publive-image

Advertisment

தற்கால தமிழ் சினிமாவில் ஏ.ஆர்.ரஹ்மான், யுவன், அனிருத், ஜி.வி.பிரகாஷ், சந்தோஷ் நாராயணன், இமான், சாம் சிஎஸ் என எத்தனை பேர் கோலோச்சினாலும் இதற்கு முன் கோலோச்சி இருந்தாலும் வலி கொண்ட மனதை ஆற்றுப்படுத்த மக்கள் எப்போதும் தேடும் குரல் இளையராஜாவினுடையதே. இசையில் புதுவித தொழில்நுட்பங்கள் எத்தனை வந்தாலும் தற்போதைய தமிழ்சினிமா பாடல்களில் பெரும்பாலும் இளையராஜா இசையின் ஹைப்ரிட்கள் அதிகம் கலந்திருக்கும். அதை பல இசையமைப்பாளர்கள் பெருமையாக ஒப்புக்கொண்ட சம்பவங்களும் உள்ளது. அத்தனை தமிழர்களையும் இசையால் கட்டிப்போட்ட பெரும் கலைஞன் இளையராஜாவின் 80-வது பிறந்த நாள் இன்று.

அவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும், திரைப்பிரபலங்கள் வாழ்த்து கூறி வருகின்றனர். இந்நிலையில் முதலமைச்சர், மு.க.ஸ்டாலின் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள இளையராஜாவின் அலுவலகத்திற்கு நேரில் சென்று பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இளையராஜாவின் பிறந்தநாள் குறித்து ட்விட்டரிலும் அவர் பதிவிட்டுள்ளார்.

அதில், “காலைப் பொழுது இனிதாய் மலர - பயணங்கள் இதமாய் அமைய - மகிழ்ச்சிகள் கொண்டாட்டமாய் மாற - துன்பங்கள் தூசியாய் மறைய - இரவு இனிமையாய்ச் சாய தமிழ்நாட்டின் தேர்வு 'இசைஞானி' இளையராஜா! அவர் இசைக்கருவிகளை மீட்டுவதில்லை; நம் இதயங்களை வருடுகிறார். அவரே உணர்வாகி நம்முள் உருகுகிறார். தமிழ்த்திரையுலகில் மட்டுமல்ல இசை உலகுக்கே அவர் ஒரு புரட்சி!

Advertisment

அதனால்தான், அவரது இசையின் நுட்பத்தை ஆழ்ந்து இரசித்து, அவரை 'இசைஞானி' எனப் போற்றினார் முத்தமிழ் கலைஞர். இசை கொண்டு அவர் நிகழ்த்தும் மாய வித்தையில் மனம் மயங்கிச் சொக்கிக் கிடக்கும் இரசிகனாக - உங்களில் ஒருவனாக அந்த மாபெரும் கலைஞனுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகளைக் கூறி மகிழ்ந்தேன். எங்கள் இதயங்களில் கோட்டை கட்டிக் கொடி நாட்டியிருக்கும் நீங்கள் எப்போதும் இராஜாதான்! வாழ்க நூறாண்டுகள் கடந்து!” எனக் கூறியுள்ளார்.