Skip to main content

கொடநாடு வழக்கு: எப்போது அறிக்கை தாக்கல் செய்யப்படும்? - நீதிபதி கேள்வி

Published on 24/08/2021 | Edited on 24/08/2021

 

Kodanadu case: When will the report be filed? - Judge question

 

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் மேற்கொண்டு விசாரணை நடத்த காவல்துறைக்குத் தடைவிதிக்கக் கோரிய வழக்கின் தீர்ப்பை வரும் வெள்ளிக்கிழமைக்குச் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.

 

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் காவல்துறை சாட்சியாகச் சேர்க்கப்பட்டுள்ள கோவையைச் சேர்ந்த ரவி என்ற அனுபவ் ரவி என்பவர் தாக்கல் செய்த மனுவில், கொடநாடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள கனகராஜ் என்பவரை தனக்குத் தெரியும் எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த வழக்கில் மேல் விசாரணை நடத்த உள்ளதால், தங்கள் விருப்பப்படி வாக்குமூலம் அளிக்கும்படி, பல தரப்பிலிருந்தும் தனக்கு மிரட்டல்கள் வருவதாகத் தெரிவித்துள்ளார். அரசுத்தரப்பில் 41 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு முடித்த நிலையில், இதுவரை குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பு சாட்சிகள் விசாரணை இன்னும் துவங்கவில்லை எனவும், நீதிமன்ற அனுமதியின்றி மேல் விசாரணை நடத்தி வருவதாகவும் கூறியுள்ளார். உயர் நீதிமன்ற உத்தரவின்படி, இந்த  வழக்கை விரைந்து முடிக்கும்படி விசாரணை நீதிமன்றத்துக்கு உத்தரவிடுவதுடன், மேல் விசாரணைக்குத் தடை விதிக்க வேண்டும் எனவும் கோரியுள்ளார்.

 

இந்த வழக்கு நீதிபதி எம்.நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, அனுபவ் ரவி தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஐ.சுப்ரமணியம் ஆஜராகி, சாட்சியங்கள் யாரிடமும் தெரிவிக்காமல், குற்றம்சாட்டப்பட்ட சிலரிடம் மட்டுமே தெரிவித்துவிட்டு, வழக்கை மேற்கொண்டு விசாரிப்பதாக காவல்துறை நீலகிரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ததாகத் தெரிவித்தார். நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்த மறுநாளே விசாரணைக்கு அழைத்ததாகவும் சுட்டிக்காட்டினார்.

 

மற்றொரு மூத்த வழக்கறிஞர் ஏ.எல்.சோமையாஜி ஆஜராகி, குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து, குற்ற வழக்கின் விசாரணையே தொடங்கிய பின் குற்றவாளியிடம் மறு விசாரணை நடத்த முடியாது எனவும், நீதிமன்றத்தின் அனுமதியின்றி சயானிடம் காவல்துறை மறு விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், அனுமதி பெற்றுத் தான் மறு விசாரணை நடத்தப்படுகிறதென முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சட்டசபையில் தவறான தகவலை அளித்துள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.

 

தமிழ்நாடு அரசு தரப்பில் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ஆஜராகி, ஒரு குற்ற வழக்கில் தொடர்புடையவர்களை முழுமையாகக் கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்தவேண்டுமென்ற நோக்கில், விசாரணையை விரிவுபடுத்துவதற்காக நீலகிரி நீதிமன்றத்தில் காவல்துறை மெமோ தாக்கல் செய்யப்பட்டதாகவும், அது நிராகரிக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார். வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சிலர் விசாரணையை விரிவுபடுத்த வேண்டுமென நீதிபதியிடம் கடிதம் கொடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

 

காவல்துறை தரப்பில் அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் முகமது ஜின்னா ஆஜராகி, மனுதாரர் கூறும் குற்றச்சாட்டுகள் அனைத்துமே அனுமானத்தின் அடிப்படையில்  கூறப்படுபவை எனச் சுட்டிக்காட்டினார். மனுதாரர் அனுபவ் ரவி காவல்துறை சாட்சியம் மட்டுமல்ல என்றும், வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களுடன் நெருக்கமானவர் எனவும் சுட்டிக்காட்டினார். காவல்துறை விரிவுபடுத்தப்பட்ட விசாரணையை நடத்தி நீதிமன்றத்தில் தான் அறிக்கை தாக்கல் செய்ய இருப்பதாகவும், அதைப் பொறுத்து நீதிமன்றம் தான் முடிவெடுக்கப் போவதாகவும் சுட்டிக்காட்டினார். 

 

வழக்கில் தொடர்புடையவர்கள் சிலர் மரணம், சிலர் விபத்துக்குள்ளானது போன்ற விஷயங்கள் முன்னர் முறையாக விசாரிக்கப்படவில்லை எனவும் தற்போது முழுமையாக விசாரிக்கப்படுகிறது எனவும் விளக்கம் அளித்தார். அந்த விசாரணைக்கு அழைத்தால் ஆஜராகி விளக்கம் அளிக்காமல், நீதிமன்றத்தை நாடியுள்ளதாகவும், வேண்டுமானால் அவரது வழக்கறிஞர் துணையுடன் காவல் நிலையத்தில் ரவி ஆஜராகலாம் என்றும் விளக்கம் அளித்தார்.

 

கொடநாடு எஸ்டேட்டின் உரிமையாளரான நிறுவனத்தின் இயக்குனரையும் இதுவரை விசாரிக்கவில்லை எனக் குறிப்பிட்டார். அப்போது நீதிபதி குறுக்கிட்டு இவ்வாறு விசாரணையை விரிவுபடுத்திக்கொண்டே போனால் எப்போதுதான் நீலகிரி நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு விளக்கம் அளித்த அரசு தலைமை வழக்கறிஞர், தேவையில்லாமல் யாரையும் துன்புறுத்த வேண்டுமென நோக்கம் இல்லை என தெரிவித்ததுடன், விரிவுபடுத்தப்பட்ட விசாரணையை முடிக்க 8 வார கால அவகாசம் தேவைப்படும் எனத் தெரிவித்தார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கின் மீதான தீர்ப்பை வரும் வெள்ளிக்கிழமைக்கு (ஆகஸ்ட் 27) தள்ளிவைத்துள்ளார்.

 

சார்ந்த செய்திகள்