
நீலகிரி மாவட்டம் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் விசாரணையானது மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கோடநாடு கொலை வழக்கில் ஏற்கனவே காவல் உதவி கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்ட நிலையில் மேலும் நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
இதனால் இந்த வழக்கில் மொத்தம் ஐந்து தனிப்படை அமைக்கப்பட்டு, கடந்த சில மாதங்களாக அரசு சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டது. அதேபோல் கோடநாடு கொலை, கொள்ளையில் தொடர்புடையதாகக் கூறப்படும் ஜெ.வின் கார் ஓட்டுநர் கனகராஜ் உயிரிழந்தது தொடர்பான வழக்கை மீண்டும் போலீசார் கையிலெடுத்து ஒருபக்கம் விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் கொடநாடு கொலை வழக்கில் இரண்டாவது குற்றவாளியாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ள வாளையார் மனோஜுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இரண்டு பேர் அவருக்கு அளித்த உத்தரவாதத்தை ஏற்ற உதகை நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியுள்ளது. வாளையார் மனோஜ் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவின் ஆவணங்களை குன்னூர் கிளைச் சிறைக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில் விரைவில் வாளையார் மனோஜ் விடுவிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.