Skip to main content

கொடநாடு: ஜெயலலிதா கார் டிரைவர் கனகராஜ் சகோதரரிடம் விசாரணை... 

Published on 24/08/2021 | Edited on 24/08/2021

 

Kodanadu: Jayalalithaa car driver Kanagaraj brother interrogated ...

 

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கார் டிரைவராக இருந்த கனகராஜின் அண்ணன் தனபாலிடம் ஊட்டி போலீசார் ஒரு மணி நேரம் ரகசிய விசாரணை நடத்தினர்.

 

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி, கொடநாட்டில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான எஸ்டேட்டில் கடந்த, 2017ஆம் ஆண்டு ஏப். 24ம் தேதி கொலை, கொள்ளை சம்பவம் நடந்தது. அப்போது, எஸ்டேட் காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் சயான், வாளையார் மனோஜ், உதயன், மனோஜ் சாமி, ஜித்தின் ஜாய், பிஜின் குட்டி, ஜம்சீர் அலி, தீபு, சதீசன், சந்தோஷ் சாமி ஆகிய 10 பேர் கைது செய்யப்பட்டனர். 

 

இதில், கனகராஜ் 2017 ஏப்., 28ம் தேதி சாலை விபத்தில் உயிரிழந்தார். கொடநாடு சம்பவத்தில், முக்கிய நபராகச் சேர்க்கப்பட்ட கனகராஜ் இறந்ததால் சயான், வாளையார் மனோஜ் உள்ளிட்ட 10 பேர் குற்றச் சாட்டப்பட்டவர்களாகச் சேர்க்கப்பட்டனர்.

 

இந்நிலையில் இன்று மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் கனகராஜ் அண்ணன் தனபாலிடம், எஸ்.பி., ஆசிஷ் ராவத், விசாரணை அதிகாரி வேல்முருகன், குன்னூர் டி.எஸ்.பி., சுரேஷ் ஆகியோர் ஒரு மணி நேரம் விசாரணை நடத்தி, வீடியோவில் பதிவு செய்தனர்.

 

அதேவேளையில், கொடநாடு வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பின்னர் மீண்டும் விசாரணை நடைபெறுவதால் அதற்குத் தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் தீர்ப்பைச் சென்னை உயர்நீதிமன்றம் வரும் வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்தது.

 

மேல் விசாரணை நடத்த உள்ளதால், தங்கள் விருப்பப்படி வாக்குமூலம் தரும்படி மிரட்டல் வருவதாகவும், அனுமதி பெறாமலேயே விசாரணை நடப்பதாக ரவி என்பவர் வழக்கைத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, அரசு தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில், கொடநாடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களைக் கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்துவதற்கே மீண்டும் விசாரணை நடத்தப்படுகிறது. எஸ்டேட் உரிமையாளர் சசிகலாவிடம் இன்னும் விசாரணை நடத்தப்படவில்லை. இது குறித்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட போலீசாரின் மனு நிராகரிக்கப்படவில்லை எனக் கூறப்பட்டது.

 

சார்ந்த செய்திகள்