
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கின் விசாரணையை மீண்டும் கையிலெடுத்துள்ள போலீசார், இது தொடர்பான சாட்சியங்கள் மற்றும் குற்றம்சாட்டப்பட்டவர்களிடம் விசாரணை நடத்திவருகிறது. கோடநாடு கொலை வழக்கில் தொடர்புடையதாகக் கருதப்படும் கனகராஜ், அந்த சம்பவம் நடைபெற்ற ஐந்து நாட்களுக்குப் பிறகு சேலம் மாவட்டம் ஆத்தூரில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது கார் மோதி உயிரிழந்தார். ஆனால், இது எதேச்சையான விபத்து இல்லை என்றும், திட்டமிட்ட படுகொலை என்றும் கனகராஜின் மனைவியும், அவரது உறவினர்களும் தெரிவித்து வந்தனர்.

ஆனால் இது சாலை விபத்து தான் என நீதிமன்றத்தில் வழக்கு முடித்து வைக்கப்பட்ட நிலையில் இது தொடர்பான விசாரணையை மீண்டும் கையிலெடுத்தது காவல்துறை. கனகராஜ் உயிரிழப்பு தொடர்பாக அவரது உறவினர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில், சாட்சியங்களைக் கலைத்ததாக கனகராஜின் சகோதரர் தனபால் உள்ளிட்ட இருவரைத் தனிப்படை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் கனகராஜின் சகோதரரை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்கத் தனிப்படை நீதிமன்றத்தில் அனுமதி கேட்டிருந்த நிலையில், 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீலகிரி நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
Follow Us