/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/654_13.jpg)
கொடைக்கானலில்உள்ள அடர்ந்த வனப்பகுதியான பேரிஜம் ஏரியில் அனுமதியின்றி நுழைந்து மீன் பிடித்த இரண்டு பிரபல நடிகர்களுக்கு வனத்துறையினர் அபராதம் விதித்துள்ளனர்.
உலகம் முழுவதும் கரோனா வைரஸ் அச்சுறுத்தல் உள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள வெளி மாவட்டங்களுக்கு செல்வதற்கு இ-பாஸ் பெற்று செல்ல வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் இதனை மீறி கொடைக்கானல் பகுதிக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் முக்கிய பிரமுகர்கள், அரசியல்வாதிகள், அதிகாரிகள், நடிகர்கள் மற்றும் வியாபாரிகள் எந்தவிதமான கட்டுப்பாடும் இன்றி வந்து செல்வதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக நகர்ப்பகுதியில் நோய் தொற்று தினசரி அதிகரித்து வருகிறது. இன்று வரை கொடைக்கானல் தாலுகாவில் சுமார் 300 பேர்களுக்கு மேல் நோய் தொற்று உள்ள நிலையில், மேலும் பலருக்கு தொற்று ஏற்படலாம் என கருதப்படுகிறது. இதனிடையே கடந்த 17ஆம் தேதி பிரபல நடிகர்கள் விமல் மற்றும் சூரியுடன் இரண்டு இயக்குனர்களும் கொடைக்கானல் நகருக்கு வந்துள்ளனர். அத்துடன் வனத்துறையிடம் கட்டணம் செலுத்தி அனுமதி பெற்றுச் செல்லும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியான பேரிஜம் ஏரி பகுதிக்கு எந்தவிதமான அனுமதியும் இன்றி சென்று அங்குள்ள ஏரியிலும் மீன்பிடித்து உள்ளனர்.
இதுகுறித்து சமூக வலைத்தளங்களில் புகைப்படம் வெளியான உடன் உள்ளூர் மக்கள் மற்றும் சமூக ஆர்வலர் மகேந்திரன் ஆகியோர் காவல்துறையில் புகார் அளித்ததுடன் வனத்துறைக்கும் தகவல் தெரிவித்தனர். இது குறித்து மாவட்ட வன அதிகாரிகளிடம் தேஜஸ்வியிடம் கேட்டபோது கடந்த 17ஆம் தேதி வனத்துறை அதிகாரிகள் ஊரில் இல்லாத நிலையில், சில ஊழியர்கள் உதவியுடன் மற்றும் நடிகர்கள் விமல் மற்றும் சூரி உள்பட பலர் பேரிஜம் ஏரிக்கு அனுமதியின்றி சென்றுள்ளனர். இதுகுறித்து தற்போதுதான் தகவல் வந்துள்ளது.
தடை விதிக்கப்பட்ட பகுதிக்கு சென்ற இவர்கள் இருவருக்கும் தலா இரண்டாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இது தொடர்பாக துறை ரீதியான விசாரணை நடைபெற்று வருகிறது. மோயர் பாயிண்ட் என்ற இடத்தில் உள்ள இரும்பு கேட்டை திறந்துதான் வாகனங்கள் செல்ல வேண்டும். அந்த கேட்டை திறந்து விட்டு அவருடன் சென்ற வன ஊழியர்கள் யார் என்பது குறித்து உரிய விசாரணை நடத்தி அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.
இதுகுறித்து பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகையில்,கொடைக்கானல் நகரில் இருந்து சாமானியர் ஒருவர்கூட வெளி மாவட்டங்களுக்கு சென்று வர கடுமையான கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது. ஆனால் வெளியூர்களைச் சேர்ந்த ஏராளமானோர் கொடைக்கானல் பகுதியில் முகாமிட்டு இருப்பது வருத்தத்தை அளிப்பதாக உள்ளது. இதன் காரணமாகவே நோய் தொற்று அதிகரித்து வருவதாகவும், அதிகாரிகள் இடையே ஒற்றுமை இல்லாத காரணத்தால் வெள்ளி நீர்வீழ்ச்சியில் சோதனைச்சாவடி பெயரளவில் மட்டுமே செயல்படுகிறது என்றும்;வசதிபடைத்தவர்கள், அரசியல்வாதிகள் உட்பட பலர் வாகனத்தை நிறுத்தாமல் வந்துவிடுகின்றனர் எனக் கூறினர். மாவட்ட நிர்வாகமும், அரசும் உரிய நடவடிக்கை எடுத்து கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)