ADVERTISEMENT

ஊராட்சி மன்றத் தலைவர் மகனின் கொடூர செயல்! சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ! 

09:42 AM May 11, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மேல்மலை பகுதியில் உள்ளது மன்னமனூர் ஊராட்சி. இங்கு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இவர்கள் அனைவரும் விவசாயத்தையும், விவசாய கூலித் தொழிலையும் மட்டுமே நம்பி வாழ்ந்து வருகின்றனர்.

கொடைக்கானலில் இருந்து சுமார் 45 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மன்னமனூர் ஊராட்சித் தலைவர் மகன் கார்த்தி என்பவருக்கும் முக்கால் பட்டி எனும் பகுதியைச் சேர்ந்தவருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. முன்விரோதம் காரணமாக ஊராட்சித் தலைவரின் மகன் கார்த்தி, அவரது உறவினரின் மகன் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து கூக்கால் பகுதிக்குச் சென்று அந்த பகுதியைச் சேர்ந்த ஒருவரை வழிமறித்து தடுத்து அவரை கயிற்றால் கட்டி கொடூரமாக தாக்கியுள்ளனர்.

இந்தத் தாக்குதலின் போது அப்பகுதியில் உள்ள சில பொதுமக்களும் அங்கிருந்துள்ளனர். அவர்கள் இந்த கொடூரத்தாக்குதலை தடுக்க முயன்ற போது, அந்தக் கும்பல் இவர்கள் மீது கற்களை வீசியுள்ளது. மேலும் இந்தச் சம்பவத்தை செல்போனில் படம் எடுத்தவர்களை ஆபாச வார்த்தைகளால் பேசி தாக்க முயன்றுள்ளனர். அதனால், பொதுமக்கள் யாரும் அருகில் செல்லவில்லை.

இப்படி ஊராட்சி மன்ற தலைவர் மகனும் அவரது நண்பர்களும் காட்டுமிராண்டித்தனமாக அவரைத் தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த நிலையில், காயமடைந்தவர் தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவருகிறார். அதோடு அவரை தாக்கியவர்கள் மீது கொடைக்கானல் போலீஸார் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT