
கோடநாடு கொலை வழக்கில் தொடர்புடையதாகக் கருதப்படும் கனகராஜ், அந்த சம்பவம் நடைபெற்ற ஐந்து நாட்களுக்குப் பிறகு சேலம் மாவட்டம் ஆத்தூரில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது கார் மோதி உயிரிழந்தது தொடர்பான விசாரணையை மீண்டும் கையிலெடுத்ததுள்ளது காவல்துறை.
கனகராஜ் உயிரிழப்பு தொடர்பாக அவரது உறவினர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில், சாட்சியங்களைக் கலைத்ததாக கனகராஜின் சகோதரர் தனபால் மற்றும் உறவினர் ரமேஷ் உள்ளிட்ட இருவரைத் தனிப்படை போலீசார் கைது செய்து கூடலூர் சிறையிலடைத்தனர். இந்த வழக்கில் கனகராஜின் சகோதரரை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்கத் தனிப்படை நீதிமன்றத்தில் அனுமதி கேட்டிருந்த நிலையில், கடந்த 28 ஆம் தேதி 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீலகிரி நீதிமன்றம் அனுமதியளித்திருந்தது. அதனைத்தொடர்ந்து மேலும் 5 நாட்கள் கனகராஜின் சகோதரர் தனபாலைக் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ரமேஷுக்கும் விதிக்கப்பட்டிருந்த 5 நாள் போலீஸ் காவல் நிறைவடைந்த நிலையில் கடந்த 2 ஆம் தேதி ரமேஷ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்பொழுது போலீசார் தரப்பில் மேலும் 7 நாட்கள் ரமேஷை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரப்பட்ட நிலையில், நீதிபதி ஸ்ரீதரன் கூடுதலாக 5 நாட்கள் ரமேஷை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதியளித்திருந்தார்.
இந்நிலையில் இருவரிடமும் போலீசார் நடத்திய விசாரணைக்குப் பிறகு இன்று இருவரும் உதகை நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், இருவரையும் வரும் நவ்.8 ஆம் தேதி முதல் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.