Skip to main content

மெட்ரோ பயணிகளைத் தொடரும் டீமானிடைசேஷன் எஃபக்ட்!

Published on 30/06/2018 | Edited on 30/06/2018

உதவி செய்யலைனாலும் பரவாயில்ல… உபத்திரவம் பண்ணாம இருக்கணும் என்பார்கள். பயணிகள் மெட்ரோ ரயிலுக்கு வரிசையில் நின்று அவதிப்படக்கூடாது என்ற நோக்கில், ரீசார்ஜ் செய்து ஸ்மார்ட் டிக்கெட் பெறக்கூடிய வகையிலான க்யாஸ்க்குகளை (kiosk) நிறுவியது சென்னை மெட்ரோ. அதன் செயல்பாடுதான் மேற்சொன்ன வகையில் அமைந்திருக்கிறது.
 

kiosk

 

 

 

இந்த க்யாஸ்க்குகள் 10 ரூபாய் முதல் 500 ரூபாய் வரையிலான நோட்டுகளை ஏற்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த எந்திரங்கள் பணமதிப்பிழப்புக்கு முன்பே நிறுவப்பட்டதால் புதிய 10, 50, 200, மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை ஏற்பதில்லை. ஆனால், டீமானிடைசேஷனுக்குப் பிறகு 10, 50, 200 ரூபாய் புதிய கரன்ஸிகளே அதிகளவில் புழங்குகின்றன. இதனால் இந்த எந்திரங்கள் உபயோகமில்லாமல்தான் உள்ளன. மாறாக, காசுகொடுத்து டிக்கெட் வாங்குமிடத்தில் நீண்ட வரிசை சேர்ந்துவிடுகிறது.
 

பல மெட்ரோ ரயில்நிலையங்களில் ஒரேயொருவர் மட்டுமே டிக்கெட் வழங்குவதால் பயணிகள் அதிருப்தியால் முணுமுணுக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
 

 

 

விரைவில், புதிய கரன்ஸிகளை ஏற்கும்விதத்தில் இந்த க்யாஸ்க்குகள் மாற்றப்படும் என சென்னை மெட்ரோ ரயில்வே லிமிடெட் அதிகாரிகள் கூறுகின்றனர். ‘பணமதிப்பிழப்பு நடந்து எவ்வளவு நாளாச்சு… நீங்க இனிமே தான் மாத்தப்போறீங்களாக்கும்… என்ன சுறுசுறுப்பு’ என கடுப்பும் ஏளனமும் இழையோடக் கேட்கின்றனர் அன்றாடம் மெட்ரோ ரயிலில் பயணிப்பவர்கள்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

‘பெண்களுக்கு பாதுகாப்பான பயணம்’ - மெட்ரோ ரயில் நிறுவனம் புதிய முன்னெடுப்பு

Published on 15/02/2024 | Edited on 15/02/2024
Safe Travel for Women Metro Rail's New Initiative

சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பெண்களுக்கு பாதுகாப்பான பயண அனுபவத்தை வழங்குவதற்காக மெட்ரோ ரயில் நிறுவனம் கூடுதல் நடவடிக்கையாக அதன் பாதுகாப்பில் தற்காப்புக் கலைகளில் பயிற்சி பெற்ற பெண் பாதுகாப்புப் பணியாளர்களை உள்ளடக்கிய ‘பிங்க் ஸ்குவாட்’ ஐ (Pink Squad) இன்று (15.02.2024) அறிமுகப்படுத்தியுள்ளது. மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சித்திக் முன்னிலையில் மெட்ரோ ரயில் நிறுவனத்தின் பாதுகாப்புக் குழுவில் பிங்க் ஸ்குவாட் பாதுகாப்பு சேவை உறுப்பினர்கள் இணைக்கப்பட்டனர். இந்நிகழ்ச்சியில் மெட்ரோ ரயில் நிறுவனத்தின் திட்டங்கள் துறை இயக்குநர் அர்ச்சுனன் முதன்மை பாதுகாப்பு அதிகாரி ஜெயலக்ஷ்மி, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.

இது குறித்து மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் அ.சித்திக் கூறுகையில், “சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஏற்கனவே மெட்ரோ ரயில்கள் மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்களில் முழு சிசிடிவி கேமரா கண்காணிப்பு அமைப்புகளை வழங்கி வருகிறது. இருப்பினும், மெட்ரோ ரயில்களில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், சிசிடிவி கேமரா கண்காணிப்பு வழங்குவதைத் தவிர, ஈவ் டீசிங் மற்றும் பெண்களுக்கு எதிரான பிற குற்றங்களைத் தடுக்க அதிக கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும், பெண் பயணிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு சேவையை வழங்குவதற்காகவும் பிங்க் ஸ்குவாட் அணியை நியமித்துள்ளது.

பிங்க் ஸ்குவாட் உறுப்பினர்கள் தற்காப்புக் கலைகள் மற்றும் தற்காப்பு நுட்பங்களில் நன்கு பயிற்சி பெற்றதுடன் வாடிக்கையாளர் சேவை மற்றும் தகவல் தொடர்பு திறன் ஆகியவற்றிலும் பயிற்சி பெற்றுள்ளனர். முதல் கட்டமாக இந்த குழுவில் 23 பெண்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பயணிகள் அதிகமாக பயணிக்கும் மெட்ரோ ரயில் நிலையங்களான சென்ட்ரல் மெட்ரோ, ஆலந்தூர் மெட்ரோ மற்றும் விமான நிலையம் போன்ற மெட்ரோ ரயில் நிலையங்களில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மெட்ரோ ரயில் நிறுவனம் பொதுவாக அனைத்து பயணிகளுக்கும் குறிப்பாக பெண்கள் மற்றும் சிறப்புத் தேவைகள் உள்ள நபர்களுக்கும் பாதுகாப்பான பயணம் மற்றும் பாதுகாப்பான சூழலை வழங்குவதற்கான தனது உறுதிப்பாட்டை தொடர்ந்து செய்து வருகிறது” எனத் தெரிவித்தார். 
 

Next Story

மெட்ரோ ரயில் பணிகள்; சென்னையில் போக்குவரத்து மாற்றம்

Published on 28/01/2024 | Edited on 28/01/2024
Metro Rail Works Traffic change in Chennai

சென்னையில் மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக ஆயிரம் விளக்கு பகுதியில் ஒயிட்ஸ் சாலையில் ஒரு வாரத்திற்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “சென்னை ஒயிட்ஸ் சாலையில் உள்ள ஆயிரம் விளக்கு பகுதிகளில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தினரால் மேற்கொள்ளப்படும் கட்டுமானப் பணிகளைக் கருத்தில் கொண்டு, போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினரால் இன்று (28.01.2024) முதல் ஒரு வார காலத்திற்கு போக்குவரத்து மாற்றங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி பட்டுலாஸ் சாலை ஒயிட்ஸ் சாலை சந்திப்பிலிருந்து ஒயிட்ஸ் சாலை x திரு.வி.க. சந்திப்பு வரை வாகனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது.

ராயப்பேட்டை மணிக்கூண்டில் இருந்து அண்ணாசாலை நோக்கி ஒயிட்ஸ் சாலையில் வரும் வாகனங்கள் பட்டுலாஸ் சாலை ஒயிட்ஸ் சாலை சந்திப்பில் திரும்பி தங்களது இலக்கை அடையலாம். அண்ணாசாலையிலிருந்து ஸ்மித் சாலையில் வரும் வாகனங்கள் ஸ்மித் ரோடு x ஒயிட்ஸ் சாலை சந்திப்பில் வலதுபுறம் திரும்ப தடை விதிக்கப்பட்டுள்ளது. அண்ணாசாலையில் இருந்து வரும் வாகனங்கள் ஒயிட்ஸ் சாலை X திரு.வி.க. சந்திப்பில் இருந்து பட்டுலாஸ் சாலை ஒயிட்ஸ் சாலை சந்திப்பு வரை வழக்கம் போல் இயக்கப்பட்டு ராயப்பேட்டை மணிக்கூண்டிற்கு சென்றடையும். எனவே வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.