறோம். அதில் உங்கள் மகள் இருக்கிறாரா? என்று பார்த்துச் சொல்லுங்கள்.

இதையடுத்து சம்பவத்தன்று கோயிலில் உள்ள சிசிடிவி கேமரா&1 மற்றும் கேமரா&5 ஆகியவற்றில் பதிவாகியிருக்கும் வீடியோ காட்சிகள் புரஜக்டர் மூலம் சாட்சி கூண்டுக்கு பக்கத்தில் உள்ள சுவரில் திரையிட்டுக் காண்பிக்கப்பட்டது. 15 நிமிடங்களுக்கு மேலாக அந்த வீடியோ திரையிடப்பட்டது. இரண்டு கேமராவில் பதிவாகியிருந்த வீடியோக்களிலும் உள்ள சில உருவங்களைக் காட்டி, அதில் உள்ளவர்கள் யார் என்று அரசுத்தரப்பு வழக்கறிஞர் செல்வியிடம் கேட்டார்.

அதற்கு செல்வி, வீடியோவில் இருப்பது யார் என்று தெரியவில்லை என்று பதில் அளித்தார்.

வழக்கறிஞர்: சென்னையில் உங்கள் மகள் ஒரு அகாடமியில் படித்து வந்தபோது, அவரிடம் பேசிய யுவராஜ் தரப்பைச் சேர்ந்த ஒருவர், யுவராஜை நீங்கள் அடையாளம் காட்டக்கூடாது என்று மிரட்டியதாக சுவாதி உங்களிடம் சொன்னாரா?

gukulraj

(அப்போது நீதிபதி கே.ஹெச்.இளவழகன் குறுக்கிட்டு, அவர் இதை செவிவழிச்செய்தியாகத்தான் கேட்டுள்ளார். அதனால் அதை ஒரு கேள்வியாக கேட்க வேண்டாம் என்று ஆட்சேபம் தெரிவித்தார்)

இதையடுத்து, செல்வி சிம் கார்டு வாங்குவதற்காக தனது புகைப்படம் ஒட்டி, அதன் கீழே கையெழுத்திட்டு இருந்த ஓர் ஆவணத்தின் நகலைக் காட்டி, அதில் ஒட்டப்பட்டுள்ள புகைப்படத்தில் இருப்பது நீங்கள்தானே என்று அரசுத்தரப்பு வழக்கறிஞர் கேட்டார். அதற்கும் செல்வி, தெரியாது என்று பதில் அளித்தார்.இதையடுத்து, அந்த ஆவணத்தில் குறிப்பிட்டிருப்பது உங்கள் கையெழுத்துதானே? என்று கேட்டார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி, அந்தப் புகைப்படத்தில் இருப்பதே யாரென்று தெரியாது என்று கூறிய பின்னர், கையெழுத்து யாருடையது என்று கேட்கத் தேவையில்லை என்று ஆட்சேபித்தார்.

இவ்வாறு விசாரணை நடந்தது. சுவாதியைப்போல் செல்வியும் பிறழ் சாட்சியம் அளித்ததால், அவரிடம் யுவராஜ் தரப்பு வழக்கறிஞர்கள் குறுக்கு விசாரணை நடத்தவில்லை. இதைத் தொடர்ந்து மதியம் 1.45 மணியளவில் உணவு இடைவேளை விடப்பட்டது. உணவு இடைவேளைக்குப் பின்னர் 3.15 மணிக்கு மீண்டு சாட்சி விசாரணை தொடர்ந்தது. கோகுல்ராஜ் மற்றும் சுவாதியின் நண்பரும் கல்லூரியில் உடன் படித்தவருமான கார்த்திக் ராஜாவிடம் அரசுத்தரப்பு வழக்கறிஞர் விசாரணை நடத்தினார். அவர் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளில் உள்ளது கோகுல்ராஜ் மற்றும் சுவாதிதான் என்று அடையாளம் காட்டினார்.

இதன்பின்னர் அவரிடம் எதிர்த்தரப்பு வழக்கறிஞர் கோபாலகிருஷ்ண லட்சுமண ராஜூ குறுக்கு விசாரணை நடத்தினார். கார்த்திக் ராஜா இந்த வழக்கில் அரசுத்தரப்பில் ஆறாவது சாட்சியாக சேர்க்கப்பட்டு உள்ளார்.அவரைத் தொடர்ந்து, சம்பவத்தன்று ஈரோடு ரயில்நிலைய அலுவலராக இருந்த கதிரேசன், லோகோபைலட் வடிவேல், உதவி லோகோ பைலட் முனுசாமி, கேஎஸ்ஆர் தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் தியாகராஜன் ஆகியோரும் சாட்சியம் அளித்தனர்.

மாலை 5.45 மணிக்கு சாட்சிகள் விசாரணை, குறுக்கு விசாரணை முடிந்தது. இதையடுத்து வழக்கு விசாரணையை அக்டோபர் 1ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி கே.ஹெச். இளவழகன் உத்தரவிட்டார்.

police murder gokulraj
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe