Skip to main content

கொடநாடு வழக்கு... விசாரணை ஆதாரங்கள் உதகை நீதிமன்றத்தில் ஒப்படைப்பு!

Published on 01/10/2021 | Edited on 01/10/2021

 

Kodanadu case ... Evidence handed over to nilgiri court!

 

கொடநாடு கொலை வழக்கில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சசிகலா ஆகியோரை விசாரிக்க கோரும் மனுவைச் சென்னை உயர்நீதிமன்றம் நான்கு வாரக் காலத்திற்கு ஒத்தி வைத்துள்ளது. மேலும் தற்போது நடைபெற்று விசாரணைகள் குறித்த கோப்புகள் உதகை நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு அவர் தங்கி வந்த கொடநாடு பங்களாவில் கொலை, கொள்ளை சம்பவம் நடைபெற்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவங்களைத் தொடர்ந்து அச்சம்பவத்தில் தொடர்புடையவர்கள் உயிரிழந்தது வழக்கில் திருப்பங்களை  ஏற்படுத்தியது. இது தொடர்பாக சயான், வாலையர் மனோஜ் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சசிகலா உள்ளிட்டோரை விசாரிக்கக் கோரி குற்றம்சாட்டப்பட்டவர்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் நான்கு வாரக் காலம் அவகாசம் கோரப்பட்ட நிலையில் விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார். 34 பேரிடம் நடத்தப்பட்ட விசாரணை விவரங்கள், ஆதாரங்கள் சீல் வைக்கப்பட்ட கவரில் உதகை நீதிமன்றத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து வழக்கு விசாரணை வரும் 29 ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது நீதிமன்றம்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனுமதி இன்றி நடந்த ஜல்லிக்கட்டு; 10 பேர் மீது பாய்ந்த வழக்கு!

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
Case against 10 people who conducted Jallikattu without permission

ஜல்லிக்கட்டு, வடமாடு போன்ற விளையாட்டுகள் நடத்த தமிழ்நாடு அரசு பல்வேறு விதிமுறைகள், கட்டுப்பாடுகள் விதித்து அனுமதி அளித்து வருகிறது. இதனால் தமிழ்நாட்டில் அதிக ஜல்லிக்கட்டுகள் நடக்கும் புதுக்கோட்டை மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான இடங்களில் இந்த கட்டுப்பாடுகள், விதிமுறைகளால் ஜல்லிக்கட்டு நடத்துவது நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் அரசு விதிமுறைகளை கடைபிடித்து நூறுக்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டுகள் நடந்து வருகிறது.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை(17.3.2024) புதுக்கோட்டை மாவட்டம் வானக்கண்காடு முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் நிகழ்ச்சியை முன்னிட்டு எந்தவித பாதுகாப்பு ஏற்பாடுகளும் இல்லாமல், அரசு அனுமதியும் பெறாமல் 50 க்கும் மேற்பட்ட காளைகளை அவிழ்த்துவிட்டு ஜல்லிக்கட்டு நடப்பதாக வடகாடு போலீசாருக்கு தகவல் கிடைத்து சென்று பார்த்த போது ஜல்லிக்கட்டு நடந்துள்ளது.

இதனையடுத்து வடகாடு காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜாமுகமது கொடுத்த புகாரின் பேரில் கறம்பக்குடி ஒன்றியம் வானக்கண்காடு கிராமத்தைச் சேர்ந்த பட்டுக்கோட்டை (எ) சுந்தராஜ், ராஜேஷ், ராம்குமார், அஜித், ஸ்ரீதரன், வீரையா கருக்காகுறிச்சி தெற்கு தெரு கிராமத்தைச் சேர்ந்த குணா, பாலு, பாஸ்கர், தியாகராஜன் ஆகிய 10 பேர் மீதும் வடகாடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story

கொடநாடு பங்களாவில் சி.பி.சி.ஐ.டி. ஆய்வு!

Published on 07/03/2024 | Edited on 07/03/2024
C.b.C.I.D search in KodaNadu Bungalow

நீலகிரி மாவட்டம், கோத்தகிரியை அடுத்துள்ள கொடநாடு பகுதியில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான பங்களாவில் கொலை மற்றும் கொள்ளைச் சம்பவம் நடைபெற்றது. இந்தச் சம்பவத்தில் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ், வாளையார் மனோஜ், சயான் உள்ளிட்ட 10 பேர்  ஈடுபட்டது தெரியவந்தது. இதில் கார் ஓட்டுநர் கனகராஜ் 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 29 ஆம் தேதி நிகழ்ந்த வாகன விபத்தில் உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு ஜூலை 3 ஆம் தேதி கொடநாடு பங்களாவில் சி.சி.டி.வி. ஆபரேட்டராகப் பணியாற்றி வந்த தினேஷ் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.

இதனையடுத்து கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் 25 ஆம் தேதி ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் தனபால் மற்றும் அவரது உறவினர் ரமேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 26 ஆம் தேதி முதல் இந்த வழக்கில் சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடைபெற்று வருகிறது. அதன்படி கடந்த ஒரு ஆண்டாக சி.பி.சி.ஐ.டி. விசாரணை அதிகாரியாக ஏ.டி.எஸ்.பி. முருகவேல் நியமிக்கப்பட்டு தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் இந்த வழக்கு தொடர்பாக இதுவரை சுமார் 500க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

இந்த வழக்கு உதகை நீதிமன்றத்தில் கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயன் என்பவர், கொடநாடு பங்களாவில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. தடயங்களை அழிக்கும் நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளதால் நீதிமன்றத்தின் சார்பில் நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும் என ஒரு புதிய மனுவைத் தாக்கல் செய்திருந்தார். இதற்கு பதிலளிக்குமாறு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அப்போது நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த குழுவில் சி.பி.சி.ஐ.டி. போலீசார், தடயவியல் துறையினர், பொதுப்பணித்துறை அதிகாரிகள், மின் துறை அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர். இந்த குழுவினர் கொடநாடு பங்களாவிற்கு ஆய்வு செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என சி.பி.சி.ஐ.டி. தரப்பில் மனுவைத் தாக்கல் செய்திருந்தனர்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, கொடநாடு பங்களாவை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய சி.பி.சி.ஐ.டி.க்கு உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் கொடநாடு எஸ்டேட்டில் சி.பி.சி.ஐ.டி. எஸ்.பி. மாதவன் தலைமையில் விசாரணை அதிகாரி ஏ.டி.எஸ்.பி. முருகவேல், புலனாய்வு அதிகாரிகள், தடயவியல் நிபுணர்கள் மின் துறை அதிகாரிகள், பொதுப்பணித்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் என 20 பேர் கொண்ட குழுவினர் இன்று (07.03.2024) நேரில் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த ஆய்வின் போது கொடநாடு பங்களாவில் ஏதேனும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளனவா என சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக ஆய்வு செய்து வருகின்றனர். இது தொடர்பான வழக்கு உதகை அமர்வு நீதிமன்றத்தில் நாளை (08.03.2024) விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.