Skip to main content

அ.தி.மு.க. எம்.எல்.ஏ. முன்னெடுத்த திட்டம்! செயல்பாட்டிற்கு கொண்டுவந்த தி.மு.க. அரசு! 

Published on 31/12/2021 | Edited on 31/12/2021

 

Kodiveri Joint Drinking Water Project

 

தி.மு.க.ஆட்சி அமைந்த 6 மாதத்தில் முதன்முதலாக ஒரு சட்டமன்ற தொகுதி மக்களுக்கு முழுமையாக குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் புதிய கூட்டு குடிநீர் திட்டம் செயல்பாட்டுக்கு மிக விரைவில் வர உள்ளது. அதற்காக சோதனை முறையில் குடிநீர் விடப்பட்டுள்ளது.

 

ஈரோடு மாவட்டம், பெருந்துறை தொகுதி மிகவும் வறட்சியான பகுதி. குடிநீருக்கு இப்பகுதி மக்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். இந்த நிலையில், அ.தி.மு.க. ஆட்சியில் அமைச்சராகவும் தொடர்ந்து எம்.எல்.ஏ.வாகவும் இருந்த தோப்பு வெங்கடாஜலத்தின் தொடர் முயற்சியால் பெருந்துறை தொகுதிக்கு புதிதாக கொடிவேரி கூட்டு குடிநீர் திட்டம் அறிவிக்கப்பட்டது.

 

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள பெருந்துறை மற்றும் 7  பேரூராட்சிகள்,  547  ஊரக குடியிருப்புகளுக்கு கொடிவேரி அணையை நீர் ஆதாரமாக கொண்டு ரூ. 227 கோடி செலவில் இந்த கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்த முடிவு செய்து அதற்கான பணிகள்  நடைபெற்று வந்தன. இதற்காக பவானி ஆற்றில் கொடிவேரி கதவணைக்கு மேல்பகுதியில் ஒரு நீரேற்று நிலையத்துடன் கூடிய கிணறு அமைக்கப்பட்டது.

 

இக்கிணற்றிலிருந்து 29,200 மீட்டர் நீளத்துக்கு பிரதான இயல்பு நீர் குழாய் அமைக்கப்பட்டு அதன் மூலம், திங்களூர் அருகே உள்ள 17.23 மில்லியன் லிட்டர் திறனுள்ள சுத்திகரிப்பு நிலையத்துக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. அங்கு நீர் சுத்திகரிக்கப்பட்டு அந்த குடிநீர் தொகுதி முழுக்க 125.695 கிலோ மீட்டர் நீளத்துக்கு நீருந்து குழாய்கள் மூலம் பேரூராட்சி மற்றும் பஞ்சாயத்துகளில்  உள்ள தரைமட்ட நீர் தேக்க தொட்டிகளுக்கு நீர் உந்தப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலமாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட 28 கிராம ஊராட்சிகள், பெருந்துறை, கருமாண்டிசெல்லிபாளையம், காஞ்சிகோவில், நல்லாம்பட்டி, பள்ளபாளையம், பெத்தாம்பாளையம் ஆகிய  பேரூராட்சிகள், சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட நான்கு கிராம ஊராட்சிகள், திருப்பூர் மாவட்டத்தில் ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட 37 ஊராட்சிகள் மற்றும் ஊத்துக்குளி, குன்னத்தூர் பேரூராட்சிகள் முழுமையாக பயன்பெறுகின்றன. 

 

மக்கள் தொகை பெருக்கம் மற்றும் குடிநீர் தேவைக்கு ஏற்ப இந்த புதிய கூட்டு குடிநீர் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலமாக தனி நபருக்கு நாளொன்றுக்கு ஊரகப் பகுதிகளில் 55 லிட்டர் வீதமும், பேரூராட்சி பகுதிகளில் 135 லிட்டர் வீதமும் குடிநீர் கிடைக்கும். முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாஜத்தின் ஏற்பாட்டின்படி தொலைநோக்கு திட்டமாக அதாவது 2050ம் ஆண்டு மக்கள் தொகைக்கேற்ப குடிநீர் பயன்பெறும் வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

 

தி.மு.க. ஆட்சி அமைந்ததும் இத்திட்ட பணிகள் மிக வேகமாக நடைபெற்று வந்தது. சில நாட்களுக்கு முன்பு இந்த பணிகள் அனைத்தும் நிறைவடைந்தது. விரைவில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இக்குடிநீர் திட்டத்தை தொடங்கி வைக்கவுள்ளார். அதனைத் தொடர்ந்து சோதனை ஓட்டம் இப்போது நடைபெற்று வருகிறது. விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் இந்த குடிநீர் திட்டம் மூலம் பெருந்துறை தொகுதியின் மூன்று லட்சம் மக்களின் குடிநீர் தேவை பூர்த்தியாகும்.

 

 

சார்ந்த செய்திகள்