Skip to main content

கீழ்பவானி கால்வாய் கான்கிரீட் விவகாரம்; ஆய்வுக்கு சென்ற முன்னாள் அமைச்சர்

Published on 13/06/2023 | Edited on 13/06/2023

 

Kilpawani Canal concrete issue; Ex-minister who went for inspection

 

ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் இருந்து வரும் நீர், பவானிசாகர் அணையில் இருந்து பிரதான வாய்க்காலான கீழ்பவானி வாய்க்காலில் பாய்ந்து வருகிறது. பல லட்சம் ஏக்கர் விவசாய நிலத்திற்கு பயன்படும் இந்த நீர் கடைக்கோடி வரை செல்ல வேண்டும். இதற்கான வாய்க்கால் அமைத்து பல ஆண்டுகள் ஆனதால் அதை மறுசீரமைப்பு செய்ய வேண்டுமென கோரிக்கை எழுந்தது. இதனைத் தொடர்ந்து இதற்கென திட்டப்பணிகள் தயார் செய்யப்பட்டு, வாய்க்காலில் இருபுறக் கரைகளில் கான்கிரீட் சுவர் அமைக்க அரசு முடிவு செய்து பணிகள் தொடங்கப்பட்டன.

 

இந்த நிலையில் கான்கிரீட் சுவர் அமைக்கக்கூடாது என ஒரு தரப்பு விவசாயிகளும் கான்கிரீட் சுவர் அமைக்க வேண்டும் என மற்றொரு தரப்பு விவசாயிகளும் கூறினர். தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டத்தில் விவசாயிகள் இறங்கினர். விவகாரம் நீதிமன்றத்துக்கு செல்ல, நீதிமன்றம் கான்கிரீட் சுவர் அமைக்க அனுமதி கொடுத்தது. அதை எதிர்த்து ஒரு தரப்பு விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினார்கள். கான்கிரீட் சுவர் அமைத்தால் தான் கடைக்கோடியில் உள்ள விவசாயிகளுக்கும், விவசாயத்திற்கும் தண்ணீர் கிடைக்கும் என மற்றொரு தரப்பு விவசாயிகள் தெரிவித்து வருகின்றனர்.

 

இந்நிலையில் திமுகவின் முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ மொடக்குறிச்சி பழனிச்சாமி உள்ளிட்ட சில நிர்வாகிகள் கான்கிரீட் தளம் அமைக்கும் அந்த வாய்க்கால்களை பார்வையிட அரச்சலூர் பகுதிக்கு இன்று சென்றனர். அப்போது கான்கிரீட் சுவர் அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கும் விவசாயிகள் சிலர் அவர்களை முற்றுகையிட்டு, "எதற்காக கான்கிரீட் சுவர் அமைக்கும் பணிக்கு ஆதரவு கொடுக்கிறீர்கள். நிலத்தடி நீர் இல்லாமல் எங்கள் கிணறுகள் வறண்டு போய்விடும். நீங்கள் எப்படி ஆதரவு கொடுக்கலாம்” என கேள்விகள் கேட்டனர்.

 

அதற்கு முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி பொறுமையாக பதில் கொடுத்தாலும் அவர்கள் திருப்தி அடையவில்லை. சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பிறகு விவசாயிகளில் சிலர் நேரில் அங்கு சென்று அங்கு போராட்டம் நடத்தியவர்களை கலைந்து போகச் செய்து முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி மற்றும் பழனிச்சாமி ஆகியோரை பத்திரமாக அழைத்து வந்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

 


 

சார்ந்த செய்திகள்