ADVERTISEMENT

கொடைக்கானலில் 50க்கும் மேற்பட்ட கிராம பகுதிகளில்...அரிசி பால் உட்பட அடிப்படை வசதிகள் கிடைக்காமல் மக்கள் அவதி!

03:10 PM Nov 21, 2018 | sakthivel.m

கடந்த சில தினங்களுக்கு முன் வீசிய கஜா புயலால் கொடைக்கானல் மலை சாலையில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால் கனரக வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சொந்தஊர்களுக்கு செல்லக் கூடியவர்களும், சுற்றுலாப் பயணிகளும் அவதிப்பட்டு வருகின்றனர். இது தவிர கொடைக்கானல் மலையில் உள்ள பல பகுதிகளில் ஆயிரக்கணக்கான மரங்கள் சாய்ந்தும், 200க்கும் மேற்பட்ட மின்கம்பங்களும், 6 டிரான்ஸ்பார்ம்களும் இந்த கஜா புயலால் சாய்ந்துள்ளது. இதன் காரணமாக கொடைக்கானல் மற்றும் கீழ் மலை, மேல் மலை பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொடர்ந்து 5வது நாளாக மின்சாரம் இல்லாமல் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

கடந்த 17ம் ஆம் தேதி ஏற்பட்ட இந்த கஜா புலால் சின்னபள்ளம் பகுதியில் மண் சரிவு ஏற்பட்டு சேலத்தை சேர்ந்த நான்கு தொழிலாளர்கள் பலியானார்கள். அதைத் தொடர்ந்து அப்பகுதிகளில் மக்கள் குடியிருக்கவே அஞ்சி வருகிறார்கள். இந்த நிலையில்தான் பெருமாள்மலை, குருசடி பகுதிகளில் நீண்ட மலைச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த பகுதி தான் கொடைக்கானல் நகருக்கு செல்லக்கூடிய பிரதான சாலை. இதில் ஆறு அடி வரை மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் டூவீலர் கூட செல்ல முடியாமல் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். அதோடு மேல்மலையில் உள்ள மன்னவனூர், கிளவரை, கூம்பூர், பூம்பாறை உள்பட்ட பகுதிகளிலிருந்து ஏராளமான காய்கறிகள் ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டிற்கு கொண்டு வரும் வழியில் இந்த கஜா புயலால் சாலைகள் சேதமானதால் காய்கள் ஏற்றி வந்த லாரிகளும் அங்கங்கே நிற்கிறது. இதனால் காய்கறிகளும் அழுகும் சூழ்நிலையில் இருந்து வருவதால் விவசாயிகள் வேதனயடைந்தும் வருகிறார்கள்.

இந்த நிலையில் தொடர்ந்து ஐந்தாவது நாளாக கொடைக்கானல் மற்றும் மேல்மலை, கீழ் மலை பகுதிகளுக்கு போக்குவரத்து அடியோடு தடை செய்யப்பட்டு இருப்பதால் அப்பகுதியில் உள்ள உப்புப்பாறை, பூம்பாறை, பள்ளங்கி, வில்பட்டி, குறிஞ்சி நகர், சர்வே நம்பர், மன்னவனூர், கிளவரை, கூம்பூர் உள்பட 50க்கும் மேற்பட்டகிராமங்களுக்கு அரிசி, பால், பருப்பு, தண்ணீர் உட்பட அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்ல முடியாததால் அப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அப்படியிருந்தும் கூட ஆளுங்கட்சியினர் பாதிக்கப்பட்ட இடங்களில் மக்களை சந்தித்து ஆறுதல் கூற கூட செல்லவில்லை.

ஆனால் தொகுதி எம்.எல்.ஏ.வான பழனி சட்டமன்ற உறுப்பினரும், கிழக்கு மாவட்டச் செயலாளருமான ஐ.பி.செந்தில்குமாரோ கொடைக்கானல் உள்பட மேல்மலை, கீழ் மலை பகுதிகளுக்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி முடிந்த அளவுக்கு அங்கங்கே உள்ள கட்சிக்காரர்களுடன் நிவாரண உதவிகளையும் செய்து கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கும் அப்பகுதியில் உள்ள விளை நிலங்களை பறிகொடுத்த விவசாய மக்களின் காடுகளுக்கு சென்று பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டு ஆறுதல் கூறி அங்கங்கே தங்க வைத்துக் கொண்டும், நிவாரண நிதி கிடைக்கவும் மாவட்ட கலெக்டர் வினயிடம் கோரிக்கை மனுவும் கொடுத்து இருக்கிறார். அதோடு பழனி பகுதிகளில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளுக்கும், விவசாய நிலங்களுக்கும் சென்று அப்பகுதியில் உள்ள மக்களுக்கும், விவசாயிகளுக்கும் ஆறுதல் கூறி வருவதுடன் மட்டுமல்லாமல் பழனி, கொடைக்கானல் பகுதிகளில் தங்கி பாதிக்கப்பட்ட மக்களுக்க தொடர்ந்து ஆறுதல் கூறியும் வருகிறார்.

இதுபற்றி மேல்மலைப் பகுதியில் பேத்துப்பாறையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் மகேந்திரனிடம் கேட்டபோது... இங்குள்ள தாசில்தார் ரமேஷ் மற்றும் போலீஸ்காரர்கள்தான் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு வந்து மக்களுக்கு ஆறுதல் கூறி தங்களால் முடிந்த உதவிகளையும் செய்து வருகிறார்கள். அதோடு எங்க அமைப்புக்கள் மூலமும் அங்கங்கே இந்த மக்களுக்கு உணவுகளும், உடுத்த உடைகளும் கொடுத்து தங்க வைத்துக் கொண்டும் போலீசார் மூலம் அங்கங்கே சாய்ந்து கிடக்கும் மரம், செடிகளை அப்புறப்படுத்தியும் வருகிறோம். அதோடு இப்பகுதியில் விளை நிலங்களில் விவசாயிகள் போடப்பட்டிருந்த பீன்ஸ், அவரை உட்பட சில பயிர்களும் இந்த புயலால் அடித்து செல்லப்பட்டது. அதையும் கூட அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை இப்பகுதியில் 23 வீடுகளுக்கு மேல் சேதமடைந்து மக்கள் இந்த கடும் குளிரிலும் கூட தங்க இடமில்லாமல் அவதிப்பட்டு வருகிறார்கள். அப்படியிருந்தும் கூட எதிர்க்கட்சி தி.மு.க. உள்பட அனைத்து கட்சியினரும் இப்பகுதிகளுக்கு வந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி முடிந்த அளவுக்கு நிவாரண உதவிகளையும் வழங்கி வருகிறார்கள்.

ஆனால் ஆளுங்கட்சியினர் இந்த புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறவோ, நிவாரண உதவிகள் வழங்கவோ வரவில்லை என்பதுதான் வருத்தமாக இருக்கிறது என்று கூறினார். இப்படி தொடர்ந்து ஐந்தாவது நாளாக கஜா புயலால் பாதிக்கப்பட்ட கொடைக்கானல் மக்கள் உட்பட மேல்மலை, கீழ்மலை பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள் இனிமேலாவது இந்த அரசு அதிரடி நடவடிக்கை எடுத்து அப்பகுதியில் உள்ள மக்களுக்கு அடிப்படை வசதிகளையும், உடனடியாக உணவுப்பொருள் கிடைக்கவும் முன்வருமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT