Skip to main content

கொடநாடு வழக்கு... முன்னாள் முதல்வர் மீதான புகாரை கையிலெடுக்கும் போலீசார்?

Published on 19/08/2021 | Edited on 19/08/2021

 

Kodanadu case ... Police handling complaint against former CM?

 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அடிக்கடி சென்று ஓய்வெடுத்துவந்த கொடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற கொலை, கொள்ளை வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள சயான், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது புகார் தெரிவித்துள்ளதாக கூறப்படும் நிலையில், அந்தப் புகாரை தற்போது காவல்துறையினர் கையில் எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

கொடநாடு கொலை, கொள்ளை விசாரணை மீண்டும் வேகம் பிடித்திருக்கிறது. கடந்த 2 வருடங்களாக எந்தவித முன்னேற்றமும் இல்லாத, 5 தொடர் மரணங்களை உள்ளடக்கிய இந்த வழக்கின் விசாரணைக்காக குற்றம்சாட்டப்பட்ட சயான், வாளையார் மனோஜ் ஆகியோர் கடந்த 13ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகினர். இந்த வழக்கில் அரசு தரப்பில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள உயர் நீதிமன்ற சிறப்பு வழக்கறிஞர் ஷாஜகான், கனகராஜ் ஆகியோர் நடத்திய விசாரணையில் புதிய தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் இந்த வழக்கில் கூடுதல் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் முறையீடு செய்தனர்.

 

அதன்படி உதகை பழைய மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சயானிடம் இதுகுறித்து 3 மணி நேரம் நடைபெற்ற விசாரணையில்  எழுத்துப்பூர்வமாக வாக்குமூலம் பெறப்பட்டது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநராக இருந்த கனகராஜ் தன்னிடம் கூறியபடி, முன்னாள்  முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கூடலூர் பகுதியைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் சஜீவன் ஆகியோரது தூண்டுதலின் பேரில் கொள்ளை சம்பவம் நடைபெற்றது என சயான் வாக்குமூலம் அளித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்போது அதிமுக ஆட்சியில் இருந்ததால் உயிருக்குப் பயந்து தன்னால் உண்மையைக் கூற முடியவில்லை என சயான் வாக்குமூலம் அளித்ததாகவும் கூறப்படுகிறது. மீண்டும் விசாரணைக்கு அழைத்தால் வர வேண்டும் என காவல்துறையினர் அவரிடம் தெரிவித்துள்ளனர். அதேபோல் இந்த வழக்கில் சிலர் பிறழ் சாட்சியாக மாறலாம் என்றும், கூடுதலாக சிலர் சாட்சியங்களாக சேர்க்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்