ADVERTISEMENT

கற்றுக் கொண்ட பாடத்தின் மூலம் உடனடியாக செய்ய வேண்டியவை.... - கொ.ம.தே.க.ஈஸ்வரன்

03:21 PM Oct 29, 2019 | Anonymous (not verified)

"குழந்தை சுஜித்தின் ஆழ்துளை கிணறு மரணம் இயற்கை மரணம் அல்ல. நம் கவனக்குறைவை திருத்திக்கொள்ள கற்றுக் கொடுத்திருக்கின்ற பாடம்." என கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ER ஈஸ்வரன் கூறினார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT


மேலும் அவர் விடுத்துள்ள விரிவான அறிக்கையில், "ஆழ்துளை கிணற்றில் விழுந்த சுஜித்தின் மரணம் இயற்கை மரணம் அல்ல. எல்லா விஷயங்களிலும் கவனக்குறைவாக இருக்கின்ற தமிழனால் ஏற்பட்ட செயற்கை மரணம். கொலை என்று கூட கூறலாம். இந்த நிகழ்வு கற்றுக் கொடுத்திருக்கின்ற பாடத்தை பயின்று இனிவொரு மரணம் இப்படி நிகழாமல் இருக்க நடவடிக்கைகளை மேற்கொள்வதுதான் மனப்பூர்வமான கண்ணீர் அஞ்சலியாக இருக்கும். கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கண்ணீர் அஞ்சலியை இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறோம்.

கற்றுக்கொண்ட பாடத்தின் மூலம் உடனடியாக செய்ய வேண்டிய காரியங்கள் :

1. அனைத்து ஆழ்துளை கிணறுகளும் பாதுகாப்பான மழைநீர் சேகரிப்பு மையங்களாக மாற்றப்பட வேண்டும். அதற்கான வரைமுறைகளை தாமதம் இல்லாமல் தமிழக அரசு வகுக்க வேண்டும்.

2. அனைத்து மாவட்ட நிர்வாகங்களும் ஆழ்துளை கிணறு இருப்பிடங்களை கணக்கெடுக்க வேண்டும்.

3. குழந்தை சுஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்த பின்னால் யார் யாரிடத்தில் என்ன தொழில் நுட்பம் இருக்கிறது கொண்டு வாருங்கள் என்று அரசாங்கம் அறைக்கூவல் விடுத்ததை இன்று செயல்படுத்த வேண்டும். ஒவ்வொருவருடைய தொழில் நுட்பத்தையும் பேரிடர் மீட்பு குழு ஆராய்ந்து தேர்ந்தெடுத்து அந்த தொழில் நுட்பத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை செய்ய வேண்டும். பரிசோதனை அடிப்படையில் பயன்படாத ஆழ்துளை கிணற்றில் குழந்தை பொம்மைகளை வைத்து மீட்டெடுத்து பார்க்க வேண்டும்.

4. இந்தியாவின் மாநிலங்களில் மட்டுமல்லாமல் சீனா உள்ளிட்ட பக்கத்து நாடுகளிலும் என்ன தொழில் நுட்பம் பயன்படுத்தப்படுகிறது என்பதை தெரிந்து வைத்து வேண்டுமென்றால் அழைத்து வர முன்னேற்பாட்டுடன் இருக்க வேண்டும்.

5. எந்தெந்த வழிமுறைகளை எப்படி கையாள வேண்டுமென்பதை அரசு பட்டியலிட்டு பாதுகாப்பான வழிமுறைகளை முறைப்படுத்த வேண்டும். குறிப்பாக பேரிடர் மீட்பு வீரர்களை ஹெலிகாப்டர் மூலமாகவோ, விமானம் மூலமாகவோ உடனடியாக பாதிக்கப்பட்ட இடத்திற்கு வரவழைக்க தகுந்த அரசாணை பிறப்பிக்கப்பட வேண்டும்.

6. முறைப்படுத்தப்பட்ட எல்லா விதமான முயற்சிகளையும் மேற்கொள்ள அனைவரும் முன்னேற்பாடாக பாதிக்கப்பட்ட இடத்திற்கு வரவழைக்கப்பட வேண்டும். ஒரு முயற்சி பலனளிக்காமல் போன பின்னால் அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்து அடுத்தகட்ட முயற்சிக்கு ஆட்களை அழைக்க கூடாது. அனைத்து தொழில் நுட்பத்திலும் திறமை வாய்ந்தவர்களை முதல் மணி துளியிலேயே பாதிக்கப்பட்ட இடத்திற்கு அழைத்து நிறுத்திக்கொள்ள வேண்டும். இந்த திட்டமிடல் மிகமிக அவசியம்.


அடுத்த ஒரு மரணம் இதை போல நடக்காமல் இருப்பதற்கு உறுதி எடுத்துக்கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இறங்குவதுதான் தேசம் செலுத்துகின்ற கண்ணீர் அஞ்சலி. தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்ட அனைத்து துறையினருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்." என கூறியிருக்கிறார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT