Skip to main content

கொடைக்கானல் ஏரியில் அனுமதியின்றி மீன் பிடித்த விமல் மற்றும் சூரிக்கு அபராதம்!

Published on 23/07/2020 | Edited on 23/07/2020
actor vimal, soori

 

கொடைக்கானலில் உள்ள அடர்ந்த வனப்பகுதியான பேரிஜம் ஏரியில் அனுமதியின்றி நுழைந்து மீன் பிடித்த இரண்டு பிரபல நடிகர்களுக்கு வனத்துறையினர் அபராதம் விதித்துள்ளனர்.

 

உலகம் முழுவதும் கரோனா வைரஸ் அச்சுறுத்தல் உள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள வெளி மாவட்டங்களுக்கு செல்வதற்கு இ-பாஸ் பெற்று செல்ல வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் இதனை மீறி கொடைக்கானல் பகுதிக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் முக்கிய பிரமுகர்கள், அரசியல்வாதிகள், அதிகாரிகள், நடிகர்கள் மற்றும் வியாபாரிகள் எந்தவிதமான கட்டுப்பாடும் இன்றி வந்து செல்வதாக கூறப்படுகிறது.

 

இதன் காரணமாக நகர்ப்பகுதியில் நோய் தொற்று தினசரி அதிகரித்து வருகிறது. இன்று வரை கொடைக்கானல் தாலுகாவில் சுமார் 300 பேர்களுக்கு மேல் நோய் தொற்று உள்ள நிலையில், மேலும் பலருக்கு தொற்று ஏற்படலாம் என கருதப்படுகிறது. இதனிடையே கடந்த 17ஆம் தேதி பிரபல நடிகர்கள் விமல் மற்றும் சூரியுடன் இரண்டு இயக்குனர்களும் கொடைக்கானல் நகருக்கு வந்துள்ளனர். அத்துடன் வனத்துறையிடம் கட்டணம் செலுத்தி அனுமதி பெற்றுச் செல்லும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியான பேரிஜம் ஏரி பகுதிக்கு எந்தவிதமான அனுமதியும் இன்றி சென்று அங்குள்ள ஏரியிலும் மீன்பிடித்து உள்ளனர்.

 

இதுகுறித்து சமூக வலைத்தளங்களில் புகைப்படம் வெளியான உடன் உள்ளூர் மக்கள் மற்றும் சமூக ஆர்வலர் மகேந்திரன் ஆகியோர் காவல்துறையில் புகார் அளித்ததுடன் வனத்துறைக்கும் தகவல் தெரிவித்தனர். இது குறித்து மாவட்ட வன அதிகாரிகளிடம் தேஜஸ்வியிடம் கேட்டபோது கடந்த 17ஆம் தேதி வனத்துறை அதிகாரிகள் ஊரில் இல்லாத நிலையில், சில ஊழியர்கள் உதவியுடன் மற்றும் நடிகர்கள் விமல் மற்றும் சூரி உள்பட பலர் பேரிஜம் ஏரிக்கு அனுமதியின்றி சென்றுள்ளனர். இதுகுறித்து தற்போதுதான் தகவல் வந்துள்ளது.

 

தடை விதிக்கப்பட்ட பகுதிக்கு சென்ற இவர்கள் இருவருக்கும் தலா இரண்டாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இது தொடர்பாக துறை ரீதியான விசாரணை நடைபெற்று வருகிறது. மோயர் பாயிண்ட் என்ற இடத்தில் உள்ள இரும்பு கேட்டை திறந்துதான் வாகனங்கள் செல்ல வேண்டும். அந்த கேட்டை திறந்து விட்டு அவருடன் சென்ற வன ஊழியர்கள் யார் என்பது குறித்து உரிய விசாரணை நடத்தி அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

 

இதுகுறித்து பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகையில், கொடைக்கானல் நகரில் இருந்து சாமானியர் ஒருவர்கூட வெளி மாவட்டங்களுக்கு சென்று வர கடுமையான கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது. ஆனால் வெளியூர்களைச் சேர்ந்த ஏராளமானோர் கொடைக்கானல் பகுதியில் முகாமிட்டு இருப்பது வருத்தத்தை அளிப்பதாக உள்ளது. இதன் காரணமாகவே நோய் தொற்று அதிகரித்து வருவதாகவும், அதிகாரிகள் இடையே ஒற்றுமை இல்லாத காரணத்தால் வெள்ளி நீர்வீழ்ச்சியில் சோதனைச்சாவடி பெயரளவில் மட்டுமே செயல்படுகிறது என்றும்; வசதிபடைத்தவர்கள், அரசியல்வாதிகள் உட்பட பலர் வாகனத்தை நிறுத்தாமல் வந்துவிடுகின்றனர் எனக் கூறினர். மாவட்ட நிர்வாகமும், அரசும் உரிய நடவடிக்கை எடுத்து கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கப் பொதுநல மனு; மனுதாரருக்கு அபராதம் விதித்த நீதிமன்றம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
The court fined the petitioner on PIL to grant bail to Kejriwal

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9 முறை அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பியும், அவர் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். இது தொடர்பாக அவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த மார்ச் மாதம் 21 ஆம் தேதி (21.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாதென உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது. மேலும் முன் ஜாமீன் வழங்கவும் டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்திருந்தது. இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் அன்றைய தினமே (21.03.2024) அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே தன்னுடைய கைது நடவடிக்கையை ‘சட்டவிரோத கைது’ என அறிவிக்கக் கோரியும், ஜாமீன் கோரியும் கெஜ்ரிவால் தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் கெஜ்ரிவால் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து கடந்த 9 ஆம் தேதி (09.04.2024) உத்தரவிட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் தன்னைக் கைது செய்ததை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை நிராகரித்த டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் கடந்த 10 ஆம் தேதி (10.04.2024) மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்திருந்தார். இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதனிடையே, அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த ஜாமீன் மனு டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கக்கோரி சட்டக்கல்லூரி மாணவர் ஒருவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அவர் அளித்த அந்த மனுவில், ‘கெஜ்ரிவாலை அவரது பதவிக்காலம் மற்றும் விசாரணை முடியும் வரை நிலுவையில் உள்ள அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ யால் பதிவு செய்யப்பட அனைத்து குற்ற வழக்குகளிலும் இருந்து இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தது.

இந்த மனு இன்று (22-04-24) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு தற்காலிக தலைமை நீதிபதி மன்மோகன் மற்றும் நீதிபதி மன்மித் பிரீதம் சிங் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, கெஜ்ரிவால் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராகுல் மெஹ்ரா, “இந்தப் பொதுநல வழக்கு முற்றிலும் அனுமதிக்க முடியாதது. மேலும், தவறான வழிகாட்டுதலானது. மனுதாரர், நீதிமன்றத்தை அரசியல் தளமாக்குகிறார். கெஜ்ரிவால் விரும்பினால், ஜாமீன் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வார். அப்படி இருக்கையில், அவருக்காக மனு தாக்கல் செய்ய இவர் யார்?. இது விளம்பர நோக்கம் கொண்ட வழக்கு ஆகும்” என்று வாதிட்டார்.

இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், ‘கெஜ்ரிவாலுக்கு உங்கள் உதவி எதுவும் தேவையில்லை. அவருக்கு உதவ நீங்கள் யார்?.’ என்று தெரிவித்தனர். அப்போது, மனுதாரரின் தரப்பில் ஆஜரான கரண்பால் சிங், “முக்கிய முடிவுகளை எடுக்கும் அதிகாரம் கொண்ட கெஜ்ரிவால் இல்லாததால் கடந்த ஒரு மாதமாக அரசுப் பணிகள் பாதிக்கப்பட்டு, மக்கள் அவதிப்படுகிறார்கள்” என்று வாதிட்டார்.

அனைத்து தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள்,  ‘கெஜ்ரிவால் சார்பாக மனு தாக்கல் செய்ய மனுதாரருக்கு எந்த அதிகாரமும் இல்லை. மனுதாரர் சட்டக்கல்லூரி வகுப்புகளுக்கு செல்கிறாரா?. அவர் சட்டக் கொள்கைகளைப் பின்பற்றவில்லை என்று இதிலிருந்து தெரிகிறது’ எனக் கூறியும் இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல எனக்கூறியும் மனுதாரரின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். மேலும், மனுதாரருக்கு ரூ.75,000 அபராதம் விதித்து உத்தரவிட்டனர்.

Next Story

‘வெள்ளியங்கிரி மலைக்கு செல்வோர் கவனத்திற்கு...’- வனத்துறை வெளியிட்ட முக்கிய தகவல்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Important information for Velliangiri hill travelers

கோவை மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் மட்டுமல்லாது ட்ரக்கிங் ஆர்வம் உள்ளவர்களும் மலையேறி அங்குள்ள சிவன் கோவிலில் வழிபாடு செய்வது வழக்கம். மலையேறும் பக்தர்கள் எண்ணிக்கை அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் மலையேற்ற அனுபவத்தைப் பெறுவதற்காகவும், சிவ லிங்கத்தை தரிசனம் செய்யவும் வெள்ளியங்கிரி மலைக்குச் செல்கின்றனர்.

மொத்தமாக ஏழு மலைத்தொடர்கள் கொண்ட வெள்ளியங்கிரி மலையில் ஏழாவது மலையில் சிவலிங்கம் உள்ளது. அதனைத் தரிசிப்பதற்காகவே பக்தர்கள் கூட்டம் படையெடுக்கிறது. அதுவும் சிவராத்திரி உள்ளிட்ட முக்கிய சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து மலையேறுவர். இத்தகைய சூழலில் சித்ரா பவுர்ணமியையொட்டி ஏராளமான பக்தர்கள் வெள்ளியங்கிரி மலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனையடுத்து வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்களை ட்ரோன் மூலம் கண்காணிக்க வனத்துறை சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது. அதே சமயம் கோடை வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் காட்டுத் தீயை கண்காணிக்கவும் ட்ரோன்களை பயன்படுத்த வனத்துறை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.