Skip to main content

கொடநாடு வழக்கில் தொடர்புடைய கனகராஜின் அண்ணன் நில மோசடி வழக்கில் கைது!

Published on 31/07/2023 | Edited on 31/07/2023

 

Koda Nadu case Kanagaraj's brother arrested in land fraud case!

 

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முக்கியக் குற்றவாளியான கனகராஜின் அண்ணன் தனபாலை, நில மோசடி வழக்கில் காவல்துறையினர் கைது செய்தனர்.

 

சேலம் மாவட்டம், மேச்சேரியைச் சேர்ந்தவர் வாசுதேவன். மின்வாரியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு மேச்சேரியில் 4.07 ஏக்கர் நிலம் உள்ளது. சொந்தத் தேவைக்காகத் தனது நிலத்தின் பேரில் கடன் பெற விரும்பினார். இதையடுத்து அவர், இடைப்பாடி அருகே உள்ள பணிக்கனூரைச் சேர்ந்த தனபால் என்பவரை அணுகினார். இவர் உள்பட 14 பேர் வாசுதேவனுக்கு கடன் பெறும் பணிகளைச் செய்து வந்துள்ளனர். 

 

இந்நிலையில், கடந்த 2020ம் ஆண்டு, வாசுதேவனின் நிலத்தை எழுதி வாங்கிக் கொண்ட அந்த கும்பல், ஒரு கோடி ரூபாய் கடன் தருவதாகக் கூறி, முதல்கட்டமாக 21.76 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளனர். மீதம் 78.24 லட்சம் ரூபாய் தராமல் இழுத்தடித்து வந்துள்ளனர். ஒருகட்டத்தில் பொறுமை இழந்த வாசுதேவன், தான் வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுத்து விடுவதாகவும், தன்னுடைய நிலத்தைத் திரும்ப ஒப்படைக்கும்படியும் கேட்டு வந்தார். ஆனால் தனபால் தரப்பினர், 1.50 கோடி ரூபாய் கொடுத்தால்தான் நிலத்தைத் திருப்பித் தருவோம் எனக் கூறியுள்ளனர். இதையடுத்து வாசுதேவன் மேச்சேரி காவல்நிலையத்தில் தனபால் உள்ளிட்டோர் மீது புகார் அளித்தார். 

 

அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சேலம் கன்னங்குறிச்சியைச் சேர்ந்த சசிகுமார், பொட்டனேரியைச் சேர்ந்த சேகர், எம்.காளிப்பட்டியைச் சேர்ந்த ரவி, ரவிக்குமார் ஆகியோரைக் கைது செய்தனர். வாசுதேவனிடம் நிலத்தின் பேரில் கடன் பெற்றுத்தருவதில் கமிஷன் ஏஜெண்டாக செயல்பட்டு வந்த தனபாலைக் காவல்துறையினர் ஜூலை 29 ஆம் தேதி கைது செய்தனர். 

 

விசாரணையில் தனபால் பற்றிய முக்கியத் தகவலும் காவல்துறைக்குக் கிடைத்துள்ளது. ஜெயலலிதாவிடம் கார் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தவர் கனகராஜ். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை சம்பவத்தில் கனகராஜ் முக்கியக் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டு இருந்தார். அவரைக் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வந்த நிலையில், ஆத்தூர் அருகே மர்மமான முறையில் கடந்த 2017 ஆம் ஆண்டு இறந்தார். தற்போது கைது செய்யப்பட்டுள்ள தனபால், மர்மமான முறையில் இறந்த கனகராஜின் அண்ணன் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

கனகராஜ் இறப்பு தொடர்பான முக்கியத் தடயங்களை அழித்து விட்டதாகக் கடந்த ஓராண்டுக்கு முன்பு தனபால் கைது செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்